கண்ணனே எங்களுக்கு பேரின்பம்: தித்திக்கும் திருப்பாவை - 23

கண்ணனே எங்களுக்கு பேரின்பம்: தித்திக்கும் திருப்பாவை - 23
Updated on
1 min read

கண்ணனே எங்களுக்கு பேரின்பம்

மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்

சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து

வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி

மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்

போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்

கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்பு உடைய

சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த

காரியம் ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய்!

விளக்கவுரை:

மழைக் காலத்தில் மலைக் குகையில் பெண்சிங்கத்துடன் ஒன்றி

ஒரு சிங்கம் போல ஒட்டி உறங்கிக் கிடக்கும்

வீரியச் சிறப்புடைய மிடுக்கான சிங்கம்,

தூக்கம் கலைந்து, உணர்வுபெற்று,

தீப்பொறி சிதறக் கண்களை விழித்து,

பிடரி மயிர் சிலும்ப, இப்படியும் அப்படியும் நடந்து,

உடலை உதறி, சோம்பல் முறித்து, நிமிர்ந்து,

கர்ஜித்து, குகையிலிருந்து புறப்படுவது போல்,

நீல காயாம்பூ நிறத்தவனே! நீ உன் கோயிலிலிருந்து

நாங்கள் இருக்கும் இடம் வந்து, அழகிய சீர்மையான

சிம்மாசனத்தில் அமர்ந்து, புகலற்ற நாங்கள் வந்த

காரியத்தைப் பரிசீலித்து அருள வேண்டும்!

(எங்கள் குறைகளைக் கேட்டு, அருள் புரிவாயாக)

இதையும் அறிவோம்:

1978-ல் ஒரு நாள் மாலை, ஸ்ரீவில்லிபுத்தூர் அரையர் வாசல் திண்ணையில் அமர்ந்து இருந்தபோது, ஒரு ஜோசியர் அந்த பக்கமாகச் செல்ல, அவரிடம் “இமயமலையில் பத்ரி பெருமாளைச் சேவிக்க வேண்டும்” என்று சொல்ல, ஜோசியர் “இப்போதே கிளம்புங்கள்” என்றார். அரையர் உடனே கிளம்பிவிட்டார்! சென்னையிலிருந்து ஆந்திரா வழியாக இமய மலையில் உள்ள பத்ரிக்குச் சென்று, காலை 3.30 மணிக்கு எல்லோரும் குளிரில் நடுங்கிக் கொண்டு இருக்க, பத்ரி நாராயணன் முன் அரையர் சேவையை நிகழ்த்தினார்.

- சுஜாதா தேசிகன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in