Published : 03 Dec 2022 03:13 AM
Last Updated : 03 Dec 2022 03:13 AM

108 வைணவ திவ்ய தேச உலா - 78 | திருக்காட்கரை காட்கரையப்பன் கோயில்

முனைவர் கே.சுந்தரராமன்

108 வைணவ திவ்ய தேசங்களில், கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் திருக்காட்கரை காட்கரையப்பன் கோயில் 78-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. வாமன மூர்த்திக்கு அமைந்துள்ள சில கோயில்களில் இதுவும் ஒன்று. வட்ட வடிவ கேரள பாணியில் அமைக்கப்பட்டுள்ள இக்கோயிலை பரசுராமர் கட்டியதாகக் கூறப்படுகிறது.

அரக்க மன்னர் மகாபலி சக்கரவர்த்தியை, திருமால் வாமன அவதாரம் எடுத்து நிலத்தில் அழுத்தி அழித்த இடமாக இருப்பதால் இத்தலம் கூடுதல் முக்கியத்துவத்தைப் பெறுகிறது. இத்தலத்தை நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.

நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து என்னை

ஈர்மை செய்து என்னுயிராய் என்னுயிர் உண்டான்

சீர்மல்கு சோலை தென் காட்கரை என் அப்பன்

கார்முகில் வண்ணன்தன் கள்வம் அறிகிலேனே.

மூலவர் : காட்கரையப்பன் | தாயார் : பெருஞ்செல்வ நாயகி, வாத்ஸல்ய வல்லி | தீர்த்தம் : கபில தீர்த்தம் | விமானம் : புஷ்கல விமானம்

தல வரலாறு

மகாபலி சக்கரவர்த்தி மிகுந்த வள்ளல் தன்மை கொண்டவர். அசுர குலத்தில் பிறந்திருந்தாலும், மிகவும் நல்லவராக இருந்து அரசாட்சி புரிந்து வந்தார். இருப்பினும், தன்னைவிட வள்ளல்தன்மை கொண்டவர் இவ்வுலகில் யாருமில்லை என்ற ஆணவம் அவரிடம் மேலோங்கி இருந்தது.

திருமால், மகாபலிக்கு தகுந்த பாடம் கற்பிக்க எண்ணினார். அதனால் குள்ள (வாமன) வடிவம் எடுத்து மகாபலியின் முன் நின்றார் திருமால். தனக்கு மூன்றடி நிலம் வேண்டும் என்று மகாபலியிடம் கேட்டார். குள்ளமானவருக்கு எதற்காக மூன்றடி நிலம் என்று மகாபலி திருமாலிடம் கேட்கும்போது, வந்திருப்பது திருமால் என்பதை உணர்ந்தார் குரு சுக்கிராச்சாரியார். அவருக்கு தானம் கொடுப்பதை தடுத்தார். கேட்டவருக்கு இல்லை என்று கூறினால், இதுவரை செய்த தானங்களுக்கு பலன் இருக்காது என்று நினைத்த மகாபலி, நிலம் கொடுப்பதற்கு சம்மதம் தெரிவித்தார்.

இதுவரை குள்ளமாக இருந்த திருமால், இப்போது விஸ்வரூபம் எடுத்தார், ஓரடியால் பூமியையும், மற்றொரு அடியால் வானத்தையும் அளந்த திருமால், மூன்றாவது அடிக்கு நிலம் எங்கே என்று கேட்டார். உடனே மகாபலி தலை வணங்கி, தன் தலையைத் தவிர தன்னிடம் ஏதும் இல்லை என்று கூற, திருமால், அவரை அப்படியே பூமியில் அழுத்தி தன்னுடன் இணைத்துக் கொண்டார். வருடத்துக்கு ஒருமுறை தனது மக்களை சந்திக்க வேண்டும் என்று திருமாலிடம் மகாபலி விண்ணப்பம் வைக்க, அதை ஏற்று அருள்பாலித்தார் திருமால்.

திருமால் மகாபலிக்கு அருள்புரிந்தது ஆவணி மாதம் திருவோண நட்சத்திர தினம் ஆகும். இதை நினைவுகூரும் வகையில் கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மகாபலி இவ்விழாவில் பங்கேற்று தன் நாட்டு மக்களை வாழ்த்துவதாக நம்பிக்கை.

கோயில் அமைப்பும் சிறப்பும்

தமிழர்களின் வழிபாட்டுத் தலமாக இத்தலம் இருந்துள்ளது. கிபி 9 முதல் 12-ம் நூற்றாண்டு வரை சேர மன்னர்கள் இத்தலத்தை பராமரித்துள்ளனர். 1825-ம் ஆண்டுக்குப் பிறகு திருவிதாங்கூர் அரசு இக்கோயிலை எடுத்துக் கொண்டது.

புஷ்கல விமானத்தின் கீழ் உள்ள கருவறையில் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்கரையப்பன் பெருமாள் அருள்பாலிக்கிறார். வாமன அவதாரப் பெருமாளாக இருப்பதால் இவருக்கு கதாயுதம் கிடையாது. பெருஞ்செல்வ நாயகி தாயாருக்கு தனிச்சந்நிதி இல்லை. 10 முதல் 13-ம் நூற்றாண்டு கல்வெட்டுகள் இத்தலத்தில் காணப்படுகின்றன.

கோயில் நுழைவாயிலில் மகாபலியின் ஆஸ்தானம் / சிம்மாசனம் உள்ளது. பக்தர்கள் இவ்விடத்தில் விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். முகப்பு மண்டபத்தில் திருமால் வாமனராக குள்ள வடிவம் எடுத்த காட்சி மரச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு வெளியே தேவி பகவதி, சாஸ்தா, சுந்தர யக்‌ஷி, கோபால கிருஷ்ணர், நாகர் ஆகியோர் தனி சந்நிதியில் உள்ளனர். மகாபலி சிவபக்தராக இருந்ததால், அவர் வழிபட்டதாக கூறப்படும் சிவலிங்கம் இத்தலத்தில் உள்ளது.

திருவிழாக்கள்

ஆவணி மாத அஸ்த நட்சத்திரத்தில் திருவோண உற்சவம் தொடங்கும். ஒரு காலத்தில் 28 நாட்கள் நடைபெற்ற ஓணத் திருவிழா, தற்போது 10 நாட்கள் மட்டுமே நடைபெறுகிறது. தோஷ நிவர்த்தி, பாவ நிவர்த்தி நீங்க பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர். சந்தான பிராப்திக்காக சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x