கோவர்த்தன கிரிதாரனைப் போற்றுவோம்: தித்திக்கும் திருப்பாவை - 24
கோவர்த்தன கிரிதாரனைப் போற்றுவோம்
அன்று இவ் உலகம் அளந்தாய்! அடி போற்றி!
சென்று அங்குத் தென் இலங்கை செற்றாய்! திறல் போற்றி!
பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ் போற்றி!
கன்று குணிலா எறிந்தாய்! கழல் போற்றி!
குன்று குடையாய் எடுத்தாய்! குணம் போற்றி!
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி!
என்று என்று உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கு ஏலோர் எம்பாவாய்!
விளக்கவுரை:
அன்று வாமனனாக ஈரடிகளால் உலகை அளந்த அப்பிஞ்சு
திருவடிகளுக்குப் பல்லாண்டு!
ராமனாக அழகிய இலங்கைக்குச் சென்று ராவணனை
வீழ்த்திய உன் தோள் வலிமைக்குப் பல்லாண்டு!
கண்ணனாக, சக்கர உருவில் வந்த சகடாசுரனை
கட்டுக் குலைய உதைத்த உன் புகழுக்குப் பல்லாண்டு!
கன்று உருவில் வந்த வத்சாசுரனை எறி தடியாக்கி,
விளாமரமாக நின்ற கபித்தாசுரன் மீது எறிந்த சமயம்
மடக்கி நின்ற கழலுடைய திருவடிகளுக்குப் பல்லாண்டு!
கோவர்த்தன மலையைக் குடையாக்கி கோகுலத்தைக்
காத்த உன் கருணை குணத்துக்குப் பல்லாண்டு!
பகைவரை வென்று, பகைமையை வேரோடு களையும்
உன் திருக்கையில் ஏந்திய வேலுக்குப் பல்லாண்டு!
என்று இப்படிப் பல தடவை பல்லாண்டு பாடி, உன்
வீரச் செயலையே புகழ்ந்து உன்னை அனுபவிக்க
இன்று வந்துள்ளோம், தயை புரிய வேண்டும்.
(உனக்கே மங்களம் உண்டாகுக!)
இதையும் அறிவோம்:
ஸ்ரீவடபத்ர சயனர் கோயில் கருவறை கல்வெட்டு ஒன்று மிகப் பழமையானது. இதைக் கொண்டு ஆண்டாளின் கோயில் கி.பி. 739-ல் கட்டப்பட்டிருக்கலாம் என்று தெரியவருகிறது. இந்த கோயிலின் முதல் அறங்காவலர் வேறு யாரும் இல்லை... ஸ்ரீ பெரியாழ்வார் தான்!
- சுஜாதா தேசிகன்
