

திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நேற்று காலை சர்வ பூபால வாகனத்தில் பத்மாவதி தாயாரின் வீதியுலாவும், இரவு கருட சேவையும் நடைபெற்றன.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த 20-ம் தேதி தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா, 28-ம் தேதி பஞ்சமி தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் நிறைவடைய உள்ளது. தினமும் காலை, இரவு ஆகிய இரு வேளைகளிலும் தாயாரின் வாகன சேவை வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில், 6-ம் நாளான நேற்று காலை வெண்ணெய் குடத்துடன் கிருஷ்ணர் அலங்காரத்தில் தாயார்சர்வ பூபால வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இரவு கருட வாகன சேவை நடைபெற்றது. இதில் ஜீயர் சுவாமிகள் குழுவினர், திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கருட சேவையை முன்னிட்டு, நேற்று திருமலையில் இருந்து ஏழுமலையானின் தங்க பாதங்கள் திருச்சானூருக்கு கொண்டு வரப்பட்டது. அந்த பாதங்களுடன் கருட சேவை சிறப்பாக நடத்தப்பட்டது.