Published : 26 Nov 2022 04:01 AM
Last Updated : 26 Nov 2022 04:01 AM

108 வைணவ திவ்ய தேச உலா - 70 | முக்திநாத் ஸ்ரீமூர்த்தி கோயில்

முனைவர் கே.சுந்தரராமன்

108 வைணவ திவ்ய தேசங்களில், நேபாள நாட்டின் முஸ்தாங் மாவட்டத்தில் உள்ள முக்திநாத் ஸ்ரீமூர்த்தி கோயில் 70-வது திவ்ய தேசமாக போற்றப்படுகிறது. இமயமலையில் முக்திநாத் பள்ளத்தாக்கில் 3,710 மீட்டர் உயரத்தில் அமைந்த தலமாகும். 51 சக்தி பீடங்களுள் ஒன்றாகவும் இத்தலத்தை சாக்தர்கள் கருதுகிறார்கள்.

பெரியாழ்வார் சாளக்கிராமமுடைய நம்பியை கண்ணனாகவும், திருமங்கையாழ்வார் ராமபிரானாகவும் காண்கின்றனர். இராமானுஜரும் இத்தலத்தில் எழுந்தருளி வழிபாடு செய்துள்ளார். இத்தலத்தை திருமங்கையாழ்வார், பெரியாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

பெரியாழ்வார் பாசுரம்:

பாலைக் கறந்து அடுப்பு ஏற வைத்துப் பல்வளையாள் என்மகள் இருப்ப

மேலை அகத்தே நெருப்பு வேண்டிச் சென்று இறைப் பொழுது அங்கே பேசி நின்றேன்

சாளக்கிராமம் உடைய நம்பி சாய்த்துப் பருகிட்டுப் போந்து நின்றான்

ஆலைக் கரும்பின் மொழி அனைய அசோதை நங்காய்! உன்மகளைக் கூவாய்.

மூலவர் : ஸ்ரீமூர்த்தி | தாயார் : ஸ்ரீதேவி நாச்சியார் | தீர்த்தம் : சக்ர தீர்த்தம், கண்டகி நதி | விமானம் : கனக விமானம்

தல வரலாறு: முக்கிய நதிகள் அனைத்துக்கும் திருமாலுடனான பந்தம் இருப்பதை அறிந்த கண்டகி நதி, திருமால் தன்னிலும் அவதாரம் எடுக்க வேண்டும் என்று விருப்பம் கொண்டு அவரை நோக்கி கடும் தவம் புரிந்தாள். அதை ஏற்ற திருமால் இந்த நதியில் தினம் தினம் சாளக்கிராம ரூபத்தில் அவதரித்து கண்டகி நதிக்கு சிறப்பு சேர்க்கிறார் என்பது வரலாறு.

பிரம்மதேவரின் வியர்வையில் இருந்து தோன்றிய கண்டகி, கடும் தவம் புரிந்தபோது, அவளுக்கு தேவர்கள் வரமளிக்க முன்வந்தனர். அப்போது கண்டகி அவர்களை தன் குழந்தைகளாக அவதரிக்கும்படி வேண்டினாள். இதற்கு தேவர்கள் உடன்படவில்லை என்பதால், அவர்களை புழுவாக மாறும்படி சாபம் அளித்தாள். கோபத்தின் உச்சியில் இருந்த தேவர்கள், கண்டகியை ஒரு ஜடமாக மாறும்படி சபித்தனர்.

இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்த பிரம்மதேவர், ருத்ரன், இந்திரன் ஆகியோர் திருமாலை அணுகி சாபங்களை நீக்க வேண்டும் என்று வேண்டினர். இதைத் தொடர்ந்து திருமால் அவர்களை நோக்கி, “இரண்டு சாபங்களையும் நீக்க முடியாது. நான் சாளக்கிராம தலத்தில் சக்ர தீர்த்தத்தில் வாசம் செய்கிறேன். தேவர்கள் வஜ்ரகீடம் என்ற புழுக்களாக மாறி அங்குள்ள கூழாங்கற்களை ஆதாரமாகக் கொண்டு வாழ்ந்து வர வேண்டும். கண்டகி நதி வடிவமாக அக்கற்களில் பாய்ந்து வருவாள். இதன் காரணமாக கண்டகியின் ஆசை நிறைவேறும். தேவர்கள், தேவ அம்சமும் திருமால் அம்சமும் பொருந்திய சாளக்கிராமங்களாக மாறுவார்கள். எம்பெருமான் திருவுள்ளப்படி சாளக்கிராமங்களை வழிபட்டவர்களும் எம்பெருமானும் நித்யவாசம் செய்யும் கைகுண்டப் பதவி அடைவர்” என்றார்.

கஜேந்திர மோட்சம்: கஜேந்திர மோட்சம் நடைபெற்ற இடமாக இத்தலம் போற்றப்படுகிறது. பிரம்மதேவர், ருத்ரன், இந்திரன் முதலானோர், திருமாலிடம் கண்டகி நதிக்கும் தேவர்களுக்கும் இடையேயான பிரச்சினை குறித்து பேசிக் கொண்டிருக்கும்போது, திருமால் அவர்களிடம், “முக்திநாத்தில் முதலைக்கும் யானைக்கும், நான் மோட்சம் அருளிய பின்னர், அவற்றின் உடல்களில் தேவர்கள் வஜ்ரகீடம் என்ற புழுக்களாகவும் பூச்சிகளாகவும் கற்களுக்கு இடையே வாழ்வார்கள். பின்னர் கண்டகி நதி நீர் பட்டு அவர்கள் சாளக்கிராமங்களாக மாறுவார்கள்” என்று அருள்பாலித்தார்.

கண்டகி நதியில் நீராடி முக்திநாதரை வழிபட்டால், பூலோகத்தில் சுகமாக வாழ்க்கை நடத்தி, பின்னர் வைகுண்டத்தில் தன்னுடன் இருக்கலாம் என்று திருமால் அருளியுள்ளதாக ஐதீகம்.

முக்திநாத் பயணம்: கடும் குளிர் மற்றும் மேக மூட்டத்தால் முக்திநாத் பயணம் மிகவும் கடுமையானது. முதலில் காத்ண்டு அல்லது சீதாமரி சென்று அங்கிருந்து பொக்காராவை அடைந்து அங்கிருந்து வான் வழியாக ஜாம்சம் அடைந்து பின்னர் ஜீப் மூலம் (1 மணி நேரப் பயணம்) முக்திநாத் செல்ல வேண்டும், அதன்பிறகு அரை மைல் தூரம் மலையில் ஏறி முக்திநாதரை தரிசிக்கலாம். நேபாளத்தில் ஓடும் கண்டகி நதி, 8,000 மீ உயரத்தில் உள்ள அன்னபூர்ணா தவுளகிரி மலைச்சிகரங்களில் இருந்து உற்பத்தி ஆகிறது. காத்மண்டு நகரில் இருந்து 375 கிமீ தொலைவில் கண்டகி நதிக்கரையில் முக்திநாத் அமைந்துள்ளது. இங்கிருந்து 15 மைல் தொலைவில் முக்தி நாராயணத் தலம் உள்ளது, இத்தலம் சாளக்கிராமம் என்றும் கூறப்படுகிறது. இமயமலை அடிவாரத்தில் உள்ள ஹரிபர்வத மலையில் சக்ர தீர்த்தம் என்ற பகுதியில் உற்பத்தி ஆகும் கண்டகி நதியின் கரையில் அமைந்துள்ள பகுதி சாளக்கிராமம் என்று அழைக்கப்படுகிறது.

முக்திநாதர்: முக்திநாதர் கோயிலின் முன்னர் இரண்டு குளங்கள் உள்ளன. கருவறையில் சாளக்கிராம சுயம்பு திருமேனியாக முக்திநாராயணப் பெருமாள் எழுந்தருளி தரிசனம் தருகிறார். சங்கு, சக்கரம், கதை போன்ற ஆயுதங்களுடன் ஸ்ரீதேவி, பூதேவி, கருடாழ்வார் மற்றும் ராமானுஜருடன் பெருமாள் சேவை சாதிக்கிறார். கருவறைக்குள் சென்று பக்தர்களே சுவாமிக்கு வஸ்திரம், மலர், மாலைகளை அணிவித்து பூஜை செய்யலாம்.

கோயிலுக்கு வெளியே சந்நிதியைச் சுற்றி 108 திவ்ய தேசங்களின் தீர்த்தத்துக்குச் சமமான 108 கோமுக தீர்த்தங்கள் (108 பசுமாட்டின் முகங்கள்) கொட்டிக் கொண்டே இருக்கின்றன. இங்கு திருப்பாற்கடல், பரமபதம் உள்ளிட்ட அனைத்து திவ்ய தேச தீர்த்தங்களும் உள்ளன.

ஸ்வயம் வ்யக்த தலங்களில் (திருவரங்கம், நாங்குநேரி, ஸ்ரீமுஷ்ணம், திருவேங்கடம், புஷ்கரம், நைமிசாரண்யம், பத்ரிநாத், முக்திநாத்) இத்தலமும் ஒன்றாகும். இதில் புஷ்கரம் மற்றும் ஸ்ரீமுஷ்ணம் திவ்ய தேச வரிசையில் இல்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x