Last Updated : 23 Nov, 2016 03:01 PM

 

Published : 23 Nov 2016 03:01 PM
Last Updated : 23 Nov 2016 03:01 PM

வான்கலந்த மாணிக்கவாசகம் 05: காதல் செய்து உய்ம்மின்

புலனடக்கத்தை இறைவனைக் காண்பதற்கான முதல்படியாகக் கண்டோம். ‘மருந்தைக் குடிக்கும்போது குரங்கை நினையாதே’ என்றால் குரங்கு மட்டுமே நினைவில் இருப்பதுபோல், மனதால் புலன்களை அடக்கும் கடினமான கூர்நோக்குப் பயிற்சிகள் மிகவும் கடினமானவை; பலன் தருவதைப் போல் தோன்றினாலும், எப்போது வேண்டுமானாலும் புலன்களின் வழியே மனம் வழிதவறிப் போகும் ஆபத்துள்ளது. புலனடக்கத்துக்கு மிக எளிதான வழி, இறைவனிடம் அன்பில் கரைந்து போதலாகும். தன்னுள்ளே அமுதாய் ஊறி எழுந்த இறைக்காதலால், “என்னுடை அன்பே” என்றுருகிய திருவாசகத்தில் கரைந்தனர் சிவனடியார்கள்.

ஆனந்தமாய்க் கசிந்துருக

“அனைத்திற்கும் முன்னுமாய், பின்னுமாய், முழுதுமாய், எங்கும் நிறைந்த, தளைகளற்ற தூயவனே! எல்லையற்ற பரம்பொருளே! அழகிய திருப்பெருந்துறையையுடைய சிவபிரானே! சிறப்புப் பொருந்திய சிவபுரத்துக்கு அரசனே! அன்பின் மிகுதியால் அடியேனது உயிரோடு உடம்பும் இன்பவெள்ளமாய்க் கசிந்து உருகும்படி, என் நிலைக்குத் தகுதியில்லாத, உனது இனிய அருளைப் புரிந்தாய்! இந்தப் பேருதவிக்கு, யான் உனக்குத் திரும்பச் செய்யக்கூடிய உதவி இல்லாதவனாயிருக்கிறேன்.” என்று உருகினார் மணிவாசகர். (முத்தன்–தளைகள் அற்றவன், முதல்-பரம்பொருள், ஆக்கை-உடம்பு, என் பரம்அல்லா - என் நிலைக்குத் தகுதியில்லாத)

அன்பினால் அடியேன் ஆவியோடு ஆக்கை ஆனந்தமாய்க் கசிந்துருக

என்பரம் அல்லா இன்னருள் தந்தாய்! யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறு!

முன்புமாய்ப் பின்பு முழுதுமாய்ப் பரந்த முத்தனே! முடிவிலா முதலே!

தென்பெருந் துறையாய் சிவபெருமானே! சீருடைச் சிவபுரத்து அரைசே! – திருவாசகம்: 22-2

அன்பினால் உள்ளக் கனிவோடு உடலும் நெகிழ்வதால், 'ஆவியோடு ஆக்கை ஆனந்தமாய்க் கசிந்துருக' என்றார். எதுவும் வேண்டாத, பெருங்கருணையாளனான இறைவனுக்குச் சிற்றுயிர்கள் என்ன செய்ய இயலும் என்பதை 'யான் இதற்கு இலனொர் கைம்மாறு' என்றார்.

அன்பரல்லாத பிறர் எவராலும் அறியமுடியாதவன் ‘தேவர் பிரானும், உண்மையான வீரனும், அழகிய திருப்பெருந்துறைக்குத் தலைவனும்’, ‘பிரமன் திருமால் உருத்திரன் ஆகிய மும்மூர்த்திகளாலும் அறிய முடியாத, முதல்வனாகிய, இன்ப வடிவினனும்’, ‘அன்பரல்லாத பிறர் எவராலும் அறியமுடியாத’, மலர் போன்ற ஒளியையுடைய இறைவனது, தூய மாமலர் போன்ற சிவந்த திருவடியின்கீழே, நம்தலை நிலைபெற்று நின்று விளங்கும், என்று சென்னிப்பத்து பதிகத்தில் அருளினார் மணிவாசகர்.

தேவ தேவன், மெய்ச் சேவகன், தென் பெருந்துறை நாயகன்,

மூவராலும் அறியொணா முதல் ஆய, ஆனந்த மூர்த்தியான்,

யாவர் ஆயினும், அன்பர் அன்றி, அறியொணா மலர்ச் சோதியான்,

தூய மாமலர்ச் சேவடிக்கண், நம் சென்னி மன்னி, சுடருமே!

- திருவாசகம்: 42-1

‘மூவராலும் அறியொணாத முதல்' ஆயினும், அன்பராயின் சோதியாய் வெளிப்பட்டுத் தோன்றுவான் என்பார், மாம்பழத்தோட்டத்தில் இருந்தாலும், மாம்பழத்தைப்பற்றி அறியாதவன் பசியோடேயே இருப்பான். அறிந்தவனும், பறித்து உண்ணாவிட்டால் பசிதீரமாட்டான். இறைவனைப் பற்றிய ஞானமில்லாதார் இறைவனை அறிய மாட்டார்கள்; இறைவனைப் பற்றிய ஞானமுடையார் அவன் இருப்பையும், தன்மையையும் அறிவினால் அறிவரேயன்றி, ‘இறைவனிடம் காதல் செய்யாவிட்டால்’ அனுபவத்தில் உணர மாட்டார்கள் ஆகையால் ஞானத்தினாலும் அவன் உணரப்பட மாட்டான்.

ஞானம் இருந்தும், ஆணவத்தால், மாலுக்கும், பிரமனுக்கும் இறைவனின்அடி-முடி அறியமுடியாமல் போயிற்று. அன்பனுக்கே இறைவனின் சுவையறிய இயலுமாதலால், 'யாவராயினும் அன்பரன்றி அறியொணா மலர்ச் சோதியான்' என்று இறைவனது எளிமைத்தன்மையைக் கூறினார். இதனால், இறைவன் அன்பரல்லாதார்க்கு அறியமுடியாதவன் என்பது புலனாகும். காதல் ஒன்றே அவனை அடையும் வழி.

இளமையிலேயே காதல் செய்யுங்கள்

அடியவர்களிடம், “அன்பர்களே! காலம் நம்வசம் உள்ளபோதே, இறைவனிடத்தில் காதல் செய்து பிழைத்துக்கொள்ளுங்கள். நினைத்தற்குஅரிய, உலகத்தை உண்ட திருமாலோடு, பிரமன், மற்றைய தேவர்களும் எளிதில் பெறஇயலாதவன், நஞ்சத்தை அமுதாக உண்ட, எங்கள் பாண்டிப்பெருமானாம் இறைவன்,

தன் அடியவர்களுக்கு, மூலபண்டாரமாகிய தனது அருள் முதற்கருவூலத்தைத் திறந்து அள்ளிஅள்ளி வழங்குகின்றான்; அதனைப் பெறுதற்கு, விரைவாக வந்து முந்திக்கொள்ளுங்கள்” என்று கருணையோடு அறிவுறுத்தினார் மணிவாசகர். (ஞாலம் உண்டான் - உலகத்தை உண்ட திருமால், நண்அரிய – எளிதில் அடையஇயலாத, ஆலம்உண்டான் - நஞ்சை உண்ட சிவபெருமான், மூலபண்டாரம்- முதற்கருவூலமாம் அருள், உய்மின் – பிழைத்துக்கொள்ளுங்கள்)

காலம் உண்டாகவே, காதல் செய்து உய்ம்மின்; கருது அரிய

ஞாலம் உண்டானொடு, நான்முகன், வானவர், நண் அரிய

ஆலம் உண்டான் எங்கள் பாண்டிப் பிரான்; தன் அடியவர்க்கு

மூல பண்டாரம் வழங்குகின்றான், வந்து, முந்துமினே. – திருவாசகம்:36-5

இறைவனிடத்து அன்பு செய்து வாழ்வதே மானிடப் பிறவியின்பயன் ஆதலின், 'காதல் செய்து உய்ம்மின்' என்றார். அதனை இளமையிலே தொடங்கினால் மட்டுமே போதிய காலம் கிடைக்குமாதலால், ‘காலம் உண்டாகவே' என்றார். இளமையில் இறைச் சிந்தனை தேவையில்லை; இளமையில் பொருள் மட்டும் தேடிக்கொள்வோம்; ஓய்வு பெற்றபின் இறைப்பேற்றைப் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைக்கும் பலரும், முதுமையில் கண், காது முதலிய பொறி-புலன்கள் குறைவுபட்டு, பல்வகை நோயில் அவதியுற்று, பிறவிப்பயனாம் இறைச் சிந்தை எழவொட்டாமல், படுக்கையில் வருந்துவதைக் காண்கிறோம். மனிதப் பிறவிகளின் இப்போக்கைக் கண்டு வருந்திய அய்யன் திருவள்ளுவர் நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவான பிறவிக்கு மனிதனை இட்டுச்செல்லும் என்றார்.

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்

மருளானாம் மாணாப் பிறப்பு. – திருக்குறள்: 351

எனவேதான் காலம் உள்ளபோதே, இளமையிலேயே, பொருள் சேர்க்கும்போதே, அருளையும் சேர்க்கும் வண்ணம், இறைவனிடம் 'காதல் செய்து உய்ம்மின்' என்றார் மணிவாசகப்பெருமான். கொடியநஞ்சை உண்டு, நாம்வாழ அமுதம் வழங்கிய தியாகேசன் சிவபெருமானிடம் தாம்பெற்ற இறைஇன்பத்தை நாமும் பெற வேண்டும் என்ற அன்புள்ளத்தினால், 'மூல பண்டாரம் வழங்குகின்றான் வந்து முந்துமினே' என்றார் மணிவாசகர். மூலபண்டாரம்-திருவருள் கருவூலம், அதில் உள்ள நிதி, வீடுபேறுப் பேரின்பம் ஆகும். கிடைத்த காலத்தை வீணாக்காமல் பயன்படுத்தி, இப்பிறவியிலேயே நாம் இறையருளாம் வீடுபேறு இன்பத்தைப் பெற வேண்டும் என்பதே திருவாசகத்தின் நோக்கம்.

இறைவன்பால் காதல் செய்வது எங்ஙனம்? “மலரிட்டு பூசை செய்தலா?, பாலாபிஷேகம் செய்தலா?, தங்கஅணிகலன்களால் அலங்கரித்து வழிபடுதலா? நாம் செலுத்தும் அன்பை அவன் ஏற்றுக்கொள்கிறானா என்று எவ்வாறு உணர்வது? காண இயலாத இறைவனிடம் அன்பு செலுத்தும் விதத்தை எங்களுக்கு அருளுங்கள்” என்று விண்ணப்பித்தனர் அடியார்கள். அடியவர்களின் வேண்டுகோளுக்கான விடைதரும் திருவாசகத் தேனை அடுத்த வாரம் சுவைப்போம்

தொடர்புக்கு:krishnan@msuniv.ac.in
(வாசகம் தொடரும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x