Last Updated : 01 Dec, 2016 10:55 AM

 

Published : 01 Dec 2016 10:55 AM
Last Updated : 01 Dec 2016 10:55 AM

வான்கலந்த மாணிக்கவாசகம் 06: உண்ணும்போது ஒரு கைப்பிடி

இறைவனைக் காதலிப்பது எப்படி? மலரிட்டுப் பூசை செய்வதா? பாலாபிஷேகம் செய்வதா? அல்லது தங்கஅணிகலன்கள் அணிவித்து வணங்குவதா? நம் கண்களால் பார்க்கமுடியாத இறைவன், நாம் செலுத்தும் அன்பை ஏற்றுக்கொள்கிறானா என்று தெரிந்துகொள்வது எப்படி என்று கேட்கும் சிவனடியார்களிடம் மாணிக்கவாசகர், “திருக்கோயிலில் இறைவன் வீற்றிருக்கும்போது நம் கண்களால் பார்க்க முடியாத இறைவன் என்று சொல்வது ஏன்?” என்றார். அடியவர்கள் பதில் கூற முடியாமல் திகைத்தனர்.

“அசைவற்று இருக்கும் சிலையை இறைவனாகக் கற்பனை செய்து வழிபடும் உங்கள் மனத்தால், அதை இறைவனாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை; எனவேதான் கண்களால் பார்க்க முடியாத இறைவன் என்றீர்கள் அல்லவா?” என்று மணிவாசகர் கேட்டதும் அடியவர்கள் வெட்கித் தலைகுனிந்தனர். “நீங்கள் உயிர்ப்புள்ள இறைவனைக் கண்டு, காதல் செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால், இறைவன் நிறைந்திருக்கும் அனைத்து உயிர்களையும், குறிப்பாக, சக மனிதர்களைக் காதலியுங்கள்” என்றார் மணிவாசகர்.

குடும்பக் காதல் இறைக் காதலாகுமா?

“ஐயனே! நான் என் குழந்தைகள், மனைவி, அன்னை-தந்தை, உடன்பிறந்தோரிடம் மிக்க அன்பைச் செலுத்துகிறேன். நான் பாடுபட்டுச் சேர்க்கும் பொருளையும், பணத்தையும் அவர்களுக்கே தருகிறேன். அவர்களிடமும் இறைவன் நிறைந்திருப்பதால், எனது இச்செயல் இறைவனைக் காதலித்ததற்குச் சமம் என்று கொள்ளலாமா?” என்றார் ஒரு அடியவர்.

கலக்கம் தெளிவித்த வித்தகத்தேவன்

“அன்பர்களே! பிறப்பாலும், திருமணத்தாலும் ஏற்பட்ட பாசத்தினால், உங்களுடையவை என்று கருதும் சொந்தங்களிடம் காட்டும் காதல் இயல்பானது; ஆயினும், என் குடும்பம் என்ற அளவில் அதுவும் சுயநலத்தின் ஒரு வகையே! பாரபட்சம் பார்க்காமல் எல்லா உயிர்களுக்கும் கருணைசெய்யும் இறைவனைக் காதலிக்க விரும்பினால், சொந்த பந்தங்களிடம் காட்டும் அதே காதலை, துன்பப்படும் ஏழைகளிடமும் காட்டுவதே சிறந்த வழியும், பக்தியுமாகும்.

இறைவனுக்கு நீங்கள் செலுத்த விரும்புகின்ற காணிக்கைகளைத் துன்பப்படும் ஏழைகளுக்குக் கொடுங்கள்; அவை உடனடியாக இறைவனிடம் சென்று சேரும். என் பணம், என் மனைவி, என் மக்கள், என் சாதி, என் அறிவு எனப் பித்துப்பிடித்து அலையும் இந்தஉலகத்தில், சிவபெருமான் தன் திருவடிகளை என் தலைமேல் வைத்ததுமே என்னிடமிருந்த சித்த விகாரக் கலக்கம் தெளிந்து, அனைவரிடமும் அன்புகாட்டும் தெளிவு பிறந்தது; நீங்களும் தெளிவடையுங்கள்” என்று அருளினார் மணிவாசகர்.

வைத்த நிதி, பெண்டிர், மக்கள், குலம், கல்வி, என்னும்

பித்த உலகில், பிறப்போடு இறப்பு என்னும்

சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த

வித்தகத் தேவற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ (திருவாசகம்:10-6)

செல்வத்தின் பயன் ஏழையர்க்கும் கொடுத்தல் என்று உணராமல், அவை நிலையுடையன என்று நினைத்துப் பதுக்கி வைப்பது ‘பேதைமை’ என்பதால், இவ்வுலகைப் ‘பித்த உலகு’ என்றார். இறைவன் இதைத் தெளியவைத்ததால், ‘சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த வித்தகத் தேவர்’ என்றார்.

இறைவனே ஏழைப்பங்காளன்

இறைவனின் அருள்வடிவே அம்மை. உயிர்களிடம் கொண்ட கருணையினால், அவரவர் செய்த நன்மை தீமைப்படி பிறந்த எல்லா உயிர்களுடன், ஏழைகளுடன் அம்மையப்பனாக, இறைவனும் அவர்களின் துன்பத்தில் பங்கெடுப்பதால், ஏழைப் பங்காளனைப் பாடித் துதிக்கலாம் வா என்று திருவெம்பாவையின் ஏழாவது பாட்டில் அழைக்கின்றார் மாணிக்கவாசகர்.

ஏழைகளிடம் நாம் செலுத்தும் அன்பு, அவருள் வாழும் இறைவனாம் அம்மையப்பனைக் குளிர்விப்பதால், நம் புலன்கள் அன்பில் திளைத்து, இறைவன் அமுதாய் நமக்கு வெளிப்பட்டுத் தோன்றுவான்.

ஆனால், நாம் எல்லோரும் மனைவி, குழந்தைகள், சுற்றத்தாரிடம் கொண்ட அளவுக்கு அதிகமான பாசத்தால், பேராசை கொண்டு, ஏழு தலைமுறைக்கும் பணம் சேர்க்கப் பித்துப்பிடித்துப் பைத்தியமாக அலைகிறோம். இதை நீக்கி, துன்புறும் ஏழைகளுக்குச் செய்யும் அன்பான உதவியே இறைவனிடம் உடனடியாகச் சேருகிறது என்ற மனத்தெளிவைத் தந்த ‘வித்தகத் தேவற்கே சென்றுஊதாய் கோத்தும்பீ’ என்றார் மணிவாசகர்.

படமாடக் கோயிலும் நடமாடும் கோயிலும்

இறைவன் இருவகையான கோயில்களில் இருக்கிறான் என்கிறார் திருமூலர். ஒன்று, படமாடுகின்ற கோயில்கள். இதில் படம் அல்லது சிலை வடிவில் இருக்கின்றான்; இரண்டாவது, நடமாடும் கோயில்களான உயிர்களுடன், குறிப்பாக மனிதர்களுடன் வாழ்கிறான் இறைவன்.

ஏழைகளின் உள்ளே வாழும் இறைவன் பசித்திருக்கையில், படமாடக்கோயிலில் இருக்கும் இறைவனுக்குப் பொருளைக் காணிக்கையாக அளித்தால், அது நடமாடும் கோயில்களான ஏழைகளுடன் பசியில் வாடும் இறைவனுக்குச் சென்று சேராது. ஆனால் நடமாடும் கோயிலான ஏழைகளுக்குத் தரும் பொருள், படமாடும் கோயிலில் வாழும் இறைவனுக்கு உடனே சென்று சேர்ந்துவிடும் என்கிறார் திருமூலர்.

படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயின்

நடமாடக் கோயில் நம்பர்க்கு ஆங்கு ஆகா

நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்

படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே - திருமந்திரம்

“நான் மிகவும் ஏழை. என் வயிற்றுப்பாட்டுக்கே துன்பப்படுகிறேன். என்னைப் போன்றவர்கள் இறைவனிடம் காதல் செய்ய முடியுமா?” என்று கேட்பவர்களுக்கு, மனம் அன்பால் நிறைந்தால் எவரும் ஒருகைப்பிடி உணவாலும், பசுவுக்கு ஒருவாய்ப் புல்லாலும், இறைவனுக்கு ஒரு பச்சிலையாலும், பணம் இல்லாதவர்களும், பிற ஏழைகளுக்கு இனிய வாழ்த்துரையாலும் அன்புசெய்ய இயலும் என்கிறார் திருமூலநாயனார்.

யாவர்க்கும் ஆம் இறைவற்கு ஒரு பச்சிலை

யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாய் உறை

யாவர்க்கும் ஆம் உண்ணும் போது ஒரு கைப்பிடி

யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரைதானே. – திருமந்திரம்

உண்மையாகவே இறைவனிடம் காதல் செய்வது எப்படி என்று அறிந்துகொண்டோம். திருவடிப் பேறு கிடைத்ததும் உணர்ந்த இறைக்காட்சி குறித்து அடியவர்களுக்கு விளக்கிய மணிவாசகரின் அனுபவங்களைப் பேசும் திருவாசகத் தேனை அடுத்த வாரங்களில் சுவைப்போம்.

தொடர்புக்கு:krishnan@msuniv.ac.in
(வாசகம் தொடரும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x