Published : 09 Jul 2014 12:01 pm

Updated : 09 Jul 2014 15:43 pm

 

Published : 09 Jul 2014 12:01 PM
Last Updated : 09 Jul 2014 03:43 PM

மீட்புப் பணியில் ஈடுபட்ட 3,750 பேருக்கு பரிசு, பாராட்டுச் சான்று: முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்

3-750

மவுலிவாக்கம் கட்டிட விபத்து மீட்புப் பணியில் ஈடுபட்ட 3,750 பேருக்கு முதல்வர் ஜெயலலிதா பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

சென்னை போரூர் அருகே மவுலிவாக்கத்தில் கடந்த 28-ம் தேதி 11 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. இதில் 61 பேர் பலியாயினர். 27 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். ஒரு வாரம் மீட்புப் பணி நடந்தது. இதில் ஈடுபட்டவர்களுக்கு தமிழக அரசின் வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிக்கும் துறை சார்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் பாராட்டு விழா நடந்தது.

மீட்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகள், ஊழியர்கள் அனைவருக்கும் பரிசாக கைக்கடிகாரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:

கடந்த 28-ம் தேதி மாலை மவுலிவாக்கத்தில் 11 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தவுடன் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் 6 நாட்கள் இரவு, பகல் பாராமல், வெயிலையும் மழையையும் பொருட்படுத்தாமல் உயிரை துச்சமென மதித்த ஈடுபட்டீர்கள். மலைப்பாகவும் வியப்பாகவும் இருந்த பணியை அனாயாசமாக செய்து, 27 பேரை உயிருடன் மீட்டெடுத்து இருக்கிறீர்கள். 61 பேரின் உடல்களை மீட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளீர்கள்.

கடமையைச் செய்

‘கடமையைச் செய், பலனை எதிர்பாராதே’ என்கிறது பகவத் கீதை. ‘கடமையை செய். பலனாகிய வெற்றி தோல்வியை நினைக்காதே’ என்பதுதான் இதன் பொருள். கடினமான சூழ்நிலை மற்றும் மிகுந்த இடர்பாடுகளுக்கு இடையே இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க நீங்கள் ஆற்றியுள்ள பணி மகத்தானது, செம்மையானது, சிறப்பானது. பலனை எதிர்பாராமல் நீங்கள் பணிகளைச் செய்தாலும், கண்ணும் கருத்துமாக கடமை ஆற்றியவர்களை பாராட்டி ஊக்கப்படுத்துவது எனது தலைமையிலான அரசின் கடமை.

நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்

அந்த வகையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுபட்ட தமிழக காவல்துறை, தமிழ்நாடு அதிரடிப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, தேசிய பேரிடர் மீட்புக் குழு, ஊர்க்காவல் படை, மருத்துவம், நெடுஞ்சாலை, பொதுப்பணி, வருவாய், ஊரக வளர்ச்சி ஆகிய துறைகள், சென்னை மெட்ரோ ரயில், மாநகராட்சி ஆகியவற்றைச் சேர்ந்த ஊழியர்கள், பணியாளர்கள், அலுவலர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்.

எப்போதும் முன்னிலை

பல்வேறு துறைகளைச் சேர்ந்த 3,750 அலுவலர்கள் இந்த கடினமான பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளுக்கு இடையே சிக்கியவர்களை கண்டறிவதில் மோப்ப நாய்களும் திறம்பட பணியாற்றி இருக்கின்றன. மோப்ப நாய்களின் பயிற்சியாளர்களுக்கும் எனது பாராட்டுகள். இன்னல்களைப் பொருட்படுத்தாமல் கடமையைச் செய்பவர்களை அங்கீகரிப்பதில் எனது தலைமையிலான அரசு எப்போதும் முன்னிலை வகிக்கிறது.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

விழாவில் தமிழக அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை மற்றும் தணிக்கும் துறை ஆணையர் டி.எஸ்.ஸ்ரீதர், உள்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா, டிஜிபி ராமானுஜம், சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன் உள்பட பலர் கலந்துகொண் டனர்.

முன்னதாக தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் வரவேற்று பேசினார். முடிவில் வருவாய்த்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி நன்றி கூறினார். விழா தொடங்கியதும் கட்டிட விபத்தில் உயிரிழந்தோருக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மவுலிவாக்கம் கட்டிட விபத்துமீட்புப் பணிமுதல்வர் ஜெயலலிதா பரிசுபாராட்டுச் சான்றிதழ்

You May Like

More From This Category

More From this Author