Published : 31 Dec 2022 05:34 AM
Last Updated : 31 Dec 2022 05:34 AM
பள்ளியெழுச்சி பாட வந்தோம்
நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே! கொடித் தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம், துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே, அம்மா! நீ
நேய நிலைக் கதவம் நீக்கு ஏலோர் எம்பாவாய்.
விளக்கவுரை:
எங்களுக்குத் தலைவனான நந்தகோபனுடைய மாளிகையைக் காப்பவனே!
கொடிகள் விளங்கத் தோரண வாயிலைக் காப்பவனே!
மணி மயமான கதவின் தாழ்ப்பாளைத் திறந்துவிடு!
ஆயர்குலச் சிறு பெண்களான எங்களுக்கு
அறையப்படும் பறையைத் தருகிறேனென்று மாயன்,
மணிவண்ணன் நேற்றே வாக்களித்துள்ளான்.
எனவே, திருப்பள்ளி பாடித் துயில் எழுப்ப
தூய பக்தியுடன் வந்துள்ளோம்.
தலைவனே! முதன்முதலில் உன் வாயாலே மறுக்காமல்,
நிலையோடு பதிந்த நேசமுள்ள கதவை
நீயே திறந்து எங்களை உள்ளே விடு.
(நந்தகோபனுடைய மாளிகைக்குக் காவலாய் இருக்கும் தலைவனே! என்றும் பொருள் கொள்ளும்படியாக அமைந்த பாசுரம். நந்தகோபன் மாளிகையை அணுகி, வாயில் காப்போனை கதவைத் திறக்க பாவையர் வேண்டுதல்)
இதையும் அறிவோம்:
தமிழக அரசின் சின்னமாக ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் உள்ளது. ‘குரங்கு சீமாச்சு’ என்று ஊர் மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட சீனிவாசன் என்பவர், இந்தக் கோபுரத்தின் உச்சி வரை உள்ளே அமைந்திருக்கும் நிலைப் படிகள் வழியே அல்லாமல் வெளிப்புறத்தில் குரங்கு போல் ஏறுவதில் வல்லவர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஒருமுறை கோபுரத்தின் உச்சி வரை சென்று நமது இந்திய தேசியக் கொடியை கோபுரத்தின் மீது ஏற்றி வெற்றிக் கொடி நாட்டினார்!
- சுஜாதா தேசிகன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT