

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ரியாசி மாவட்டம் திரிகுடா மலை உச்சியில் புகழ்பெற்ற மாதா வைஷ்ணவி தேவி கோயில் உள்ளது.
கோயில் வாரிய உயர் அதிகாரி ஒருவர் நேற்று கூறும்போது, “இந்த ஆண்டில் கடந்த டிசம்பர் 6-ம் தேதி வரையில் 86.4 லட்சம் பக்தர்கள் மாதா வைஷ்ணவ தேவியை தரிசனம் செய்துள்ளனர். இது கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச அளவாகும். சராசரியாக தினமும் 13 ஆயிரம் பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர். புத்தாண்டு வர உள்ளதால் இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் அதிகரிக்கும். இதனால் இந்த மாத இறுதியில் மொத்த பக்தர்கள் எண்ணிக்கை 90 லட்சத்தைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஜூன் மாதத்தில் அதிக அளவாக 11.29 லட்சம் பேரும் குறைந்த அளவாக பிப்ரவரி மாதம் 3.61 லட்சம் பேரும் வைஷ்ணவ தேவியை வழிபட்டுள்ளனர்” என்றார்.
கடந்த ஜனவரி 1-ம் தேதி கோயிலில் கூட்ட நெரிசலில் 12 பேர் உயிரிழந்தனர். 16 பேர் காயமடைந்தனர். ஆனாலும், ஜனவரி மாதத்தில் 4.38 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு 17 லட்சம் பக்தர்கள் மட்டுமே இந்தக் கோயிலுக்கு வருகை தந்தனர். கோயில் வரலாற்றில் இதுதான் மிகக் குறைந்த அளவாகும்.