Last Updated : 01 Dec, 2016 10:54 AM

 

Published : 01 Dec 2016 10:54 AM
Last Updated : 01 Dec 2016 10:54 AM

ருத்ராட்சம் என்னும் மாமருந்து!

சிவபெருமானின் பல பெயர்களில் ஒன்று ‘ருத்ரன்’. ருத்ரன் என்றால் சிவன், அட்சம் என்றால் கண். ருத்ரன் கண்களிலிருந்து மண்ணில் விழுந்த நீர்த்துளியே ருத்ராட்ச மரமாக உருப்பெற்றது என்று சொல்வார்கள். உலகியல் துன்பத்தை நீக்கும் அருட்பாவையாகவும் ருத்ராட்சத்தைப் பொருள் கொள்ளலாம். திருநீற்றுக்கு அடுத்த நிலையில் உள்ள சிவச் சின்னமாகவும் ருத்ராட்சம் விளங்குகிறது.

ருத்ராட்சத்துக்கு தெள்தொளி, சிவமணி, கண்டிகை, அக்கமணி, கண்மணி, நாயகன் விழிமணி ஆகிய பெயர்களும் உண்டு. ருத்ராட்சத்தைத் தரும் நீலமணி மரம், இமாச்சலப் பிரதேசம், நேபாளம், காயா, சுமத்ரா, மலேசியா, ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் பரவலாகக் காணப்படுகிறது.

கண்ணீர்த் துளியே காரணம்

சிவனின் வலக்கண்ணிலிருந்து விழுந்த கண்ணீர்த் துளிகளால் முளைத்த மரங்களிலிருந்து கபில நிறம், செந்நிறம் மற்றும் பொன்னிற ருத்ராட்சமும், இடக்கண்ணிலிருந்து வந்த துளிகளால் வெண்மை நிற ருத்ராட்சமும், நெற்றிக்கண் துளிகளிலிருந்து கருமை நிற ருத்ராட்சமும் தோன்றியதாகச் சிவ புராணக் கதைகள் சொல்கின்றன.

நெல்லிக்கனி அளவுள்ள ருத்ராட்சம் உத்தமம், இலந்தை அளவு மத்தியமம், கடலை அளவுள்ளது அணியத்தகாதது (அதமம்) என்று உருத்திராக்க விசிட்டம் என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. உலகில் எத்தனையோ கனிகளும் கொட்டைகளும் உள்ளன. ஆனால் ருதிராட்சம் மட்டுமே இயற்கையிலேயே துளை உள்ளது. மனிதர் அணிவதெற்காகவே இறைவன் இதனைத் துளையோடு படைத்துள்ளான் என்று நம்பப்படுகிறது.

முகங்கள் தரும் பலன்கள்

ஒரு முக ருத்ராட்சம், இரு முக ருத்ராட்சம் எனத் தொடங்கிப் பதினாறு முகம் வரையும், அதற்கு மேற்பட்ட முக எண்ணிக்கையும் கொண்ட ருத்ராட்சங்கள் உள்ளன. இதில் ஒரு முக ருத்ராட்சமும், ஐந்து முகங்களுக்கு மேல் உள்ள ருத்ராட்சமும் அணிய ஏற்றவை. அரிதாக ஒட்டிக் கிடைக்கும் இரட்டை ருத்ராட்சம், சிவன்- பார்வதியின் அம்சமாகக் கருதி, கௌரி சங்கர் ருத்ராட்சம் என்றழைக்கப்படுகிறது. ருத்ராட்சம் அணிந்தவரை சிவ உருவாகவே வழிபடுவது சைவர்களின் பண்பு.

நல்லன எல்லாம் தரும்

ருத்ராட்சம் ஒருவரிடமுள்ள ஆற்றலையும் அன்பையும் மேம்படுத்தி, அவரது ஆளுமைத் திறனை வளர்க்கும் என்று நம்பப்படுகிறது. இது ஆன்மிக அணிகலனாக மட்டுமன்றி, சிறந்த சஞ்சீவியாகவும் பலனளிக்க வல்லது. ருத்ராட்சத்தை அரைத்துப் பூசினால் தேள் கடி, நாள்பட்ட தோல் நோய்கள், புண்கள், கட்டிகள் நீங்கும் என்பது நம்பிக்கை. ருத்ராட்சம் ஊறவைத்த நீரை மஞ்சளுடன் சேர்த்து அருந்த ரத்த அழுத்தம் குறையும் என்றும் பஸ்மாக்கிச் சாப்பிட்டால் சர்க்கரை வியாதி கட்டுப்படும் என்றும் பலர் நம்புகிறார்கள்.

வாதம், பித்தம், சிலேத்துமம் ஆகிய முன்று தோஷங்களை நீக்கவும், விக்கலை நிறுத்தவும், சளியை வெளியேற்றவும் ருத்ராட்சம் பலனளிக்கவல்லது என்று தன் பாடலில் குறிப்பிட்டுள்ளார் தேரைச் சித்தர். “ருத்ராட்சமும் திருநீறும் அணிந்தவன் ஒருபோதும் நரகம் புகுவதில்லை. ஐஸ்வர்யங்கள் அருளும் ருத்ராட்சம்ம ஆன்மாவுக்குப் பேரானந்தைத் தரும். ருத்ராட்சம் அணிந்து ஒருமுறை எந்த மந்திரத்தைச் சொன்னாலும் அதை ஒரு கோடி முறை உச்சரித்த பலனைத் தரும். இதையணிந்து ம்ருத்யுஞ்சய மந்திரம் உச்சரிப்பவர்கள் எல்லாவித நோய்களிலிருந்தும் விடுபடுவார்கள். மேலும் அவர்களை அகால மரணமோ, துர்மரணமோ நெருங்குவதில்லை” எனக் காஞ்சிப் பெரியவரும் அருளியுள்ளார்.

எளிமையே சிறப்பு

எண்பதுகளில் வாரணாசிப் பல்கலைக்கழக உயிர் வேதியியல் துறையைச் சேர்ந்த டாக்டர் கஹஸ்ராவ் என்பவர் ருத்ராட்சம் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டார். அதன் முடிவில் ருத்ராட்சம் சக்தி வாய்ந்த மின்காந்தப் பண்புகளையும் , காந்த முனைகளால் ஈர்க்கும் தன்மை மற்றும் தூண்டும் பண்பு உடையதாகக் கண்டறியப்பட்டது. உளவியல் துறையில் மனநோய் சிகிச்சைக்கும் இதைப் பயன்படுத்தலாம் எனவும் சொல்லப்பட்டது.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த ருத்ராட்சத்தைப் பயபக்தியுடன் அணிந்தாலே போதும், அம்பலவாணனின் அருள் கிட்டும். ஆடம்பரமாக ஒருமுக ருத்ராட்சத்தை வாங்கி, வெள்ளிப் பூண் போட்டு அணிவதைக் காட்டிலும், பத்து ரூபாய்க்கு வாங்கி உள்ளன்போடு அணிதல் உறுதியான பலன் தரும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x