

சகுனியின் சதியின் முன், தாக்குப் பிடிக்க முடியாமல், சூதாட்டத்தில் தோற்று, பாண்டவர்களும், பாஞ்சாலியும் கானகம் போனார்கள். அடர்ந்த காட்டில், பாஞ்சாலி படும்பாட்டைக் கண்டு பீமன் கவலைக்கொண்டு கோபம் கொண்டான். துரியோதனன், துச்சாசதனனை துவம்சம் செய்ய வேண்டுமென அவனது உள்ளம் துடிக்கிறது. கொதித்த மனதை ஆறுதல்படுத்துகிறார் தருமன்.
தர்மத்தைக் காத்து வாழும்போது இதுபோன்று சோதனைகளெல்லாம் வரத்தான் செய்யும். பொறுமை காத்தால் பூமி ஆளலாம். தர்மம் நிலை காக்கும். தர்மமே வெல்லும் என்கிறார். இந்த நேரத்தில் அங்கு வரும், வியாச மகரிஷி, தருமனின் உயர்ந்த குணத்தை உணர்ந்து அவனுக்கு ஒரு உயர்ந்த மந்திரத்தை உபதேசித்து, உனக்கு எல்லா வெற்றிகளும் கிட்டும். அர்ஜுனன் மூலம் உனக்கு இவையெல்லாம் ஈடேறும் என்று வாழ்த்தி ஆசி வழங்கிப் புறப்படுகிறார்.
சில நாட்களுக்குப் பின் அர்ஜுனனை, அழைத்துத் தனிமையில் வியாசர் உபதேசித்த மந்திரத்தைக் கூறி, இதன் மூலம் இந்திரனின் அன்புக்குப் பாத்திரமாகி, அவரிடமிருந்து ஆயுதங்களைப் பெற்று வா! என்று கூறினான் தருமன். அர்ஜுனனும் விடைபெற்றுப் புறப்பட்டான்.
ஒரு முனிவரைப் போல வந்து, அர்ஜுனனை வழி மறித்த இந்திரன், அர்ஜுனனின் பக்திக்கும் உறுதிக்கும் மகிழ்ந்து அவனைச் சிவபெருமானை நோக்கி, தவம் புரியுமாறு கூறினான். அவரால்தான் துரியோதனன் உள்ளிட்டோரை வெல்வதற்கான ஆயுதங்களும் அறிவும் கிடைக்கும் என்றான்.
ஊசிமுனையில் தவம் இருந்த அர்ஜூனன்
கடும் தவம் புரிகிறான் அர்ஜுனன். இலையும் சருகும் தின்று, இறுதியில் காற்றை மட்டும் உட்கொண்டு ஊசிமுனையில் தவம் செய்தான். அப்போது காட்டுப்பன்றியொன்று பெருத்த உறுமலோடு வீறிட்டபடி ஓடி வருகிறது. கடுந்தவத்தில் இருந்த அர்ஜுனனுக்கு அருள் கிட்டும் நேரமிது. ஓரக்கண்ணால் பார்த்து அம்பொன்றை விடச் சுருண்டு விழுந்து, பன்றி உயிர்விட்டது. எங்கிருந்தோ இன்னுமொரு அம்பு வந்து பாய்கிறது. வெகுண்டு பார்த்தான் காண்டீபன். வேட்டுவன் கோலத்தில் நின்றார் சிவபெருமான்.
“ஏய்! என்ன..? அதுதான் மாண்டுவிட்டதே... அப்புறம் எதற்குப் பெரிய வீரன் போல் அம்பை எய்து, அம்பை வீணடிக்கிறாய்” என்று குதித்தான்.
“நாவை அடக்கு! அது எனது காடு. அத்துமீறி நுழைந்துவிட்டு ஆணவமாகப் பேசுகிறாயா? நான் விட்ட அம்பிலே இறந்த பன்றியை, ஏதோ நீ கொன்றதுபோல் மார்தட்டுகிறாயே! அடுத்தவர் வெற்றியில் குளிர்காயாதே.” என்கிறார் சிவபெருமான். வாய்ப்பேச்சு முற்றி, கை கலப்பாய் மாறி, பெரிய சண்டையாகி விடுகிறது. பலத்த சண்டையின் முடிவில், அர்ஜுனன் சரணடைகிறான். பரம்பொருளும் தன் உருவம் காட்டியருளி, அவனுக்குச் சக்திவாய்ந்த பாசுபதாஸ்திரத்தை பரிசளித்து, அவன் வெற்றிக்கு தன் பரிபூரண ஆசிகளையும், அருளையும் வழங்கி மறைந்தார்.
எடுத்த காரியத்தை முடிப்பதில் விடாமுயற்சியும், மன உறுதியும் இருக்குமாயின், ஆண்டவன் அருள் துணை நிற்கும் என்பது நமக்கான பாடம்.
இங்கே நீங்கள் பார்க்கும் இந்த அழகிய சிற்பம் கோவை பேரூரில் உள்ள கனக சபையில் நுழைந்தவுடன் வலதுபக்கம் உள்ள தூணில் உள்ளது. ‘ஊசி முனை’ துல்லியமாகக் காட்டப்பட்ட அழகு வியக்க வைக்கிறது.. பக்கத்தில் நீங்கள் பார்க்கும் சிற்பங்கள் மாமல்லபுரம் சிற்பங்கள். இதுவும் அர்ஜுனன் தவம்தான். கடுந்தவம் என்பது அவனது உடலில் காட்டப்பட்டுள்ளது. சிவபெருமான் பூதகணங்களோடு வரும் காட்சியும் அழகோ அழகு! இது சுய ரூபத்தில் வந்து, பின் வேடுவனாக வடிவெடுக்கும் முன்னரான தோற்றம். அற்புத சிற்பங்களின் அழகை ரசிப்போம்... ஆராதிப்போம்!
(அடுத்த வாரம்… )
ஓவியர் பத்மவாசன்