Published : 26 Nov 2022 10:37 AM
Last Updated : 26 Nov 2022 10:37 AM

108 வைணவ திவ்ய தேச உலா - 71 | மதுரா கோவர்த்தநேசன் கோயில்

முனைவர் கே.சுந்தரராமன் 

108 வைணவ திவ்ய தேசங்களில், உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா கோவர்த்தநேசன் கோயில், 71-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. கிருஷ்ணர் அவதரித்த இடம் என்பதால் மிகவும் பிரசித்திப் பெற்ற திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. பிருந்தாவனத்தில் இருந்து 11 கிமீ தொலைவிலும், கோவர்த்தனத்தில் இருந்து 22 கிமீ தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது.

இத்தலம் பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப் பொடியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோரால் 50 பாசுரங்களைக் கொண்டு மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.

ஆண்டாள் பாசுரம்:

மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்

தூய பெருநீர் யமுனைத் துறைவனை

ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்

தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை

தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது

வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க

போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

தீயினில் தூசு ஆகும் செப்பு ஏலோர் எம்பாவாய்.

மூலவர் : கோவர்த்தநேசன், பாலகிருஷ்ணன் | தாயார் : சத்யபாமா நாச்சியார் | தீர்த்தம் : இந்திர தீர்த்தம், கோவர்த்தன தீர்த்தம், யமுனா நதி | விமானம் : கோவர்த்தன விமானம் |

தல வரலாறு: கம்சனின் சகோதரி தேவகி மற்றும் வாசுதேவருக்குப் பிறக்கும் எட்டாவது குழந்தையால் தனக்கு ஆபத்து என்று அறிந்த கம்சன், அவர்கள் இருவரையும் சிறை வைத்தான்.

தேவகிக்குப் பிறந்த ஏழு குழந்தைகளையும் கொன்றான். தேவகியின் எட்டாவது குழந்தையாக அவதரித்தார் கிருஷ்ணர். ‘ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர’ என்று ஆண்டாளின் திருப்பாவை உரைப்பதுபோல், மதுரா சிறைச்சாலையில் பிறந்த கிருஷ்ணர், அன்று இரவே ஆயர்ப்பாடிக்கு கொண்டு செல்லப்பட்டு, நந்தகோபர் - யசோதையின் மகனாக வளர்ந்தார்.

அங்கு ஒவ்வொரு இல்லத்துக்கும் சென்று வெண்ணெய் உண்டு, கோபியருடன் விளையாடி மகிழ்ந்தார் கிருஷ்ணர். கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கிய கிருஷ்ணர் ஒருநாள் மதுரா சென்று கம்சனை வதம் செய்தார். பின்னர் கிருஷ்ணர் துவாரகை சென்றது வரை, அவர் குறித்த நிகழ்ச்சிகளே மதுராவின் தல வரலாறாகக் கூறப்படுகிறது.

மதுரா நகரம்: சூரசேன வம்சத்தினரின் தலைநகராக மதுரா இருந்ததாக ராமாயணம், மகாபாரதம் மற்றும் பாகவத புராணங்கள் உரைக்கின்றன. ராமபிரான் யமுனை நதிக்கரையில் அர்த்தசந்திர வடிவில் மாட மாளிகைகள், தடாகங்கள் ஆகியவற்றை அமைத்து மதுரா நகரை அமைத்தார். சத்ருக்னனின் ஆட்சிக்குப் பிறகு யாதவர்கள் வசம் சென்ற மதுரா நகரத்தை, வசுதேவர் வம்சத்தினர் ஆட்சி புரிந்ததாக புராண செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் புருரவா - ஊர்வசியின் மூத்த மகன் ஆயுவால் மதுரா உருவாக்கப்பட்டது என்ற தகவலும் உள்ளது. ஏராளமான மரங்களைக் கொண்டிருந்ததால், இப்பகுதி மதுவனம் என்றழைக்கப்பட்டது. அதுவே காலப்போக்கில் மதுபுரா என்றும் மதுரா என்றும் ஆனது.

கோயில் அமைப்பும், சிறப்பும்: விரஜபூமியின் ஒரு பகுதிதான் மதுரா. மதுரா கோயிலில் கோவர்த்தன விமானத்தின் கீழ் உள்ள கருவறையில் மூலவர் கோவர்த்தநேசன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். உடன் சத்தியபாமா நாச்சியார் அருள்பாலிக்கிறார். விஸ்தாரமாக உள்ள கோயிலில் செயற்கையாக ஒரு குன்று அமைக்கப்பட்டுள்ளது. அருகே கல்கோட்டை பகுதியில் உள்ள மேடையில் கிருஷ்ணர் அவதரித்ததாக கூறப்படுகிறது. அதன் மேலே மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.

கோயில் கட்டிடத்துக்கு அருகே ஒரு பெரிய கட்டிடம் உள்ளது. அங்கு சதுர வடிவில் அமைந்துள்ள தூண்களில் ராமாயணம், மகாபாரதக் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. சந்நிதியில் பளிங்கால் ஆன இறை உருவங்கள் காணப்படுகின்றன.

கோயில் முற்றத்தில் துளசி செடிகளுடன் யாககுண்டம் உள்ளது. தேவகி – வாசுதேவர், கையில் வாளுடன் கம்சன் உள்ள சிற்பம், விலங்குடன் வாசுதேவரும், தேவகியும் அமர்ந்திருக்கும் சிற்பம், குழந்தையை தலைகீழாகப் பிடித்திருக்கும் கம்சன் சிற்பம் காணப்படுகின்றன. சந்நிதிக்கு வெளியே தசாவதார ஓவியங்கள் காணப்படுகின்றன. பிரகாரத்தில் ஆஞ்சநேயர், ரங்கமன்னார், வெங்கடாசலபதி, உடையவர் சந்நிதிகள் உள்ளன.

திருவிழாக்கள்: கிருஷ்ண ஜென்மாஷ்டமி தினத்தில் கிருஷ்ண சரிதம் முழுவதும் நடித்து காட்டப்படும். அதை பல லட்சத்துக்கும் மேற்பட்டோர் கண்டு களிப்பது வழக்கம். செய்த பாவம் நீங்க, சகல செல்வங்களும் கிடைக்க, பக்தர்கள் இங்கு நேர்த்திக் கடன் செலுத்தி வழிபாடு செய்கின்றனர்.


தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x