

சென்னை: ஒருகால பூஜை திட்டத்தில் புதிதாக 2,041 கோயில்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் ஒருவேளை பூஜைகூட நடத்த நிதிவசதி இல்லாத 12,959 கோயில்களுக்கு தலா ரூ.1 லட்சம் வைப்பு நிதியாக வைக்கப்பட்டு, அதன் வட்டித் தொகையிலிருந்து ஒருகால பூஜை திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், இத்திட்டத்தில் புதிதாக 2,041 கோயில்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
மேலும், இத்திட்டத்தின் கீழான வைப்பு நிதியை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தி முதல்வரால் உத்தரவிடப்பட்டு அதற்கான கூடுதல் செலவினத் தொகை ரூ.170 கோடி அரசால் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இத்திட்டத்தின் கீழ் 15 ஆயிரம் கோயில்கள் பயன்பெற்று வருகின்றன. இதுமட்டுமின்றி, ஒருகால பூஜை திட்டம் செயல்படுத்தப்படும் கோயில்களில் பூஜை செய்யும் அர்ச்சகர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகையாக ரூ.1,000 வழங்கும் வகையில் அர்ச்சகர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் 11-ம் தேதி முதல்வர் தொடங்கி வைத்தார்.
இத்திட்டம் தொடங்கப்பட்ட நாள்முதல் இதுவரை அர்ச்சகர்களுக்கு மாதாந்திர ஊக்கத்தொகையாக ரூ.14.66 கோடி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.