Published : 28 Nov 2022 05:03 AM
Last Updated : 28 Nov 2022 05:03 AM

108 வைணவ திவ்ய தேச உலா - 74 | அகோபிலம் பிரகலாத வரதன் கோயில் 

முனைவர் கே.சுந்தரராமன்

108 வைணவ திவ்ய தேசங்களில் ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தில் உள்ள அஹோபிலம் பிரகலாத வரதன் கோயில், 74-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. மலைக்கோயிலில் பிரகலாதனுக்காக நரசிம்மர் வெளிப்பட்ட ‘உக்கிர ஸ்தம்பம்’ உள்ளது.

அகோ என்றால் சிங்கம். பிலம் என்றால் குகை. சிங்க வேல் குன்றம். நரசிம்ம அவதாரம் நிகழ்ந்த தலமாகக் கருதப்படும் இத்தலம் திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.

மென்ற பேழ்வாய் வாளெயிற்றோர்

கோளரியாய், அவுணன்

பொன்ற அகம் வள்ளுகிரால்

போழ்ந்த புனிதனிடம்

நின்ற பசுந்தீ மொண்டு சூறை

நீள் விசும் பூடிரிய

சென்று காண்டற் கரிய கோயில்

சிங்க வேள் குன்றமே.

மூலவர் : மலையடிவாரக் கோயிலில் பிரகலாத வரதன், லட்சுமி நரசிம்மர்; மலைக்கோயிலில் அகோபில நரசிம்மர் | உற்சவர் : மலையின் மேலும், மலையின் கீழுமாக 9 உற்சவ மூர்த்திகள் | தாயார் : மலை அடிவாரக் கோயிலில் அமிர்தவல்லி, செஞ்சுலட்சுமி; மலைக்கோயிலில் லட்சுமி | தீர்த்தம் : மலையடிவாரக் கோயிலில் இந்திர தீர்த்தம், நரசிம்ம தீர்த்தம், பாபநாச தீர்த்தம், கஜ தீர்த்தம், பார்க்கவ தீர்த்தம்; மலைக்கோயிலில் பாபநாசினி தீர்த்தம்

தல வரலாறு: இரணிய கசிபுவின் மகன் பிரகலாதன் திருமால் மீது அளவுகடந்த பக்தி கொண்டிருந்தான். மகனின் இச்செயல் இரணிய கசிபுவுக்குப் பிடிக்கவில்லை. மேலும் தானே இறைவன் என்று கூறி வந்தான். தந்தையின் இக்கூற்று பிரகலாதனுக்குப் பிடிக்கவில்லை.

அவ்வப்போது தந்தைக்கும் மகனுக்கும் வாக்குவாதம் வந்த நிலையில் ஒருசமயம், இரணிய கசிபு நாராயணனைக் காட்டுமாறு மகனிடம் கூறினான். அதற்கு பதிலளித்த பிரகலாதன், “அவர் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார், அனைத்து உலகங்களையும் அவரே காத்து வருகிறார்” என்று நாராயணன் புகழ் பாடினான். கோபத்தின் உச்சியில் இருந்த இரணிய கசிபு, தனது கதாயுதத்தை எடுத்து, அங்குள்ள தூணை ஓங்கி அடித்தான். தூண் பிளந்து, நரசிம்ம அவதாரம் எடுத்து வெளியே நாராயணன் வந்து, இரணிய கசிபுவை அழித்தார்.

இந்த அவதாரம் இத்தலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இதே இடத்தில் பிரகலாதனின் அரண்மனை இருந்ததாகவும், தற்போது காடாக மாறிவிட்டதாகவும் கூறப்பட்ட நிலையில், கருடாழ்வார், மீண்டும் நரசிம்ம அவதாரத்தைக் காண வேண்டும் என்று திருமாலை நோக்கி இவ்விடத்தில் தவம் மேற்கொண்டார்.

கருடாழ்வாருக்காக மலை உச்சியில் நரசிம்ம அவதாரத்தை காட்டி அருளினார் திருமால். இத்தலத்தில் பக்த பிரகலாதனுக்காக தூணில் இருந்து வெளிப்பட்டது, இரணியனின் வயிற்றைக் கிழித்தது, ஆக்கிரோஷமாக கர்ஜித்தது, பிரகலாதனுக்காக சாந்த நரசிம்மராக அமர்ந்தது போன்ற, நரசிம்ம அவதாரத்தின் 9 கோலங்கள் இத்தலத்தில் அமையப் பெற்றுள்ளன.

கருடன் தவம் இருந்ததால் இம்மலை கருடாத்ரி என்றும் கருடாச்சலம் என்றும் அழைக்கப்படுகிறது.

கோயில் அமைப்பும், சிறப்பும்: மலையின் மேலும் கீழுமாக 9 நரசிம்மர் கோயில்கள் உள்ளன. அதனால் இத்தலம் நவ நரசிமம் ஷேத்ரம் என்று அழைக்கப்படுகிறது. மலையின் கீழ் உள்ள அகோபிலத்தில் பார்க்கவ நரசிம்மர் (சூரியன்), யோகானந்த நரசிம்மர் (சனி), சக்ரவட நரசிம்மர் (கேது) கோயிகள் அமைந்துள்ளன. மலையின் மேல் உள்ள அகோபிலத்தில் அகோபில நரசிம்மர் (குரு), வராக நரசிம்மர் (குரோதா நரசிம்மர் - ராகு), மாலோலா நரசிம்மர் (வெள்ளி), ஜூவாலா நரசிம்மர் (செவ்வாய்), பாவன நரசிம்மர் (புதன்), காரஞ்ச நரசிம்மர் (திங்கள்) கோயில்கள் உள்ளன.

மலையடிவாரக் கோயிலில் கருடாழ்வார், அகோபில மடத்தின் முதலாவது ஜீயர் அழகிய சிங்கர், மலைக் கோயிலில் கருடாழ்வார், பிரகலாதன் ஆகியோர் நரசிம்மரை தரிசனம் கண்டுள்ளனர். பிரகலாதனுக்கு காட்சி அளித்ததால், மூலவர் பிரகலாத வரதன் என்று அழைக்கப்படுகிறார்.

9 நரசிம்மர் கோயில்களையும் தரிசனம் செய்தால், நவக்கிரகங்களை ஒன்றாக தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். கருடாழ்வாரின் வேண்டுகோளுக்கு இணங்க, நரசிம்ம அவதாரத்தை மீண்டும் காட்டி அருள்வதாக திருமால் உறுதி அளிக்கிறார். அதன்படி இத்தலத்தில் வேடுவர் கோலத்தில் வந்து லட்சுமியை திருமால் திருமணம் செய்ததாக ஐதீகம்.

நரசிம்மர் தரிசனம்: மலையின் மீதுள்ள பாவநாசினி நீர்வீழ்ச்சியில் இருந்து மேலே சென்றால் வராக நரசிம்மரை தரிசிக்கலாம். அங்கிருந்து 2 கிமீ தொலைவில் உள்ளது மாலோலா நரசிம்மர் கோயில். அங்கிருந்து 3 கிமீ தொலைவில் நரசிம்மர் அவதாரம் எடுத்த தூணும், அதைச் சார்ந்த இடமும் உள்ளது.

ஜெயஸ்தம்பம்: மலையடிவாரக் கோயிலின் முன்பு 85 அடி உயரமுள்ள ஒரே கல்லால் ஆன வெற்றித் தூண் (ஜெயஸ்தம்பம்) உள்ளது. இத்தூண் பூமிக்கடியில் 30 அடி தோண்டி நிறுத்தப்பட்டுள்ளது. இத்தூண் முன்பு நின்று வேண்டினால், வேண்டியது அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகம். ராமபிரான் சீதையைத் தேடி வந்தபோது, இங்கு வழிபாடு செய்ததாக கூறப்படுகிறது.

திருவிழாக்கள்: வைகுண்ட ஏகாதசி, நரசிம்ம ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. ஒவ்வொரு மாத சுவாதி நட்சத்திர தினத்தில் 9 நரசிம்ம மூர்த்திகளுக்கும் சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும். மாசி பிரம்மோற்சவம் தேர்த் திருவிழாவின்போது ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

எதிரிகளால் ஏற்படும் தொல்லைகளில் இருந்து விடுபட நரசிம்மர் அருள்பாலிப்பார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x