Published : 03 Jul 2014 11:44 AM
Last Updated : 03 Jul 2014 11:44 AM

இயேசுவின் பார்வையில் பெண்கள்

ஒரு சில சமயங்களைத் தவிர, உலகிலுள்ள பெரும்பான்மை சமயங்கள் பிரபஞ்ச நாயகன் என்ற ஏக இறைவனையே சென்று அடைகின்றன. கிறிஸ்தவம் அந்த ஏக இறைவனை யெகோவா என்ற பெயரால் அழைக்கிறது. யெகோவா தேவன் தன்னையே மனித குலத்தின் மீட்புக்காக மேற்கொண்ட இறைமகன் அவதாரமே இயேசு கிறிஸ்து என்கிறது கிறிஸ்தவத்தின் தாய் மதமான கத்தோலிக்கம். ஏக இறைவனாகிய தந்தை யெகோவா என்றாலும் அவரது அவதாரமாகிய இயேசு கிறிஸ்து என்றாலும் தந்தை, மகன் ஆகிய இவர்களது பார்வையில் பெண்களை எப்படிக் கருதினார்கள் என்பதற்கு இயேசுவின் வாழ்விலிருந்து நாம் பல உதாரணங்களைக் காணலாம். அவர் பெண்களிடம் பழகிய விதமும், பெண்கள் மீதான அவரது கனிவும், மதிப்பும், கருணையும் சமத்துவம் நிறைந்த அணுகுமுறையும் இதை எடுத்துக்காட்டும். ஏனெனில் இயேசு என்பவர் ‘தேவனுடைய தற்சொரூபமாகவும்,' ஒவ்வொரு விஷயத்திலும், கடவுள் எப்படி நடந்திருப்பாரோ, அப்படியே நடந்துகொள்பவராகவும் இருக்கிறார்' (கொலோசெயர் 1:15) என்ற வசனங்களை நாம் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். இந்த வசனங்களின்படியே இயேசு நடந்து கொண்டதையும் அவரது வாழ்வு நமக்குக் காட்டுகிறது.

கிணற்றடியில் இயேசு

மனு மகன் இயேசு ஊரின் பொதுக் கிணற்றின் தண்ணீர் எடுத்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணிடம் பேசிய சம்பவத்தைப் பாருங்கள். சமாரியா நாட்டாளாகிய ஒரு பெண் தண்ணீர் எடுக்க வந்தாள், இயேசு அவளை நோக்கி தாகத்துக்குத் தண்ணீர் கொடு என்றார் என்பதாக யோவான் நற்செய்தி கூறுகிறது. யூதர்களில் பெரும்பாலும் சமாரியர்களுடன் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ள மாட்டார்கள். அது அன்றைய யூதேயாவில் நிகழ்ந்த சாதிய ஏற்றத்தாழ்வு அடுக்குமுறையின் தாக்கமாக இருக்கலாம். ஒரு சமாரியப் பெண்மணியிடம் பொது இடத்தில் பேச இயேசு தயங்கவில்லை. ஆனால் பொது இடத்தில் ஒரு பெண்ணுடன் பேசுவதை வெட்கங்கெட்ட செயலாக பழமைவாத யூதர்கள் கருதினார்கள். ஆனால் துருப்பிடித்த பழமையைக் காலில் போட்டு மிதிக்க வந்த இயேசு, பெண்களை மரியாதை யுடன் நடத்தினார். மேலும் சாதி மற்றும் இன வேறுபாடு காட்டவில்லை. மிக முக்கியமாக அவர் ஆண் - பெண் பாகுபாடே பார்க்கவில்லை.

மகளென்ற உறவு

மற்றொரு சம்பவத்தில் பன்னிரெண்டு ஆண்டுகளாகக் கடும் இரத்தப்போக்கால் துயர வாழ்வு வாழ்ந்து வந்த ஒரு பெண், இயேசு வீதியில் வருவதைப் பார்த்து, ஓடிச் சென்று அவரைத் தொடுகிறாள். அந்த வினாடியே அவள் குணமடைந்தாள். இயேசு திரும்பி, அவளைப் பார்த்து: மகளே, திடம்கொள், உன் நம்பிக்கை உன்னை மீட்டது என்றார். (மத்தேயு 9:22) யூத மண்ணில் அன்று நிலவிய பொதுச்சட்டத்தின்படி, மாதவிலக்கு ஒரு நோய்க்கூறாகி அவதிப்படும் பெண்கள், மக்கள் நடமாடும் பொது இடங்களுக்கு வரக் கூடாது, தவறி வர நேர்ந்தால் யாரையும் தொடக் கூடாது. ஆனால், பொது இடத்தில் தன்னைத் தொட்டு குணம்பெற்ற பெண்ணிடம் இயேசு கோபப்படவில்லை. மாறாக, ஆறுதலாய்ப் பேசி, அவளைக் கனிவுடன் “மகளே” என்று அழைத்தார். அந்த வார்த்தை ஒடுக்கப்பட்ட பெண்ணினத்தில் ஒருத்தியாய் இருந்த அந்தப் பெண்மணிக்கு எத்தனை ஆறுதலைத் தந்திருக்கும்!

முதல் காட்சி பெண்ணினதுக்கே!

இயேசுவின் வாழ்வில் மிக முக்கிய நிகழ்வு மரணத்தை அவர் வெற்றி கொண்டது. தாம் சொன்னபடியே சிலுவையில் மரித்து அடக்கம் செய்யப்பட்ட மூன்றாம் நாள் இயேசு உயிர்த்தெழுந்தார். அவ்வாறு உயிர்த்தெழுந்த பின் மகதலேனா மரியாள் என்ற பெண்ணுக்கும் ‘மற்ற மரியாள்' என விவிலியம் குறிப்பிடும் ஒரு பெண்ணுக்கும் முதல் காட்சியைத் தருகிறார். அவரது முதன்மைச் சீடர்கள் என்று கருதப்படும் பேதுருவுக்கோ யோவானுக்கோகூட அவர் தனது முதல் தரிசனத்தைத் தந்திருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யவில்லை. தனது உயிர்த்தெழுதலை முதலில் காணும் வாய்ப்பைப் பெண்களுக்குத் தருவதன் மூலம் இயேசு அவர்களைக் கௌரவப்படுத்தினார்.

காட்சிதந்த இயேசு அந்தப் பெண்கள் இருவரையும் நோக்கி, 'நீங்கள் போய், என் சகோதரருக்குச் சொல்லுங்கள்' என்று அந்தப் பெண்களிடம் சொன்னார் (மத்தேயு 28:1, 5-10). நீதிமன்றத்தில் பெண்கள் சாட்சி சொன்னால் அதை யூதச் சட்டம் ஏற்றுக்கொள்ளாது. பெண்களை இத்தனை பாகுபாட்டுடன் நடத்திய அதே யூத இனத்தில் தோன்றியே இயேசுவே பெண்களை தேவசாட்சிகளாய் மாற்றி ஆணுக்கு இணையானவள் பெண் என்று காட்டுகிறார். நாம் நமது தாயை, சகோதரியை, மனைவியை, மகளை, தோழியை, சக பெண்களை எப்படிப் பார்க்கிறோம்? இதுவரை இது குறித்து சிந்திக்கா விட்டால், இனி சிந்திக்கவும் செயல்படவும் இதை ஒரு வாய்ப்பாகக் கருதுங்கள். இயல்பாகவே நீங்கள் பெண்களை மதிப்பவர் எனில் நீங்கள் இறைவனின் கரங்களில் பத்திரமாய் இருப்பவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x