

இயன்றமட்டும் அறம் செய்வோம்
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்கு
செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற் கடலுள்
பையத் துயின்ற பரமன் அடி பாடி,
நெய் உண்ணோம், பால் உண்ணோம், நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம், மலர் இட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்று ஓதோம்
ஐயமும் பிச்சையும் ஆம் தனையும் கை காட்டி
உய்யுமாறு எண்ணி உகந்து ஏலோர் எம்பாவாய்.
விளக்கவுரை
இப்பூவுலகில் வாழப் பிறந்தவர்களே! நம் பாவை நோன்புக்கு செய்ய வேண்டிய காரியங்களைக் கேளுங்கள்! பாற்கடலில் மெள்ள உறங்கும் எம்பெருமானுடைய திருவடிகளை புகழ்ந்து பாடுவோம்! விடியற்காலை நீராடி, (நிவேதனம் செய்யாத) நெய், பாலை உட்கொள்ள மாட்டோம். கண்களுக்கு மையிட்டுக் கொள்ளாமல், (கண்ணனுக்கு சூட்டாத) பூக்களை சூட்டிக் கொள்ள மாட்டோம். முன்னோர் செய்யாத காரியங்களை செய்ய மாட்டோம்.
கோள் சொல்ல மாட்டோம். தான தர்மங்களை முடிந்தவரை கொடுத்து ஏழை மக்களுக்கு உதவுவோம்.
(நோன்பு நோற்க விரும்புவோர், முக்கியமாக மேற்கொள்ள வேண்டிய, தவிர்க்க வேண்டிய விதிமுறைகள் இந்த திருப்பாவையில் கூறப்பட்டுள்ளன).
இதையும் அறிவோம்:
ஸ்ரீவில்லிபுத்தூரில் அன்று ஆண்டாள் உற்சவம். மவுனவிரதத்தில் இருந்தார் ஸ்வாமி தேசிகன். அன்று அவர் இல்லத் தின் வழியே ஆண்டாள் வீதி உலாவாக வரும்போது நெகிழ்ச்சி அடைந்து ஆண்டாளைப் போற்றி ஸ்லோகங்களைப் பொழிய ஆரம்பித்தார். 29-ம் ஸ்லோகத்துடன் நிறுத்திவிட்டார். 30 என்றால் ஆண்டாளுடைய திருப்பாவை எண்ணிக்கைக்குச் சமமாக ஆகிவிடுமோ என்ற எண்ணத்தில்! ஆண்டாளுக்கு என்றுமே எல்லா விதத்திலும் அடியவராக இருக்கவே விரும்பினார். அந்த ஸ்லோகங்கள் ‘கோதா ஸ்துதி’ என்று அழைக்கப்படுகிறது.
- சுஜாதா தேசிகன்