Published : 22 Nov 2022 07:19 AM
Last Updated : 22 Nov 2022 07:19 AM

108 வைணவ திவ்ய தேச உலா - 65.அயோத்தி ரகுநாயகன் கோயில்

முனைவர் கே.சுந்தரராமன்

108 வைணவ திவ்ய தேசங்களில், உத்தரபிரதேச மாநிலம் பைசாபாத் மாவட்டத்தில் உள்ள அயோத்தி ரகுநாயகன் கோயில், 65-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. முக்தி அளிக்கும் 7 தலங்களில் (அயோத்தி, காசி, மதுரா, மாயா (ஹரித்வார்), துவாரகை, காஞ்சி, அவந்தி (உஜ்ஜைனி)) ஆகியவற்றில் அயோத்தியே முதன்மையாக கருதப்படுகிறது.

லக்னோவில் இருந்து 135 கிமீ தொலைவில், சரயு நதிக்கரையின் தென்கரையில் அமைந்துள்ள இத்தலத்தை பெரியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், குலசேகராழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

குலசேகராழ்வார் தாலாட்டு பாசுரம்:

சுற்றமெல்லாம் பின்தொடர தொல்கானம் அடைந்தவனே

அற்றவர்கட்கு அருமருந்தே அயோத்தி நகர்க்கு அதிபதியே

கற்றவர்கள் தாம் வாழும் கணபுரத்தென் கருமணியே

சிற்றவை தன் சொல் கொண்ட சீராமா தாலேலோ.

நம்மாழ்வார் பாசுரம்

(எம்பெருமானது விபவ அவதார குணங்களை அனுபவித்து ஆளாகாத உலகத்தாரை நோக்கி இரங்குதல்)

கற்பார் இராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ

புல் பா முதலா புல் எறும்பு ஆதி ஒன்று இன்றியே

நல் பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்

நல் பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே?

மூலவர் : ரகுநாயகன் (ராமபிரான்)

தாயார் : சீதாபிராட்டி

தீர்த்தம் : சரயு நதி

விமானம் - புஷ்கல விமானம்

தல வரலாறு: உத்திரபிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள சரயு நதிக்கரையில் ராமபிரானுக்கு கோயில் எழுப்பப்பட்டுள்ளது. மனித குல முதல்வரான மனு, இந்த ஊரைக் கட்டியதாக கூறப்படுகிறது. தேவர்களே ராம அவதாரத்துக்கு வழிசெய்யும் வகையில் இவ்வூரை நிர்மாணம் செய்ததாக புராணங்களில் கூறப்படுகிறது.

பிரம்மதேவர் உலகைப் படைத்தபோது, திருமால் வைகுண்டத்தில் ஒரு பகுதியை அவருக்குக் கொடுத்தார். அந்தப் பகுதியை உலகத்தின் ஒரு பகுதியாக்கி தன் மகன் ஸ்வாயம்புவ மனுவுக்குக் கொடுத்தார் பிரம்மதேவர். அந்த இடமே அயோத்தி என்று அழைக்கப்படுகிறது. ஸ்வாயம்புவ மனுவின் புதல்வர் இஷ்வாகு, இவரது பெயரில் உருவானது இஷ்வாகு வம்சம்.

மனுவின் வம்சத்தில் வந்த ஹரீஷ் சந்திரா, சாகர், பகீரதன் ஆகியோர் அயோத்தி மாநகரை ஆண்டனர். அவர்களின் காலத்துக்குப் பிறகு பகீரதனின் பேரன் தசரதன் ஆட்சி புரிந்து வந்தார். தசரதருக்கு கௌசல்யா, கைகேயி, சுமித்திரை என்று மூன்று மனைவிகள். கௌசல்யாவின் மகன் ராமபிரான் ஆவார். கைகேயிக்கு பரதன், சுமித்திரைக்கு லட்சுமணன், சத்ருக்கனன் பிறந்தனர்.

தம் மக்கள் நால்வரையும் குலகுருவாகிய வசிஷ்டரிடம் கல்வி கற்கச் செய்தார் தசரதன். ராம சகோதரர்கள் கல்வி, கேள்விகளிலும் போர்ப்பயிற்சியிலும் சிறந்து விளங்கினர்.

பின்னர் விசுவாமித்திரர் வருகை, ராம லட்சுமணர் அவருடன் செல்லுதல், தாடகை வதம், ராமபிரான் மிதிலை நகர் செல்லுதல், ராமபிரான் – சீதாபிராட்டி திருமணம், ராம பட்டாபிஷேக ஏற்பாடுகள், ராமபிரான் சீதாபிராட்டி, லட்சுமணருடன் கானகம் செல்லுதல், காட்டில் சான்றோர் சந்திப்பு, சூர்ப்பனகை மூக்கறுபடுதல், மாய மான் வருகை, ராமபிரான் சுக்ரீவன் சந்திப்பு, விபீஷண சரணாகதி, ராமனுக்கும் ராவணனுக்கும் போர், ராமபிரான் வெற்றி வாகை சூடி சீதா பிராட்டியுடன் அயோத்தி திரும்புதல், ஸ்ரீராம பட்டாபிஷேகம் என்று ராமபிரானின் வாழ்க்கைப் பயணம் தொடர்கிறது.

ராமபிரானும், சீதா பிராட்டியும் அயோத்தியில் எழுந்தருளி ரகுநாயகன் என்ற பெயரில் வீற்றிருக்கும் கோலத்தில் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். தற்போது அம்மாஜி மந்திர் என்ற பெயரில் புதிய கோயில் எழுப்பப்பட்டுள்ளது, இங்கு ரங்கநாதர், ராமபிரான் சந்நிதிகள் உள்ளன. ராமபிரான் சந்நிதியில் சீதாதேவி, லட்சுமணர், பரதர், சத்ருக்கனன், அனுமன், கருடாழ்வார் ஆகியோர் உள்ளனர்.

சரயு நதி: பிரம்மதேவர் ஒருசமயம் திருமாலை நினைத்து தவம் மேற்கொண்டார். பிரம்மதேவரின் தவத்தில் மகிழ்ந்த திருமால் அவருக்கு காட்சி அளித்தார்.

பிரம்மதேவரின் பக்தியில் திளைத்த திருமால், மனம் உருகி கண்ணீர் மல்க நின்றார். அந்த கண்ணீரை பிரம்மதேவர் ஒரு கமண்டலத்தில் ஏந்தி அதை பூமியில் விட்டார், அந்த இடமே ‘மானசரஸ்’ என்ற ஏரியானது. பிற்காலத்தில் இஷ்வாகுவின் வேண்டுகோளை ஏற்று, வசிஷ்ட முனிவர் அந்நீரை, அயோத்தியில் சரயு நதியாக ஓடச் செய்தார்.

திருவிழாக்கள்: ஸ்ரீராம நவமி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ராமபிரானின் ஜனன ஜாதகத்தில் ஐந்து கிரகங்கள் உச்சத்தில் உள்ளன, இவ்வாறு ஒருவரின் ஜாதகம் அமைவது மிகவும் அபூர்வமானது, அதனால் ராமபிரானின் ஜாதகத்தை பூஜை அறையில் வைத்து வணங்கினால் அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

மனைவியை நேசித்தல் என்பது ராமபிரானை தினமும் துதிப்பதற்கு ஒப்பானதாகும். சீதாதேவி போல் பொறுமையுடன் இருந்தால், பெண்கள் அனைத்துத் துறையிலும் சாதிக்கலாம் என்பது ஆன்றோர் வாக்கு.

ராமபிரானுக்கு பிடித்த துளசி மாலை அணிவித்து வழிபட்டால், வாழ்வில் அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். ஸ்ரீராம ஜெயம் எழுதுவது, ராம நாமத்தை உச்சரிப்பதன் மூலம் மனிதர்கள் அவர்களது பாவத்தில் இருந்து விடுபடலாம்.

ராம காவியம் வாழ்க்கையில் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய பாடங்களை கற்றுத் தருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x