Published : 30 Nov 2022 08:44 AM
Last Updated : 30 Nov 2022 08:44 AM

108 வைணவ திவ்ய தேச உலா - 76 | திருநாவாய் நவ முகுந்தன் கோயில் 

முனைவர் கே.சுந்தரராமன்

108 வைணவ திவ்ய தேசங்களில், கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள திருநாவாய் நவ முகுந்தன் கோயில், 76-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. இத்தலத்தில் 9 யோகிகள் தவம் மேற்கொண்டதால், நவ யோகித்தலம் என்று அழைக்கப்பட்ட தலம், நாவாய் தலம் என்றும் திருநாவாய் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலத்தை திருமங்கையாழ்வார், பெரியாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

நம்மாழ்வார் பாசுரம்:

மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்

கண்ணாளன் உலகத்துயிர் தேவர்கட் கெல்லாம்

விண்ணாளன் விரும்பியுரையும் திரு நாவாய்

கண்ணாரக் களிக்கின்றது இங்கு என்று கொல் கண்டே.

மூலவர் : நாவாய் முகுந்தன் (நாராயணன்) | தாயார் : மலர்மங்கை நாச்சியார் | தீர்த்தம் : கமல தடாகம் | விமானம் : வேத விமானம்

தல வரலாறு: முன்பொரு காலத்தில் திருமகளும், கஜேந்திரனும் தடாகத்தில் இருந்து பறித்த தாமரை மலர்களால் திருமாலுக்கு அர்ச்சனை செய்து வந்தனர். ஒரு சமயம் கஜேந்திரனுக்கு தாமரை மலர்கள் கிடைக்கவில்லை. இதுகுறித்து வருத்தமடைந்த கஜேந்திரன், தனது நிலையை திருமாலிடம் கூறினான்.

உடனே திருமால், திருமகளை அழைத்து, இனிமேல் தாமரை மலர்களைப் பறிக்க வேண்டாம் என்று தெரிவித்தார், மேலும் கஜேந்திரனுக்காக விட்டுக் கொடுக்கவும் பணித்தார். திருமால் கூறியபடி திருமகள் தாமரை மலர்களைப் பறிக்காமல் இருந்தார். நிறைய மலர்கள் கிடைத்த மகிழ்ச்சியில் இருந்த கஜேந்திரன் அவற்றால் தினமும் திருமாலை பூஜித்து வந்தான். பூஜை சமயத்தில், திருமகளை தன்னுடன் ஏக சிம்மாசனத்தில் அமரச் செய்தார் திருமால். கஜேந்திரனின் பூஜையை ஏற்று திருமால் திருமகளுடன் சேர்ந்து, அவனுக்கு காட்சி கொடுத்ததாக வரலாறு தெரிவிக்கிறது. கேரள மாநிலத்தில், இத்தலத்தில் மட்டுமே திருமகளுக்கு தனி சந்நிதி உள்ளது.

கோயில் அமைப்பும் சிறப்பும்: நவ யோகிகள் அமர்ந்து தவம் செய்த இத்தலத்தில் வேத விமானத்தின் கீழ் உள்ள கருவறையில் நாவாய் முகுந்தன் பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். மூலவரின் முழங்காலுக்கு கீழான பகுதிகள் பூமிக்கடியில் சென்ற நிலையில் உள்ளது.

கோயில் சுற்றுப் பகுதியில் கணபதி, திருமகள், ஐயப்பனுக்கு சந்நிதிகள் உள்ளன. ஆற்றுக்கு அக்கரையில் பிரம்மதேவருக்கும், சிவபெருமானுக்கும் தனி கோயில் உள்ளது. இதன் காரணமாக் இத்தலம் மும்மூர்த்தி தலம் என்று அழைக்கப்படுகிறது.

திருமங்கையாழ்வார் இத்தலத்தை திருக்கோஷ்டியூர் மற்றும் திருநறையூரோடு ஒப்பிட்டு மங்களாசாசனம் செய்துள்ளார். கோயில் சுற்றுச் சுவர்களில் பழமையான ஓவியங்கள் காணப்படுகின்றன.

துவாபர யுகத்தில் கிருஷ்ணர் பஞ்ச பாண்டவர்களுடன் சேர்ந்து இத்தலத்தில் பித்ரு பூஜை செய்துள்ளனர். ஆடி அமாவாசை தினத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இத்தலத்துக்கு வந்திருந்து முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

திருவிழாக்கள்: வைகுண்ட ஏகாதசி, திருவோணம் உற்சவங்கள், மாமாங்கத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

சென்னை - கள்ளிக்கோட்டை ரயில் பாதையில் திருநாவாய் ரயில் நிலையம் அமைந்துள்ளது. பாலக்காட்டில் இருந்தும் பேருந்துகள் உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x