ஆல் இலையில் துயில் கொள்பவனே!: தித்திக்கும் திருப்பாவை - 26

ஆல் இலையில் துயில் கொள்பவனே!: தித்திக்கும் திருப்பாவை - 26
Updated on
1 min read

ஆல் இலையில் துயில் கொள்பவனே!

மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்

மேலையார் செய்வனகள் வேண்டுவன, கேட்டியேல்

ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன

பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே

போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே

சாலப் பெரும் பறையே, பல்லாண்டு இசைப்பாரே

கோல விளக்கே, கொடியே, விதானமே

ஆலின் இலையாய்! அருள் ஏலோர் எம்பாவாய்!

விளக்கவுரை:

அன்பின் வடிவமே! நீல மணி ரத்தினமே!

முன்னோரால் காலங்காலமாக மேற்கொள்ளப்பட்ட

மார்கழி நோன்பு நீராடலுக்கு பொருட்கள் வேண்டி வந்தோம்!

நீ காதுகொடுத்துக் கேள்.. அவற்றைச் சொல்கிறோம்.

பூமி எல்லாம் நடுங்க ஒலிக்கும் பாலின் வெண்மையுடைய பாஞ்சசன்னியம் போன்ற சங்குகளும்,

பெரிய உருவமுடைய பேரோசை எழுப்பும் மிகப் பெரும் பறை வாத்தியங்களும்,

பல்லாண்டு பாடி இசைப்பவர்களும், அழகிய மங்களத் தீபங்களும்,

கொடிகளும், மேல் கூரைச் சீலைகள் ஆகியவற்றை..

ஆலிலைக் கண்ணா! எங்களுக்குத் தந்தருள வேண்டும்.

(மார்கழி நீராட, தேவையான பொருட்களை அளிப்பாயாக!)

இதையும் அறிவோம்: அழுத்தம் திருத்தமாக கருத்தைக் கூறுவதில் ஆண்டாளுக்கு நிகர் யாருமில்லை. இதற்கு ஆண்டாள், ஏகாரத்தைத் திருப்பாவையில் பல இடங்களில் கையாண்டிருக்கிறாள். முதல் பாசுரத்தில் ‘நாராயணனே’, ‘நமக்கே’ என்று ஏகாரத்தை ஆரம்பித்து திருப்பாவை முழுவதிலும் பல இடங்களில் தூவி சொல்கிறாள். இந்தப் பாசுரத்தில் எவ்வளவு ஏகாரம் இருக்கிறது என்று கண்டுபிடித்து, திருப்பாவை முழுவதிலும் எவ்வளவு ஏகாரங்கள் இருக்கிறது என்பதை வீட்டுப் பாடமாக வைத்துக் கொள்ள வேண்டும். திருக்குடந்தை ஆண்டவன் ஆண்டாளை செல்லமாக ‘ஏகாரச் சீமாட்டி’ என்று அழைப்பார்!

- சுஜாதா தேசிகன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in