

திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான நேற்று, பஞ்சமி தீர்த்தவாரி புனித நீராடல் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம் கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு மாடவீதி வாகன சேவை, இந்த ஆண்டு மீண்டும் தொடங்கியது. அதனால் பக்தர்கள் அதிகளவில் பங்கேற்றனர். நிறைவு நாளான நேற்று காலை, கோயில் அருகே உள்ள பத்ம குளத்தில் பஞ்சமி தீர்த்தவாரி வெகு விமரிசையாக நடத்தப்பட்டது.
இதைமுன்னிட்டு, நேற்று அதிகாலை திருமலையில் இருந்து பட்டு சீர்வரிசை தாயாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவை அலிபிரி படிகள் வழியாக திருச்சானூருக்கு கொண்டு வரப்பட்டன. அதன் பின்னர், உற்சவ மூர்த்திகள் ஊர்வலமாக பத்ம குளத்திற்கு கொண்டு வரப்பட்டனர். அங்குதாயாருக்கும், சக்கரத்தாழ்வாருக்கும் சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதன் பின்னர் குறிப்பிட்ட சுபமுகூர்த்த நேரத்தில் பஞ்சமி தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அப்போது, அங்கு காத்திருந்த திரளான பக்தர்களும் புனித நீராடினர்.