Published : 29 Nov 2022 05:14 AM
Last Updated : 29 Nov 2022 05:14 AM

108 வைணவ திவ்ய தேச உலா - 75 | திருப்பதி வெங்கடாசலபதி கோயில்

முனைவர் கே.சுந்தரராமன்

108 வைணவ திவ்ய தேசங்களில், ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதி வெங்கடாசலபதி கோயில் 75-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. வேம் - பாவம், கடா - அழித்தல், ஈஸ்வரா - மிகப் பெரிய கடவுள் என்று பொருள் தருவதால் பெருமாள் வெங்கடேஸ்வரா என்று அழைக்கப்படுகிறார். ஸ்ரீநிவாசன், பாலாஜி, வேங்கடவன், கோவிந்தன் என்று பல பெயர்களால் அழைக்கப்படும் பெருமாளை தரிசிக்க எப்போதும் பக்தர்கள் குவிந்த வண்ணம் இருப்பர்.

கடல் மட்டத்தில் இருந்து 853 மீ உயரத்தில் உள்ள திருமலை, சேஷாத்ரி, நீலாத்ரி, கருடாத்ரி, அஞ்சனாத்ரி, விருஷபாத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி ஆகிய 7 மலைகளைக் கொண்டிருப்பதால் வெங்கடாஜலபதி ஏழுமலையான் என்றும் அழைக்கப்படுகிறார்.

இத்தலத்தை குலசேகராழ்வார் பெருமாள் திருமொழியில் மங்களாசாசனம் செய்துள்ளார்.

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே

நெடியானே வேங்கடவா நின்கோவிலின் வாசல்

அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்

படியாய்க் கிடந்துநின் பவளவாய் காண்பேனே.

மூலவர் : வெங்கடாசலபதி | உற்சவர் : மலையப்ப சுவாமி, கல்யாண வெங்கடேஸ்வரர் | தீர்த்தம் : சுவாமி புஷ்கரிணி | ஆகமம் : வைகானஸம் | விமானம் : ஆனந்த விமானம்

தல வரலாறு: பூலோகத்தில் கலியுகம் தொடங்கியதும், அநியாயங்கள் பெருகியதால், காஷ்யப முனிவர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. அதில் முனிவர்கள் பலர் சேர்ந்து, மீண்டும் இறைவன் பூலோகத்தில் அவதாரம் செய்ய வேண்டும் என்பதற்காக யாகம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி யாகம் தொடங்கியது. யாகத்தைக் காண வந்த நாரத முனிவர், யாகத்தின் பலனை யாருக்கு தரப்போகிறீர்கள் என்று வினவினார்.

மும்மூர்த்திகளில் சாந்தமாக உள்ளவருக்கே யாகத்தின் பலனை அளிக்க வேண்டும் என்று முனிவர்கள் முடிவு செய்தனர். மும்மூர்த்திகளில் சாந்தமானவரைத் தேடி பிருகு முனிவர் வைகுண்டம் சென்று திருமாலின் மார்பில் எட்டி உதைத்தார். திருமால் கோபப்படாமல் இருந்ததால், அவருக்கே யாக பலனைத் தருவதாக முனிவர்கள் முடிவு செய்தனர்.

திருமாலை பிருகு முனிவர் எட்டி உதைத்ததைக் கண்ட லட்சுமி கோபம் கொண்டார். முனிவரை தண்டிக்க வேண்டும் என்று திருமாலை லட்சுமி கேட்டுக் கொண்டார். ஆனால் திருமால் அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார். இதனால் லட்சுமி கோபம் கொண்டு பூலோகத்தை அடைந்து தவம் மேற்கொள்கிறார்.

திருமகளைத் தேடி வந்த திருமால் பூவுலகம் முழுவதும் சுற்றித் திரிந்து, வேங்கடமலையில் வந்து ஒரு புற்றில் கண்மூடி அமர்ந்தார். அவருக்கு பசித்ததால், நாரத முனிவர் இதுகுறித்து தவத்தில் இருந்த திருமகளிடம் கூறினார். திருமகள் கலக்கமுற்றதால், நாரத முனிவர் திருமாலின் பசியைப் போக்க வழி கூறினார்.

அதன்படி பிரம்மதேவரும் சிவபெருமானும் பசுவாகவும் கன்றாகவும் மாறினர். திருமகள் அவற்றின் உரிமையாளராக வேடம் தரித்து அப்பகுதியை ஆட்சி புரிந்த மன்னரிடம் விற்கச் சென்றார். மன்னரும் அவற்றை வாங்கிக் கொண்டார்.

ஒருசமயம் பசு மேய்ச்சலுக்குச் செல்லும்பொது, திருமால் அமர்ந்திருந்த புற்றுக்குச் சென்று பால் சொரிந்தது இதைக் கண்ட இடையன், கோடரியால் பசுவை அடிக்க முற்படும்போது, கோடரி தவறி புற்றின் மீது விழுந்தது. அதில் திருமாலின் தலையில் காயம் ஏற்பட்டு குருதி சிந்தியது. தன் காயத்துக்கு மருந்தளிக்க மூலிகையைத் தேடும் சமயத்தில் அருகே வராக மூர்த்தியின் ஆசிரமத்தைக் காண்கிறார்.

அங்கிருந்த வகுளாதேவி (முற்பிறவியில் கண்ணனின் தாய் யசோதை) திருமாலைக் கண்டதும் தாயைப் போல் அன்பு பாராட்டி மகிழ்ந்தார். திருமால் அவரை ‘அம்மா’ என்று அழைத்ததும், வகுளாதேவி திருமாலுக்கு ‘சீனிவாசன்’ என்று பெயரிட்டு மகிழ்ந்தார். காயத்துக்கு மருந்தளித்து, நிறைய பழங்களைத் தந்தார் வகுளாதேவி.

சந்திரகிரியை ஆண்ட ஆகாச ராஜன் பிள்ளை வரம் வேண்டி, குலகுரு சுகமா முனிவரின் ஆலோசனைப்படி புத்திர காமேஷ்டி யாகம் செய்ய நேரம் குறித்தார். யாகம் செய்யும் இடத்தை தூய்மைப்படுத்தும் சமயத்தில் அங்கு பூமியில் உள்ள பேட்டிக்குள் தாமரையில் ஒரு பெண் குழந்தை படுத்திருப்பதைக் காண்கிறார். குழந்தைக்கு ‘பத்மாவதி’ என்று பெயரிட்டு வளர்த்து வருகிறார் ஆகாச ராஜன்.

ராமாவதாரத்தில் வேதவதி என்ற பக்தை, ராமபிரானை மணாளனாக அடைய விரும்பினார். பின்னாளில் அவரை மணம் முடிப்பதாக ராமபிரானும் உறுதியளிக்கிறார். அதன்படி வேதவதி தற்போது பத்மாவதியாக ஆகாச ராஜனின் மகளாக அவதரித்துள்ளார்.

வேடுவராக வந்த சீனிவாசனுக்கும் பத்மாவதிக்கும் இனிதே திருமணம் நடைபெற்றது. அதன்பின் சீனிவாசப் பெருமாள் திருமலையில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். சோழ மன்னன் தொண்டைமான் தேவலோக சிற்பி விஸ்வகர்மாவை அழைத்து சீனிவாசப் பெருமாளுக்கு கோயில் எழுப்பினார். பத்மாவதி அலமேலுமங்காபுரத்தில் அருளாட்சி செய்கிறார். சீனிவாசப் பெருமாள் தினமும் திருச்சானூர் வந்து தங்கிவிட்டு, காலை திருமலை திரும்புவதாக ஐதீகம்.

கோயில் சிறப்பு: பெருமாள் ஆனந்த விமானத்தின் கீழ் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். ராஜ கோபுரம் நாற்கோண அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்குள் பிரதிமை மண்டபம் ரங்க மண்டபம், திருமலை ராய மண்டபம், சாளுவ நரசிம்மர் மண்டபம், ஜனாமகால், த்வஜஸ்தம்ப மண்டபம் ஆகியவை உள்ளன. மேலும் ராமபிரான், சீதாபிராட்டி, வரதராஜ சுவாமி, யோக நரசிம்மர், கருடாழ்வார், ராமானுஜர் சந்நிதிகளும் சங்கீர்த்தன பண்டார அறையும் மடப்பள்ளியும் உள்ளன. திருப்பதி லட்டு உலகப் பிரசித்தி பெற்றது.

திருவிழாக்கள்: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தின உற்சவம், வார உற்சவம், மாதாந்திர உற்சவம், வருடாந்திர உற்சவங்கள் என எப்போதும் திருவிழா நடந்துகொண்டே இருக்கும். 365 நாட்களில் சுவாமிக்கு 470 விழாக்கள், உற்சவங்கள், சேவைகள் நடந்துக்கொண்டே இருப்பது விசேஷம். அதனால்தான் திருப்பதி ஏழுமலையான் கோயிலை ‘நித்ய கல்யாணம், பச்சை தோரணம்’ கொண்ட கோயில் என பக்தர்கள் அழைக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x