

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர்.
மலையே மகேசன் என போற்றப்படும் திருவண்ணாமலையில் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலையை 14 கி.மீ., தொலைவு கிரிவலம் வந்து பக்தர்கள் வழிபடுகின்றனர். பவுர்ணமி நாளில் கிரிவலம் சென்று சிவபெருமானை வழிபடுவது சிறப்புமிக்கது என்ற நம்பிக்கை பக்தர்களிடம் மேலோங்கி இருக்கிறது. அதன்படி, ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி, அண்ணாமலையை இன்று(7-ம் தேதி) அதிகாலையில் இருந்து பக்தர்கள் கிரிவலம் வர தொடங்கினர். பின்னர் மாலை 4 மணிக்கு பிறகு பக்தர்களின் கூட்டம் அதிகரித்து.
நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்தபடி, பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர். அவ்வபோது மழையின் குறுக்கீடு இருந்தாலும், பக்தர்களின் கிரிவலம் தொடர்ந்தது. பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் உள்ளனர். அப்போது அவர்களில் பலரும், அண்ணாமலையார் கோயில், கிரிவல பாதையில் உள்ள ஆதி அண்ணாமலையார் கோயில், திருநேர் அண்ணாமலையார் கோயில், அஷ்டலிங்க கோயில், சேத்துப்பட்டு அருணகிரிநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு 14 இடங்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது. சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கார்த்திகை தீபத் திருவிழாவின்போது கிரிவல செல்லும் பக்தர்களுக்கு செய்து கொடுக்க வேண்டிய அடிப்படை வசதிகள் மற்றும் கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை தெரிந்து கொள்வதற்காக, நேற்று நடைபெற்ற பவுர்ணமி கிரிவலத்தில் ஒத்திகை பார்க்கப்பட்டது. ஐ.ஜி.கண்ணன், டிஐஜி சக்தியபிரியா, மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் அண்ணாமலையார் கோயில் மற்றும் கிரிவல பாதையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்தனர்.