Published : 03 Dec 2022 01:11 AM
Last Updated : 03 Dec 2022 01:11 AM

108 வைணவ திவ்ய தேச உலா - 77 | திருவித்துவக்கோடு உய்யவந்த பெருமாள் கோயில்

முனைவர் கே.சுந்தரராமன்

108 வைணவ திவ்ய தேசங்களில், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள திருவித்துவக்காடு உய்யவந்த பெருமாள் கோயில் 77-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. திருமிற்றக்கோடு, திருவீக்கோடு, ஐந்து மூர்த்தி கோயில் என்று அழைக்கப்படும் இத்தலத்தை குலசேகராழ்வார் 10 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார்.

தருதுயரம் தடாயேல் உன் சரணல்லால் சரணில்லை

விரைகுழவும் மலர்பொழில் சூழ் வித்துவக் கோட்டு அம்மானே

அரிசினத்தால் ஈன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன்

அருள்நினைந்தே அழுங்குழவி அதுவே போல் இருந்தேனே!

மூலவர் : உய்யவந்த பெருமாள் (அபயப்ரதன்) | தாயார் : வித்துவக்கோட்டு வல்லி (பத்மாசினி நாச்சியார்) | தீர்த்தம் : சக்கர தீர்த்தம் | விமானம் : தத்வகாஞ்சன விமானம்

தல வரலாறு: பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் மேற்கொண்டபோது, தென்னிந்திய பகுதியில் நீளா நதிக்கரையோரம் வந்தனர். அந்த இடத்தின் அழகு, தெய்வீகம் கலந்த அமைதி அவர்களைக் கவர்ந்ததால், அங்கேயே சில காலம் தங்க முடிவு செய்தனர். அப்போது தினமும் பூஜை செய்வதற்காக கோயில் கட்டி அதில் விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்தனர். முதலில் அர்ஜுனன் திருமால் சிலையை அமைத்தார். அதுவே இத்தலத்தின் மூலஸ்தானமாக கருதப்படுகிறது.

அர்ஜுனனைத் தொடர்ந்து தர்மர், நகுல - சகாதேவன், பீமன் ஆகியோர் தனித்தனியாக பெருமாளை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தனர்.

கணபதி, தட்சிணாமூர்த்தி, சாஸ்தா, நாகர், பகவதி தேவி ஆகியோருக்கும் தனி சந்நிதிகள் உள்ளன. பாண்டவர்கள் பெரும்பாலான நாட்கள் இங்கேயே தங்கியிருந்து வழிபாடுகள் செய்ததாகக் கூறப்படுகிறது. வெகுகாலத்துக்குப் பிறகு பாண்டிய மன்னர் ஒருவரால் சுற்றுமதில் கட்டப்பட்டது.

ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியைச் சேர்ந்த முனிவர், காசிக்கு பயணம் மேற்கொண்டு அங்கேயே தங்கியிருந்தார். அவரது தாயார் உடல்நலம் குன்றியிருப்பதாக தகவல் அறிந்ததும், காசியில் இருந்து புறப்பட்டார். பக்தன் மீது கொண்ட அன்பால், காசி விஸ்வநாதர் அவரது குடையில் யார் கண்களுக்கும் தெரியாதபடி மறைந்து கொண்டார். முனிவர் வரும்வழியில் இக்கோயிலைக் கண்டதும், தனது குடையை கோயில் பலிபீடத்தில் வைத்துவிட்டு, நீராடச் சென்றார்.

முனிவர் வந்து திரும்பிப் பார்க்கும்போது, அவரது குடை மறைந்து விட்டது பலிபீடம் இருந்த இடத்தில் ஒரு சிவலிங்கம் இருப்பதைக் காண்கிறார். காசி விஸ்வநாதரே, பஞ்ச பாண்டவர்கள் பிரதிஷ்டை செய்த கோயிலுக்கு வந்து விட்டதாகவும், இதற்கு முனிவர் காரணமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

பெருமாள் கோயிலுக்குச் செல்வதற்கு முன்னர், சிவபெருமானை தரிசித்துவிட்டுச் செல்ல வேண்டும் என்பதால், இத்தலம் சைவ – வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. ஐந்து பெருமாள்கள் இருந்து அருள்பாலிப்பதால் இத்தலம் ‘ஐந்து மூர்த்தி தலம்’ என்று அழைக்கப்படுகிறது. தற்போது சிவலிங்கத்தைச் சுற்றி தனி கோயில் எழுப்பப்பட்டுள்ளது.

கோயில் அமைப்பும் சிறப்பும்: தத்வகாஞ்சன விமானத்தின் கீழ் உள்ள கருவறையில் மூலவர் உய்யவந்த பெருமாள் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். அம்பரீஷன் இத்தல பெருமாளை தரிசித்துள்ளார். அவருக்காகவே பெருமாள் தெற்கு நோக்கி எழுந்தருளியுள்ளதாகக் கூறப்படுகிறது.

பத்து நதிகள் ஒன்றாக இணையும் பாரதப்புழா நதிக்கரையில் கோயில் அமைந்துள்ளதாலும், காசி விஸ்வநாதரே இங்கு எழுந்தருளியிருப்பதாலும், இத்தலத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறப்பு.

கோயில் சுவர்களில் சுதைச் சிற்பங்கள், சிற்ப வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. அர்ஜுனன் தவம் செய்த காட்சி, கிருஷ்ண லீலா காட்சிகள் பக்தர்களை பெரிதும் கவர்ந்துள்ளன.

திருவிழாக்கள்: ​​​​​​​வைகுண்ட ஏகாதசி, திருவோண உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. பக்தர்கள் பெருமாளுக்கு தீபம் ஏற்றி, துளசியால் அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர்தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x