Published : 25 Apr 2014 02:33 PM
Last Updated : 25 Apr 2014 02:33 PM

நிகரற்ற அன்புடையோன்

இறைவன் அளப்பரிய அருளாளன். ஆழம்காண முடியாத அன்பே அவனது அடையாளம்.

பாருலகம், அதில் அவன் படைத்த மனிதர்கள், இணைத்த உறவுகள். சொல்லிக்கொடுத்தது யார்? அள்ளி அள்ளிக் கொடுத்த இறைவன் அல்லவா.

அதனால்தானே ‘இறைவனிடம் கையேந்துங்கள்..அவன் இல்லையென்று சொல்லுவதில்லை’ என்று எட்டுத்திக்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறார் வி.எம்.ஹனீபா. அத்தகைய அருளாளனின் தாராளம் சுகமானது. சொல்லுக்குள் அடங்காதது. பொல்லாதவர்களையும் கைகோர்த்துக்கொள்ளும் அல்லாவின் கழிவிரக்கத்தை நினைத்தால் கண்ணில் நீர் சுரக்கும். அவன் இறக்கிய திருக்குர் ஆனில் அவன் சொல்கிறான்.

எவர் ஒருவர் (ஒரு) நன்மையைச் செய்கிறாரோ அவருக்கு அதுபோல் பத்துப் பங்கு (நன்மை) உண்டு. எவர் ஒருவர் ஒரு தீமையைச் செய்கிறாரோ, அதைப் போன்ற அளவுடைய கூலியே கொடுக்கப்படுவார். அவர்கள் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள். (அத்தியாயம் 6 ஸூரத்துல் அன் ஆம் வசனம் 160)

நன்மை ஒன்றைச் செய்தால் செய்தவருக்கு அதைப் போல் பத்து மடங்கு நன்மைகளை இறைவன் அருள்பாலிக்கிறான். அதைப் போல் தீமையெனில் பத்து மடங்கு தீமை கிடைக்கும் என்பதாகத்தான் நமக்கு எண்ணம் வரும். அப்படி இல்லை. ஏக இறைவன் அன்புடையவன் அல்லவா.

ஆகவே தீங்கு செய்தவர்கள் அதற்குப் பதிலாக ஒரு தீமையை மட்டுமே கூலியாகப் பெறுவார்கள் என்கிறான் இறைவன்.

மனித மனம் பலவீனமானது. அறிந்தும் அறியாமலும் அது அவசரப்படும். அல்லது ஆசைப்படும். இது திட்டமிட்ட செயல் அல்ல. கொட்டிக் கிடப்பதை அள்ளிக்கொள்ளும் அவசரம்: அறியாமை. மனித அபிலாஷைகளின் சராசரித் தவறு.

ஆனாலும் அத்தவற்றைச் செய்தவர் அதை உணர வேண்டும். உணர்ந்து திருந்த வேண்டும். அதற்கான வாய்ப்பாகத்தான் செய்த தீமைக்குப் பிரதியாக ஒரு தீமையை மட்டும் கூலியாகக் கொடுக்கிறான் இறைவன். திருக்குர் ஆனின் இந்த அழகிய வசனத்தால் தீமை செய்ய அஞ்ச வேண்டும். நன்மை செய்ய ஆசைப்பட வேண்டும் என்றும் கருத்து நிலைநிறுத்தப்படுகிறது.

இறைவேதத்தின் இந்த அருமையான போதனை எப்போதும் நம் நெஞ்சில் நிலைக்கட்டும். மனவளமும் பொருள் வளமும் பொங்கிப் பெருகட்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x