Published : 04 Dec 2022 07:21 AM
Last Updated : 04 Dec 2022 07:21 AM

108 வைணவ திவ்ய தேச உலா - 79 | திருமூழிக்களம் லட்சுமணப் பெருமாள் கோயில்

முனைவர் கே.சுந்தரராமன்

108 வைணவ திவ்ய தேசங்களில், கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் திருமூழிக்களம் லட்சுமணப் பெருமாள் கோயில், 79-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. இத்தலத்தில் லட்சுமணரும், பரதனும் வழிபாடு செய்துள்ளனர். நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளனர்.

நம்மாழ்வார் பாசுரம்:

பூந்துழாய் முடியாருக்கு பொன் ஆழிக் கையாருக்கு

ஏந்துநீர் இளம்குருகே திருமூழிக் களத்தாருக்கு

ஏந்துபூண் முலை பயந்து என் இணை மலர்க்கண் நீர் ததும்ப

தாம்தம்மைக் கொண்டு அகல்தல் தகவு அன்று என்று உரையீரே.

மூலவர் : லட்சுமணப் பெருமாள் (திருமூழிக்களத்தான், அப்பன், சுக்திநாதன்) | தாயார் : மதுரவேணி நாச்சியார் | தீர்த்தம்: சங்க தீர்த்தம், சிற்றாறு, பெருங்குளம் | விமானம் : சௌந்தர்ய விமானம்

தல வரலாறு: கிருஷ்ணாவதாரத்தின்போது, கிருஷ்ணர் துவாரகையில் ராமபிரான், லட்சுமணர், பரதன், சத்ருகனன் விக்கிரகங்களை வழிபட்டு வந்தார். ஒருசமயம் வெள்ளம் ஏற்பட்டு, இப்பகுதி தண்ணீரில் மூழ்கியது. அப்போது வாக்கேல் மைமல் முனிவரிடம் இந்த விக்கிரகங்கள் கிடைத்தன. அன்றிரவு அவரது கனவில் தோன்றிய திருமால், பாரதப்புழா ஆற்றங்கரையோர தலங்களில் விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்யப் பணித்தார்.

அதன்படி திருச்சூர் மாவட்டம் திருப்பறையார் ராமர் கோயில், இரிஞ்சாலக்குடா பரதன் கோயில், பாயமல் சத்ருக்னன் கோயில், எர்ணாகுளம் மாவட்டம் திருமூழிக்களம் லட்சுமணப் பெருமாள் கோயில் அமைந்தன.

திருமொழிக்களம்: முன்பொரு காலத்தில் ஹரித மகரிஷி இத்தலத்தில் திருமாலை நோக்கி தவம் இயற்றினார். மகரிஷியின் தவத்தில் மகிழ்ந்த திருமால், அவருக்கு வரம் அளிப்பதாக உறுதி அளித்தார். அதற்கு மகரிஷி, “உலக மக்கள் அனைவரும் தங்களை வந்து அடைவதற்கான எளிய வழியைக் கூற வேண்டும்” என்றார். உடனே திருமால் மகரிஷிக்கு ஸ்ரீசுக்தியை (திருமொழி) இத்தலத்தில் அருள்வதாகக் கூறினார். மேலும் மக்கள் அனைவரும் செய்து கொண்டிருக்கும் தொழிலுக்கு (வர்ணாசிரம தர்மப்படி) ஏற்ப, எளிதில் தன்னை அடைவதற்கு கடைபிடிக்க வேண்டிய பூஜை நெறிமுறைகளை இந்த திருமொழி போதிக்கும் என்று அருளினார். அதனால் இத்தலம் திருமொழிக்களம் என்றும் காலப்போக்கில் திருமூழிக்களம் என்றும் அழைக்கப்படுகிறது. பெருமாளும் திருமொழிக்களத்தான் என்று அழைக்கப்படுகிறார்.

தலச் சிறப்பு: கலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் தலமாக, ஒருகாலத்தில் திருமூழிக்களம் விளங்கியுள்ளது. ஸ்ரீசுக்தி இங்கு அருளப்பட்டதால், பல நூல்கள் ஆராயப்பட்டன. கற்றறிந்த சான்றோர் பலர் குழுமியதால், இந்நகரம் கல்வி மாநகராகவும், கலை மாநகரமாகவும் சிறப்பு பெற்றுள்ளது. ராமபிரான் வனவாசம் செல்லும்போது, சித்ரகூடத்தில் தங்கினார். அப்போது ராமபிரானை சந்திக்க பரதன் வந்திருந்தார், இதைக் கண்ட லட்சுமணன், ராமபிரானுடன் போர் செய்யவே பரதன் வருவதாக நினைத்து, அவரைத் தாக்க முற்பட்டார், பிறகு தன் தவறுக்கு மன்னிப்பு கோரி இத்தலத்து பெருமாளை வழிபட்டார். அப்போது பரதனே வந்து லட்சுமணனை ஆரத் தழுவி இன்சொல் கூறினார். இதனாலேயே இத்தலம் ‘திருமொழிக்களம்’ என்ற பெயரை பெற்றதாக பெரியோர் கூறுவர்.

கோயில் அமைப்பு: திருமூழிக்களம் தலத்தில் கோபுரம், மண்டபம் போன்றவற்றை லட்சுமணன் கட்டி பல திருப்பணிகள் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. சௌந்தர்ய விமானத்தில் கீழ் உள்ள கருவறையில் 4 திருக்கரத்துடன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் மூலவர் அருள்பாலிக்கிறார். மேல் இரண்டு கைகளில் சங்கு, சக்கரம், வலது கீழ்க்கையில் கதை, இடது கீழ்க்கையில் தாமரை மலருடன் அருள்பாலிக்கிறார். சிவபெருமானுக்கு தனி சந்நிதி உள்ளது.

திருவிழாக்கள்: சித்திரை திருவோண நட்சத்திரத்தில் ஆராட்டு விழா நடைபெறும். ஒவ்வொரு மாத திருவோண தினத்திலும் சிறப்பு திருமஞ்சனம், வழிபாடுகள் நடைபெறும். ஆடி மாதம் முழுவதும் ராமாயண மாதமாக கருதப்படுவதால் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இத்தலத்தில் வழிபாடு செய்தால், சகோதரர்களுக்குள் இருக்கும் பகை நீங்கும் என்பது ஐதீகம்.

வேத பாடங்களை கற்க, இறை பக்தி குறையாமல் இருக்க, செய்த தவறுகளுக்கு பிராயச்சித்தம் தேட, பிளவுபட்ட உறவுகள் மீண்டும் ஒன்று சேர திருமூழிக்கள பெருமாள் அருள்புரிவார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x