

மாயனை மன்னு வட மதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி-விளக்கை
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது
வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும்; செப்பு ஏலோர் எம்பாவாய்.
விளக்கவுரை:
ஆச்சரிய செயல்களை புரியும் வட மதுரைக்குத் தலைவனும்
தூய யமுனை நதிக் கரையில் வசிப்பவனும்
இடையர் குலத்தில் அவதரித்த அழகிய விளக்கான
யசோதைக்கு பெருமை தேடிக் கொடுத்த தாமோதரனை
நாம் பரிசுத்தர்களாய் அணுகி, தூய மலர்களைத் தூவி வணங்கி
வாயார அவன் குணங்களைப் பாடி, மனத்தினால் தியானித்தால்
முன்பு செய்த பாவங்களும், பின் வருகிற பாவங்களும்
அவன் அருளால் நெருப்பிலிட்ட பஞ்சுபோல் ஆகிவிடும்!
ஆகவே, அவன் திருநாமங்களை சொல்லுங்கள்!
(கண்ணனை வாழ்த்தும் முறையும், அடையும் பலன்களும்)
இதையும் அறிவோம்:
ஒரு நாள் பட்டர் என்ற ஆச்சாரியர் சிஷ்யர்களுக்குத் திருப்பாவை காலட்சேபம் செய்து முடித்தார். அவருடைய ஸ்ரீபாதத் தீர்த்தத்தைப் பிரசாதமாக சிஷ்யர்கள் வாங்கிக் கொண்டு சென்றார்கள். பட்டருடைய தாயார் தனக்கும் ஸ்ரீபாதத் தீர்த்த பிரசாதம் வேண்டும் என்று பிரியப்பட்டு, ஒருசிஷ்யனை வாங்கி வரச் சொல்லி உட்கொண்டார். ‘மகனுடையபாத தீர்த்தத்தை தாய் உட்கொள்வதா?’ என்று பட்டர் கேட்க, ‘‘சிற்பி பெருமாள் சிலையை வடிக்கிறார் என்பதால் அதை வணங்காமல் இருப்பாரா? நான் உன்னைப் பெற்ற தாயாக இருந்தாலும் ஆண்டாளின் திருப்பாவையைச் சொன்ன உன் ஸ்ரீபாதத் தீர்த்தத்தை எடுத்துக் கொண்டேன்” என்றாள்.
- சுஜாதா தேசிகன்.