ஓஷோவின் குரல்: மரணத்தையும் பிரிவையும் எப்படி எதிர்கொள்வது?

ஓஷோவின் குரல்: மரணத்தையும் பிரிவையும் எப்படி எதிர்கொள்வது?
Updated on
1 min read

இதுபோன்று வாழ்க்கையில் நேரும் தருணங்கள் மிகவும் முக்கியமானவை. ஏனெனில் இதுபோன்ற தருணங்களில் விழிப்படைவது சாத்தியம். உங்கள் அன்புக் குழந்தை இறக்க நேரிடுவது அத்தனை அதிர்ச்சியைத் தரும் சம்பவம்தான். நீங்கள் அப்படிப்பட்ட அதிர்ச்சி நிலையிலிருந்து விழிப்புணர்வைப் பெற முடியும்.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில், ஏன் என்ற கேள்வியைக் கேட்கவே வேண்டாம். வாழ்வுக்கு ஏன் என்பது எப்படியில்லையோ அதேபோலத் தான் மரணத்துக்கும். அந்த ‘ஏன்’, பதிலளிக்க முடியாதது; பதிலளிக்கத் தேவையுமில்லை. வாழ்க்கை ஒரு பிரச்சினை அல்ல; தீர்க்கப்படக்கூடியதற்கு. மரணத்துக்கும் அதேதான். வாழ்வும் மரணமும் விந்தையின் பதிலற்ற இரண்டு அங்கங்கள். கேள்விக்குறிதான் எல்லாவற்றுக்கும் மேலாக நிற்கிறது. அதுபோன்ற சூழ்நிலைகளில் ஒருவரால் செய்யக்கூடியது விழிப்பையடைவதே.

ஏனெனில் இதுபோன்ற அதிர்ச்சிகள் ஒரு திசைமாற்றமாக உருவாக முடியும். எண்ணம் ஸ்தம்பிக்கிறது, மனம் கலக்கமடையும் அளவுக்கு அந்த அதிர்ச்சி இருக்கும். எதுவுமே அர்த்தமுடையதாக இருக்காது, எல்லாமே இழக்கப்பட்டதாகத் தோன்றும். ஒருவர் தனக்கே முழுமையான அந்நியராக, வெளியாளாக, வேரற்றவராகத் தெரிவார். இதுபோன்ற தருணங்கள்தான் புதிய பரிமாணத்துக்குள் உங்களை நுழையச் செய்பவை. அப்படிப்பட்ட தெய்வீக நிலைக்குத் திறக்கப்படும் கதவுகளில் மரணமும் ஒன்று.

சீக்கிரமோ தாமதமாகவோ புழுதியிலும் புழுதியாக மறையப்போகும் வெறும் கனவாக வாழ்க்கையைப் பாருங்கள். இங்கே எதுவும் தங்கியிருக்கப்போவதில்லை. நாம் இங்கே நமது வீட்டை உருவாக்க முடியாது. ஓரிரவு தங்கிவிட்டுக் காலையில் கிளம்பிப் போகும் விடுதி அது. ஆனால் ஒரேயொரு விஷயம் மட்டும் அங்கே இருக்கிறது. அதுதான் உங்கள் கவனிப்பு, உங்கள் சாட்சியம். மற்றவை எல்லாம் மறைந்துவிடுகின்றன. ஒவ்வொன்றும் வரும்; போகும், வெறுமனே சாட்சியம் மட்டுமே மிஞ்சுகிறது.

அதனால் முழு விஷயத்தையும் கவனியுங்கள். எதனுடனும் அடையாளம் காணாமல் வெறுமனே பார்வையாளராக இருங்கள். யாருக்கும் எதற்கும் தாயாக வேண்டாம். அப்படி நீங்கள் ஆவீர்களெனில், உங்களைப் பந்தப்படுத்திக்கொள்வீர்கள். வெறுமனே அமைதியான பார்வையாளராக, சாட்சியாக இருங்கள்; அந்தக் கவனிப்பு உங்களுக்குப் பிரமாதமான உதவியைச் செய்யும். விந்தைகளின் கதவுகளைத் திறக்கும் ஒரேயொரு சாவி அதுதான். அதனாலேயே எந்தப் பிரச்சினையும் தீராது. ஆனால், ரகசியங்களுக்குள் வாழும் திறனை, முழுமையாக வாழும் திறனுடையவராக உங்களை ஆக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in