

கருணை மழையில் நனைந்து மகிழ்வோம்
அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய்;
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெருமாட்டி! யசோதாய்! அறிவுறாய்
அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகு அளந்த
உம்பர் கோமானே! உறங்காது எழுந்திராய்
செம் பொற் கழலடிச் செல்வா ! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேல் ஓர் எம்பாவாய்.
விளக்கவுரை:
ஆடை என்ன! தண்ணீர் என்ன! அன்னம் என்ன! என
தர்மம் செய்யும் எம் தலைவன் நந்தகோபாலரே! எழுந்திருக்க வேண்டும்!
வஞ்சிக் கொம்பு போன்ற பெண்களுக்கெல்லாம்
முதன்மையான கொழுந்தே! எங்கள் குலவிளக்கே!
எம் தலைவி யசோதையே! எங்கள் குறை அறிந்து எழுந்திருக்கவேண்டும்!
ஆகாசத்தையெல்லாம் துளைத்து உயர வளர்ந்து அளந்த
தேவர்களுக்கு தலைவனே! தூங்காமல் எழுந்திரு.
செம்பொன் வீரக்கழல் அணிந்த திருவடிகளையுடைய
செல்வனான பலராமனே! உன் தம்பியான கண்ணனும் நீயும்
உறங்காமல் எழுந்திருக்க வேண்டும்.
(கதவு திறந்திடவும், கோபியர் உள்ளே சென்று, நந்த கோபனையும், யசோதையையும், பலதேவரையும் சயனத்திலிருந்து எழுப்புதல்)
இதையும் அறிவோம்:
ஒரு முறை ஸ்ரீஇஞ்சிமேடு அழகிய சிங்கர் திருப்பாவை உபன்யாசம் நிகழ்த்திக் கொண்டு இருந்த சமயம், மனநலம் குன்றிய ஒருவர் “புது வேட்டி வேண்டும்” என்று கேட்டார். மடத்து நிர்வாகியிடம்,“வாங்கிக் கொடுங்கள்” என்றார். அடுத்த சில நாட்களில் நந்தகோபனின் தர்மம் குறித்து ‘அம்பரமே’ பாசுரத்தில் கூறும்போது, முன்பு வேட்டி கேட்டவர் நினைவுக்கு வர, விசாரித்தார். நிர்வாகி கொடுக்கவில்லை என்று தெரிந்ததும். உபன்யாசத்தை நிறுத்தினார். அவருக்கு வேட்டி கொடுத்த பிறகு உபன்யாசம் தொடரும் என்று எழுந்து சென்றார். நிர்வாகிகள் பதறியடித்துக் கொண்டு அவரை தேடிக் கண்டுபிடித்து வேட்டி கொடுத்த பிறகு தன் உபன்யாசத்தைத் தொடர்ந்தார்.
- சுஜாதா தேசிகன்