

ஆறு வயதில் இசையைப் பயின்று, உலகம் முழுவதும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசைக் கச்சேரிகளை நடத்திய பெருமை சமீபத்தில் மறைந்த கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணாவுக்கு உண்டு. இசைக்கிணையாக அவர் புரிந்த ஆன்மிகச் சேவையின் விளைவாக, அவரது உருவம், திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி கிராமத்தில் உள்ள விஷ்ணு துர்க்கை அம்பாள் திருக்கோவில் கோபுரத்தில் உள்ளது. சுமார் 16 ஆண்டுகளுக்கு முன்பாகவே இது அமைக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலைச் சீரமைத்துக் கட்டும் பணியில் ஈடுபட்ட கோவிலின் டிரஸ்டியான சங்கரய்யர், 1985-ம் ஆண்டு பெங்களூருவில் பணியாற்றிய காலத்தில் பாலமுரளி கிருஷ்ணாவைச் சந்தித்திருக்கிறார். கோயிலின் சிறப்புகளை சங்கரய்யர் எடுத்துக் கூறியதைத் தொடர்ந்து, விஷ்ணு துர்க்கை அம்பாள் கோவிலுக்கு நேரில் வந்து வழிபட்ட பாலமுரளி கிருஷ்ணா, அதோடு கோயில் சீரமைப்பு பணிக்காக கச்சேரி செய்து நிதிதிரட்டி தருவதாக கூறினார். அதன்படி நெல்லை சங்கீத சபாவில் நடத்தப்பட்ட தனது இசைக் கச்சேரியின் மூலம் கிடைத்த ரூ.2.5 லட்சத்தைக் கோயில் நிர்வாகத்திடம் வழங்கி சீரமைப்புப் பணியைத் தொடங்கி வைத்திருக்கிறார்.
தங்களது ஊர் கோவிலுக்கு கச்சேரி செய்து நிதிதிரட்டித் தந்த பாலமுரளி கிருஷ்ணாவை கெளரவிக்கும் கோவில் நிர்வாகமானது ஊர் மக்கள் ஒத்துழைப்புடன் அவரது உருவச்சிலையை கோவிலின் ராஜகோபுரத்தின் முதல் தளத்தில் வலதுபுறத்தில் அமைத்தது. பாலமுரளி கிருஷ்ணா தியானம் நிலையில் போன்று அமைக்கப்பட்டுள்ள இச்சிலையின் உயரம் சுமார் நான்கு அடி. 2000-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட இக்கோவிலுக்கு, 2003-ம் ஆண்டு வருகை தந்த பாலமுரளி கிருஷ்ணா கோபுரத்திலுள்ள தன் சிலையை கண்டு மெய்சிலிர்த்ததோடு, கோவிலையும் வழிபட்டு சென்றார்.