

தர்மத்தின் தலைவனாகவும், சத்தியத்தின் வடிவமாகவும் போற்றப்படுபவன் ஸ்ரீராமன். அவனது சரிதத்தில் ஏகப்பட்ட சுவாரஸ்யமான சம்பவங்கள் இருப்பினும், அவன் அனுமனோடு கூட்டணி அமைத்த பின் நிகழ்பவை அனைத்தும் அழகும்-ஆனந்தமும், பணிவும்-பக்தியும், புத்தியும்-சக்தியுமென வாழ்க்கைப் பாடங்கள். என்ன வரம் வேண்டுமென்று கேட்டு பின்னர் மாட்டிக்கொண்டவர்களில் தசரதனும் ஒருவன்.
இவையெல்லாம் இறைவன் அமைத்துக் கொடுத்தபடி நடப்பவைதான். ஆனால் அந்த நேரத்தில் மிகப்பெரிய மனச்சுமையோடு வரத்தைக் கொடுத்து, வாக்கைக் காப்பாற்றுகிறான். ஸ்ரீராமன் மகிழ்வோடு கானகம் போகிறான்; ராவணனால் சீதை கவர்ந்து செல்லப்பட்ட பின் அன்றலர்ந்த தாமரை போலிருந்த ராமன் சிறிது வாடித்தான் போகிறான். அதன்பின்னர்தான் அனுமனைக் கண்டு புதிய பலம் பெறுகிறான்.
இங்கே நீங்கள் காணும் ஸ்ரீராமனும் ஆஞ்சநேயனுமான சிற்பம் கோவை மாநகரில் உள்ள மேலைச் சிதம்பரம் என்று போற்றப்படும் பேரூர் என்ற திருக்கோயிலில் இருக்கிறது. இந்தப் பேரூர் திருத்தலத்தில் உள்ள நடராஜர் இருக்கும் மண்டபம் கனகசபை, சிற்ப எழிலுக்குப் பேர்போனது. இன்றும் கோயில் கட்டும்போது போடப்படும் ஒப்பந்தங்களில் ‘பேரூர் தவிர்த்து’ என்றே போடுவார்களாம். இதுபோல் செய்ய முடியாது என்று அர்த்தம் (இத்தோடு இன்னும் இரண்டு, மூன்று கோயில்களும் சேர்த்து). இந்த நடராஜர் மண்டபத்தில் உள்ள எட்டுச் சிற்பங்கள் ஒரே கல்லினால் ஆன அற்புதங்கள்.
இந்த ராமர் சிற்பம் அவற்றின் ஒன்றின் பின் பக்கம் அமைந்துள்ளது. இங்கே ராமர் அயர்வாக உட்கார்ந்து இருக்க, ஆஞ்சநேயனோ ‘கண்டேன் சீதையை’ என்று வாய் பொத்திப் பணிவாகவும் உற்சாகமாகவும் கூறுகிறான். இரைந்து சொல்லாமல், ராமர் காதில் மட்டும் விழும்படி மெதுவாகச் சொல்ல ஏதுவாக, தனது வாலை ஒரு ஐந்து சுற்றிச் சுற்றி அதன் மேல் ஏறி நின்று சொல்வது சிற்பியின் கற்பனையின் உச்சமோ, கிடைத்த காட்சியோ?!
அடுத்த படம் கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் உள்ளது. உள்ளே நுழைந்து கொடிமரத்திற்கு வலது பக்கம் சென்றால் அங்கு உள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் இருக்கிறது. வேறெங்கும் காணக் கிடைக்காத ஒரு கற்பனை. சீதாதேவியைத் தேடி இலங்கை போன அனுமன் ராணவன் முன்பு, தன் ‘‘வாலாசனம்’’ அமைத்து அமர்ந்து பேசுகிறான். பேரூர் சிற்பத்தில் தன் எஜமான் காதருகே சொல்ல, பணிவோடு சின்னதாய் ஒரு ஆசனம் அமைத்த அனுமன், அதே எஜமானுக்காக இறுமாப்போடு கம்பீரமாகப் போட்டுக் கொண்ட ஆசனம் இது. பத்துக்குப் பத்து (பத்துத் தலைகளுக்கு - 37 சுற்று 3+7=10) என பதிலடி கொடுத்து அமர்ந்து கேலிச் சிரிப்போடு காட்சி கொடுப்பதை என்னவென்பது.
சுற்றிச் சுற்றிக் கோடு கோடாகக் காட்டாமல் அதை இது போன்று வளைத்து வளைத்துக் காட்டிய சிற்பியைப் பார்த்து, கூடப் பணிபுரிந்த சிற்பிகள், ‘‘என்ன? இப்படி வாலைப் போட்டிருக்கிறாயே. அதில் எப்படி ஆஞ்ச நேயர் உட்கார்வார்? சுற்றிச் சுற்றி இருப்பதுபோல் - பாம்பு போலல்லவா நீ காட்டி இருக்க வேண்டும்” என்று சொல்லியிருக்கக்கூடும்.
அதற்கு அந்தச் சிற்பியும் “ஆஞ்சநேயரால் முடியாததென்று ஏதாவது இருக்கிறதா? அவர் எப்படி வேண்டுமானாலும் உட்காருவார்” என்று பதில் சொல்லி இருக்கலாம். நானென்றால் அப்படித்தான் சொல்லி இருப்பேன்!
(தரிசிப்போம்)
ஓவியர் பத்மவாசன்