

பழநி: பழநி முருகன் கோயில் கும்பாபிஷேகத்தை காண 6,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அதில் 3,000 பேர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர் என கோயில் இணை ஆணையர் நடராஜன் தெரிவித்தார்.
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கும்பாபிஷேகம் மற்றும் தைப்பூசத் திருவிழா அனைத்துத் துறை அலுவர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ச.விசாகன் தலைமை வகித்தார். எஸ்பி வீ.பாஸ்கரன், டிஆர்ஓ லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கோயில் இணை ஆணையர் நடராஜன் கூறியதாவது: பழநி முருகன் கோயில் கும்பாபிஷேகம் ஜன.27-ம் தேதி நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை காண 6,000 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவர். அதில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் 3,000 பக்தர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அனுமதி சீட்டு வழங்கப்படும். அனுமதி உள்ளவர்கள் மட்டும் கும்பாபிஷேகத்தன்று அதிகாலை 4 முதல் 7.15 மணி வரை மலைக்கோயிலுக்கு செல்லலாம்.
கும்பாபிஷேகம் முடிந்து மலைக்கோயிலுக்கு அனுமதிக்கப்பட்ட பக்தர்கள் தரிசனம் முடிந்து கீழே இறங்கியதும் வழக்கம் போல் அனைத்து பக்தர்களும் அனுமதிக்கப்படுவர். ஜன.23 முதல் ஜன.27-ம் தேதி வரை குடமுழுக்கு மண்டபத்தில் நாள் முழுவதும் அன்னதான திட்டத்தில் அன்னதானம் நடைபெறும்.
கும்பாபிஷேகத்தை பக்தர்கள் காண வசதியாக மலைக்கோயில் முதல் பேருந்து நிலையம் வரை பெரிய எல்இடி திரைகள் அமைக்கப்பட்டு நேரடி ஒளிபரப்பு செய்யப்டும். தற்காலிகமாக 4 இடங்களில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படும். 8 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள், காவல்துறை உதவி மையம் அமைக்கப்படும் என்று கூறினார்.
மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்ல வசதியாக பேருந்து நிலையம் முதல் மலைக்கோயில் வரை போக்குவரத்துக் கழகம் மூலம் மினி பேருந்துகளை இயக்கலாம்.
ஏற்கெனவே அனுமதியளிக்கப்பட்டு அரசு சார்பில் இலவச நிலம் வழங்கப்பட்ட 10 இடங்களில் நிரந்தர கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும். ஜெனரேட்டர் வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அனைத்துத் துறை அலுவலர்களும் இணைந்து செயல்பட வேண்டும், என்றார். இதையடுத்து, பழநி பேருந்து நிலையத்தை ஆட்சியர், எஸ்பி, டிஆர்ஓ உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.