

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்ட நிலையில், இக்கோயிலில் பெண்களுக்கு அனுமதி இல்லை என்று கேரள அரசு அறிவித்துள்ளது.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல அனுமதியில்லை. இந்த நடைமுறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அனைத்து வயது பெண்களையும் சபரிமலை கோயிலில் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த 2018-ம் ஆண்டில் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலின் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நேற்று தொடங்கியது. கோயில் மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நேற்று முன்தினம் நடையை திறந்துவைத்து, கருவறையில் தீபம் ஏற்றினார். தொடர்ந்து, கோயில் முன்புள்ள ஆழி குண்டம் ஏற்றப்பட்டது. மாலை 6 மணியளவில் அபிஷேகம் நடத்தப்பட்டு, இரவு 10 மணிக்கு நடை சாத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, தீபம் ஏற்றப்பட்டு ஐயப்பனை வழிபட பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதையொட்டி, சபரிமலையில் 1,500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர். கேரள அரசு சார்பில் அவர்களுக்கு அண்மையில் வழிகாட்டு நெறிகள் அடங்கிய புத்தகம் வழங்கப்பட்டது. அதில், 2018-ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, அனைத்து வயது பெண்களையும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனுமதிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதற்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. பாஜக மாநிலத் தலைவர் சுரேந்திரன் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “கேரளாவில் ஆட்சி நடத்தும் மார்க்சிஸ்ட் அரசு, சபரிமலை விவகாரத்தில் ஏற்கெனவே பல்வேறு தவறுகளை இழைத்துள்ளது. கடந்த காலத்தில் அந்த தவறுகளை பக்தர்கள் தங்கள் போராட்டத்தால் திருத்தினர். தற்போது மீண்டும் பக்தர்களின் நம்பிக்கையுடன் அரசு விளையாடினால், மிகப்பெரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும். சபரிமலை போர்க்களமாக மாறும்" என்று எச்சரிக்கை விடுத்தார்.
இதைத் தொடர்ந்து கேரள அமைச்சர் ராதாகிருஷ்ணன் திருவனந்தபுரத்தில் நேற்று கூறும்போது, “வழிகாட்டு நெறிகளை அச்சிட்டதில் தவறுகள் ஏற்பட்டுள்ளன. கடந்த காலங்களில் அச்சிடப்பட்ட பிரதியை சரிபார்க்காமல், மீண்டும் அச்சிட்டு போலீஸாருக்கு வழங்கி உள்ளனர். அந்த வழிகாட்டு நெறிகள் உடனடியாக வாபஸ் பெறப்படுகின்றன. ஏற்கெனவே இருந்த பழைய நடைமுறையே தொடரும்" என்று தெரிவித்தார். இதுகுறித்து ஏடிஜிபி அஜித்குமார் கூறும்போது, “இந்த விவகாரம் உயர் அதிகாரிகள் கவனத்துக்கு வந்தவுடன் புதிதாக வழங்கப்பட்ட வழிகாட்டு நெறிகள் ரத்து செய்யப்பட்டு, பழைய நடைமுறை பின்பற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தவறுகள் திருத்தப்பட்டு, புதிய வழிகாட்டு நெறி புத்தகம் போலீஸாருக்கு வழங்கப்படும்" என்றார்.
காவல் துறை வட்டாரங்கள் கூறும்போது, "கேரள அரசின் அறிவிப்பின்படி, சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கு அனுமதி வழங்கப்படாது. அதாவது 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். 10 வயதுக்கு கீழ், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்" என்றனர். இந்த ஆண்டு சபரிமலை மண்டல பூஜையில் சுமார் 40 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.