

ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால்
தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெறும் செந்நெல் ஊடு கயல் உகள
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்
தேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்து ஏலோர் எம்பாவாய்.
விளக்கவுரை: உயர வளர்ந்து, தன் திருவடிகளால் உலகங்களை அளந்த திருவிக்கிரமனின் திருநாமங்களைப் பாடுவதற்காக நீராடினால், நாடு முழுவதும் தீமை இல்லாமல் மாதம்தோறும் மும்மாரி மழை பெய்யும் (அதனால்) உயர வளர்ந்து, பருத்த செந்நெற்பயிர்களின் இடையே கயல் மீன்கள் துள்ள, பூத்த குவளை மலர்களின் தேனை உண்ட மயக்கத்தில் வண்டுகள் உண்டு உறங்கிக் கிடக்க, பருத்த முலைகளைப் பற்றி இழுக்க, அசையாமல் நின்று, சலிக்காமல் வள்ளல்களை போன்ற பசுக்கள் பால் குடங்களை நிரப்புவது போல அழிவில்லாத செல்வம் எங்கும் நிறைந்திடும், வாரீர்! (உத்தமனைப் பாடி நோன்பு எடுப்போர் அடையும் பெரும் செல்வம்)
இதையும் அறிவோம்: திருமலையில் வெள்ளிக்கிழமைதோறும் திருமஞ்சனத்தின் போது (அபிஷேகம்) பெருமாள் மார்பில் எப்போதும் பிரியாமல் இருக்கும் ஸ்ரீதேவி தாயாரைத் தனியாக எடுத்து திருமஞ்சனம் நடைபெறும். பெருமாளின் பிரிவை ஒரு கணம்கூடத் தாங்க முடியாத லட்சுமிதேவி பிரிவைத் தணிக்க ஆண்டாளின் நாச்சியார் திருமொழி பாசுரங்களைத் திருமஞ்சனத்தின்போது பாடுகிறார்கள்.
- சுஜாதா தேசிகன்