Published : 28 Dec 2022 04:29 AM
Last Updated : 28 Dec 2022 04:29 AM
குளிர்ந்த நீரில் மூழ்கி மகிழ்வோம்
புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக்-களம் புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண், போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்து ஏலோர் எம்பாவாய்.
விளக்கவுரை:
கொக்கு உருவத்தில் வந்த பகாசுரனின் வாயைக் கிழித்தவனும்
பொல்லாத அரக்கனான ராவணனின் தலைகளைக் கிள்ளியெறிந்த
பெருமாளின் புகழைப் பாடிக் கொண்டு, இளம் பெண்கள் எல்லோரும்
பாவை நோன்பு நோற்கும் இடத்தை அடைந்து விட்டார்கள்.
சுக்கிரன் (வெள்ளி கிரகம்) உதித்து குரு (வியாழன்) அஸ்தமித்தது.
பூவையும், மானையும் ஒத்த கண்ணழகியே
பறவைகள் ஆரவாரித்து இரைக்குச் செல்வதைப் பார்த்தாயா?
பெண்ணே! இந்நாளில் உடல் குளிர நீராடாமல் படுத்துக் கிடக்கிறாயோ?
தனியே கிடக்கும் கள்ளத்தனத்தைவிட்டு எங்களோடு கலந்துவிடு!
(படுத்துறங்குவதை விட்டு எழுந்து வா!)
இதையும் அறிவோம்:
ஆண்டாள் வாழ்ந்த காலம் பற்றி பல ஆய்வுகள் உள்ளன. அதிகாலை சுக்கிரன் உதயத்தை ஒட்டி தங்கள் வேலைகளைத் தொடங்குவது கிராமத்துப் பெண்களின் வழக்கம். இந்தப் பாசுரத்தில் ‘வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று’ என்று ஆண்டாள், சுக்கிரனின் உதயம், குரு அஸ்தமனம் ஆகியவற்றை சுட்டிக் காட்டுவதையும், மார்கழி நீராட்டம் தொடங்குவது மார்கழி மாத பௌர்ணமி நாள் என்பதையும் ஒப்புநோக்கி வானசாஸ்திர அறிஞர்கள் ஆராய்ந்து 731-ம்ஆண்டு டிசம்பர் மாதம் 18-ம் நாள் இந்த பாசுரத்தை ஆண்டாள்பாடியிருக்கலாம் என்று யூகித்துள்ளனர்.
- சுஜாதா தேசிகன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT