Published : 29 Dec 2022 05:15 AM
Last Updated : 29 Dec 2022 05:15 AM

சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் திரளான பக்தர்கள் முன்னிலையில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றம் நடைபெற்றது.

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

சைவத் திருதலங்களில் புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாத ஆருத்ரா தரிசனம் மற்றும் ஆனித் திருமஞ்சனம் வெகு சிறப்பாக நடைபெறும். இந்த இரு நிகழ்வுகளிலும் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாநில, வெளிநாடு பக்தர்களும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வர்.

இந் நிலையில் மார்கழி மாத ஆருத்ரா தரிசனம் நிகழ்வு கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. காலை 7 மணி அளவில், வேத மந்திரங்கள் முழங்க தேவாரம், திருவாசகம் பாடி மேளதாளத்துடன் உச்சவாச்சாரியார் நடராஜ குஞ்சிதபாத தீட்சிதர் கோயில் மரத்தில் கொடியேற்றினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

முன்னதாக நடராஜர், சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகளுடன் தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து பஞ்சமூர்த்தி வீதி உலா நடைபெற்றது.

ஆருத்ரா தரிசனத்தையொட்டி, நாள்தோறும் காலையும் மாலையும் பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்தி வீதி உலா நடைபெறும். வரும் 1-ம் தேதி தெருவடைச்சான் (சப்பரம்) நிகழ்வு நடைபெறும். வரும் 4-ம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதி உலா நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான தேரோட்டம் வரும் 5-ம்தேதி நடக்கிறது. அதைத் தொடர்ந்த முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசனம் வரும் 6-ம் தேதி நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.கோயில் கொடியேற்றத்தை முன்னிட்டு, சிதம்பரம் நகர் மற்றும் கோயில் வளாகத்தைச் சுற்றிலும் ஏஎஸ்பி ரகுபதி தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x