கும்பகோணத்தில் ஆருத்ரா தரிசனம் | தமிழகத்திலேயே முதன்முறையாக 12 சிவாலய நடராஜர் சுவாமிகள் சந்திப்பு உற்சவம்

12 சிவாலய நடராஜர் சுவாமிகள் சந்திப்பு உற்சவம்
12 சிவாலய நடராஜர் சுவாமிகள் சந்திப்பு உற்சவம்
Updated on
1 min read

கும்பகோணம்: ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு தமிழகத்திலேயே முதன் முறையாக கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் கீழவீதியில் 12 சிவாலய நடராஜர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

ஆண்டுதோறும் மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தன்று சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது. இதையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் கீழவீதியில் 11 கோயில்களின் நடராஜரும், ஏகாம்பரேஸ்வரர் கோயில் காளியும் ஒரே இடத்தில் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில், நிகழாண்டு கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் நேற்று முன் தினம் இரவு 9 மணிக்கு திருவாதிரை மகா அபிஷேகம் நடைபெற்றது. நிகழாண்டு புதிதாக சாக்கோட்டை அமிர்த கலசநாதர் கோயில் நடராஜர் சுவாமி உள்பட மகாமக தொடர்புடைய 12 கோயில்களின் நடராஜர் சுவாமிகள் பங்கேற்றனர்.

தொடர்ந்து, நேற்று காலை 5 மணிக்கு ஆருத்ரா தரிசனக்காட்சி, பின்னர் இந்திர விமானத்தில் நடராஜர் சுவாமியின் இரட்டை வீதியுலா ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து, நேற்று காலை 11 மணிக்கு ஆதிகும்பேஸ்வரர், நாகேஸ்வரர், சோமேஸ்வரர், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், காளகஸ்தீஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், அமிர்த கலசநாதர், பாணபுரீஸ்வரர், ஆதிகம்பட்ட விஸ்வநாதர், கோடீஸ்வரர், கவுதமேஸ்வரர் ஆகிய 12 கோயில்களின் உற்சவ நடராஜர் சுவாமிகள் மற்றும் ஏகாம்பரேஸ்வரர் கோயிலிலுள்ள காளி ஆகியோர் ஆதிகும்பேஸ்வரர் கோயில் கீழவீதியில் ஒரே இடத்தில் சந்தித்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதனைத்தொடர்ந்து ஊடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்தச் சந்திப்பு நிகழ்ச்சியில், வழக்கமாக 11 கோயில்களின் நடராஜர் மட்டுமே இடம்பெறும் நிலையில், நிகழாண்டு சாக்கோட்டை அமிர்தகலசநாதர் கோயில் நடராஜர் உட்பட மகாமக பெருவிழா தொடர்புடைய 12 கோயில்களின் நடராஜர் சுவாமிகள் பங்கேற்பது தமிழகத்திலேயே முதன் முறையாக இங்கு நடைபெற்றது என கோயில் செயல் அலுவலர் கோ.கிருஷ்ணகுமார் தெரிவித்தார். இதில் எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன், துணை மேயர் சு.ப.தமிழழகன் மற்றும் கோயில் அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அந்தந்த கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in