Published : 06 Dec 2022 04:36 AM
Last Updated : 06 Dec 2022 04:36 AM

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் இன்று மாலை மகா தீபம்

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மின் விளக்குளால் ஜொலிக்கும் அண்ணாமலையார் கோயில்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் இன்று மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படவுள்ளது.

தென்கயிலாயம் எனப்படும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா, காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த நவம்பர் 24-ம் தேதி தொடங்கியது. மகா தேரோட்டம் கடந்த 3-ம் தேதி நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான கார்த்திகை தீபத் திருவிழா இன்று (டிசம்பர் 6-ம் தேதி) நடைபெறவுள்ளது. இதையொட்டி கோயில் முழுவதும் வண்ண மலர்கள், பழங்கள், கரும்பு, வாழை மரங்கள் உள்ளிட்டவற்றால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ராஜகோபுரம் உள்ளிட்ட நவ கோபுரங்களும் மின் விளக்குகளால் ஜொலிக்கின்றன.

ஏகன் - அநேகன் என பஞ்ச பூதங்களும் நானே என்பதை விளக்கும் விதமாக, மூலவர் சன்னதியில் இன்று அதிகாலை 4 மணி அளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டு, பிரம்ம தீர்த்தத்தில் தீர்த்தவாரி நடைபெறுகிறது.

இதையடுத்து, பஞ்ச மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் தீப தரிசன மண்டபத்தில் பிற்பகல் 3.30 மணி முதல் எழுந்தருள்கின்றனர். இதன்பிறகு, ஆண் - பெண் சமம் என்ற தத்துவத்தை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில் மாலை 5.55 மணிக்கு அர்த்தநாரீஸ்வரர் காட்சி தர உள்ளார். இந்நிகழ்வு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும்.

பின்னர், தங்கக் கொடி மரம் உள்ள அகண்டத்தில் தீபச் சுடர் ஏற்ற, 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் பருவதராஜகுல வம்சத்தினர் மகா தீபத்தை ஏற்றி வைக்க உள்ளனர். பரணி தீபம், அர்த்தநாரீஸ்வரர் மற்றும் மகா தீபத்தை தரிசிக்க முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால், கோயிலில் சுமார் 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருவண்ணாமலை உச்சியில் இன்று மாலை ஏற்றப்படும் மகா தீபத்தை11 நாட்களுக்கு தரிசிக்கலாம். இதற்காக, 5 அடி 9 அங்குலம் உயரம் கொண்ட மகா தீபக் கொப்பரை, அண்ணாமலை உச்சிக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டது. 1,100 மீட்டர் காடா துணி மற்றும் 4,500 கிலோ நெய் பயன்படுத்தப்பட உள்ளது.

மலையே மகேசன் என போற்றப்படும் அண்ணாமலை உச்சியில் ஜோதி வடிவமாக அண்ணாமலையார் காட்சி கொடுப்பதால், கோயிலில் உள்ள மூலவர் சன்னதியின் நடை அடைக்கப்படும். பின்னர், நாளை அதிகாலை வழக்கம்போல் திறக்கப்பட்டு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெறும்.

கண்காணிப்பு தீவிரம்: கார்த்திகை தீபம், பவுர்ணமி அடுத்தடுத்த நாட்களில் வருவதால் இன்றும் நாளையும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 30 லட்சம் பக்தர்கள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தீபத் திருவிழா பாதுகாப்பு பணிக்கு, வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் 12,000 போலீஸார் ஈடுபட்டுள்ளனர். கோயில் மற்றும் கிரிவலப் பாதையில் சுமார் 500 கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x