

காஞ்சிபுரம் மாவட்டம் திருவெக்கா யதோக்தகாரி பெருமாள் கோயில் திருமாலின் மங்களாசாசனம் பெற்ற திவ்ய தேசங்களில் 51-வது திவ்ய தேசம் ஆகும். பெருமாள் சயன கோலத்தில் அருள்பாலிக்கிறார். திருமழிசை ஆழ்வாருடன் சென்று மறுபடியும் இங்கு வந்ததால் இத்தலத்தில் வலமிருந்து இடமாக சயனித்து அருள்பாலிக்கிறார். பொய்கை ஆழ்வார் அவதாரத் தலம்.
இத்தலத்தை பொய்கையாழ்வார், திருமழிசையாழ்வார், பேயாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
பேயாழ்வார் பாசுரம்:
இசைந்த வரவும் வெற்பும் கடலும்
பசைந்தங்கு அமுது படுப்ப அசைந்து
கடைந்த வருத்தமோ கச்சி வெக்காவில்
கிடந்தது இருந்து நின்றதுவும் அங்கு.
மூலவர்: யதோக்தகாரி பெருமாள், சொன்ன வண்ணம் செய்த பெருமாள்
தாயார்: கோமளவல்லி தாயார்
தீர்த்தம்: பொய்கை புஷ்கரிணி
பிரம்மதேவன் செய்யும் யாகத்தை தடுக்க சரஸ்வதி தேவி வேகவதியாக மாறியபோது, பிரம்மதேவன் திருமாலை வேண்டினார். திருமாலும் பிரம்மதேவனுக்கு உதவி செய்யும் பொருட்டு, வேகவதியின் வெள்ளத்தைத் தடுக்க வேகவதி ஆற்றின் குறுக்கே அணை போல் சயனித்தார். இதனால் சரஸ்வதி தேவி தனது செயலுக்கு வெட்கமுற்று தலை குனிந்ததால், இத்தலத்துக்கு திருவெட்கா என்று பெயர் வழங்கலாயிற்று,
பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமழிசை ஆழ்வார் பார்க்கவ முனிவரின் மகனாக திருமழிசை தலத்தில் திருமாலின் சக்கரத்தின் அம்சமாக அவதரித்தார். பிரம்பறுக்க வந்த ஒருவர் இவரை எடுத்து வளர்த்தார். பிறந்தது முதல் திருமழிசை ஆழ்வார் பால் அருந்தாததை அறிந்த வேளாளர் ஒருவர், காய்ச்சிய பசும்பாலை ஆழ்வாருக்கு அளித்தார்.
அன்று முதல் இவர்கள் கொடுக்கும் பாலை அருந்தினார் திருமழிசை ஆழ்வார். ஒரு நாள் சிறிது பாலை மீதம் வைத்து விட்டார். திருமழிசை ஆழ்வார் மீதம் வைத்த பாலை வேளாளரும் அவரது மனைவியும் அருந்தினர். உடனே அவர்கள் முதுமை போய், இருவரும் இளமை வரப்பெற்றனர்.
இவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். குழந்தைக்கு கனிக்கண்ணன் என்று பெயரிட்டனர். ஆழ்வாருடனேயே இருந்து வந்த கனிக்கண்ணன், அவரது சீடனானான்.
ஒரு முறை திருமழிசை ஆழ்வார் திருவெக்கா தலத்துக்கு வந்து பெருமாளை சேவித்தார். அன்று முதல் பல ஆண்டுகள் இத்தல பெருமாளுக்கு சேவை செய்தார். ஒரு சமயம் ஆசிரமத்தை தூய்மைப்படுத்தும் மூதாட்டிக்கு இளமை திரும்புமாறு செய்தார் திருமழிசை ஆழ்வார். இளமையாக இருந்த அவளின் அழகில் மயங்கிய பல்லவ மன்னர் அவளை தன் மனைவியாக்கிக் கொண்டார். காலம் செல்லச் செல்ல, மன்னருக்குமுதுமை வந்தது. ஆனால் அரசி இளமையாகவே இருந்தாள். இதனால் கலங்கிய மன்னர் தனக்கும் இளமை திரும்ப என்ன வழி என்று யோசித்தார்.
அதனால் ஆழ்வாரின் சீடனான கனிக்கண்ணனிடம் இதுகுறித்து கேட்டார். தனக்கும் இளமை திரும்ப வழிகேட்டார். ஆனால் இதற்கு கனிக்கண்ணன் உடன்படாததால் அவனை நாடு கடத்த உத்தரவிட்டார்மன்னர். இதை அறிந்த ஆழ்வார், சீடனுடன் தானும் வெளியேற முடிவு செய்தார். உடனே யதோக்தகாரி பெருமாளிடம் சென்று, ‘நாங்கள் இல்லாத இடத்தில் உனக்கும் வேலை இல்லை. எங்களுடன் வா” என்றார். பெருமாளும் தனது பாம்பு படுக்கையை சுருட்டிக் கொண்டு ஆழ்வாருடன் சென்றார்.
பெருமாள் அவர்களுடன் சென்றதால்,நகரம்பலவித இயற்கை சோதனைகளுக்கு உள்ளாயிற்று. இதனால் மறுநாள் காலை அரும்பியும் இருள் விலகாது இருந்தது.
இதுகுறித்து பெருமாளிடம் முறையிட மன்னர் கோயிலுக்கு வந்தபோது, அங்கு பெருமாள் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியுற்றார். தன்னுடைய தவற்றை உணர்ந்தார் மன்னர்.
உடனே திருமழிசை ஆழ்வாரையும் கணிக்கண்ணனையும் தேடிக் கண்டுபிடித்து காஞ்சிபுரத்துக்கு திரும்புமாறு மன்னர் வேண்டினார். அவர்கள் காஞ்சிக்கு திரும்பும்போது, திருமாலும் அவர்களுடன் திரும்பினார். சொன்னதைச் செய்ததால், இந்த ஊர் பெருமாளுக்கு சொன்ன வண்ணம் செய்த பெருமாள் என்ற பெயர் ஏற்பட்டது.
திருமழிசை ஆழ்வாருடன் பெருமாள் புறப்பட்ட நிகழ்ச்சி இங்கு ஆண்டுதோறும் தை மாத மகம் நட்சத்திர தினத்தில்உற்சவமாக நடைபெறுகிறது.
இங்கு ராமர், கருடன், ஆழ்வார்கள் சந்நிதிகள் காணப்படும். முதலாழ்வார்கள் மூவருள் ஒருவரான பொய்கையாழ்வார் இத்தலத்தில் உள்ள பொய்கைப் புஷ்கரணியில் திருவோண நட்சத்திரத்தில் திருமாலின் பாஞ்ச சன்யம் என்னும் திருச்சங்கின் அம்சமாக ஒரு தாமரை மலரில் அவதாரம் செய்தார்.
ஸ்ரீராமருடன் சீதை, லட்சுமணன். சுமார் 100 வருட வயதான இந்த விக்கிரகத்திருமேனிகளில் சீதையின் வடிவம் தனிச் சிறப்புடன் விளங்குகிறது. குறிப்பாக அன்னையின் தலையலங்காரம் சுருள்முடி, ஃப்ரில் வைத்த ஜடை, ராக்கொடி, கிளி என்று நுணுக்கமாகச் சிலை செய்துள்ளனர். நின்ற திருக்கோலத்தில் சுமார் 6 அடி உயரத்தில் சிலையாக உள்ளார் ஆண்டாள். சிற்பக் கலைக்கு ஒரு உதாரணமாக சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சீதையின் தோளில் கிளி வந்தது எப்படி?
ஒருவேளை இந்தக் கோயிலில் தனி சந்நிதியில் கொலுவிருக்கும் ஆண்டாள், வழக்கமான கொண்டையும் கிளியும் இல்லாது காட்சி தருகிறாளே…. அந்தக் கிளிதான் சீதையிடம் சென்று விட்டதோ? ஆனால், சரஸ்வதி தேவி, தன் நாயகனான பெருமாளை சிரமப்படுத்திய கோபத்தில்தான் அவ்விரண்டையும் ஆண்டாள் துறந்தாள் என்றும் விளக்கம் தருகிறார்கள்.
காஞ்சிபுரம் ரங்கசாமி குளத்துக்கு வடக்கே 4 ஏக்கர் நிலப் பரப்பளவில் ஐந்து நிலை ராஜ கோபுரத்துடன் இரண்டு பிரகாரங்களுடன் உள்ள இத்தல மூலவரின் விமானம் வேதசார விமானம் எனப்படும். பெருமாளை எழுந்தருளச் செய்யும்போது வீணை இசைப்பது இக்கோயிலின் தனிச் சிறப்பு. பக்தன் அவமானப்படுகிறான் என்பதால் அவனுக்காக ஊரை விட்டே தன் கணவர் நீங்குகிறார் என்பதை அறிந்தும், தான் தனித்திருக்க வேண்டிய சூழ்நிலையையும் பொருட்படுத்தாமல் அதற்கு அனுமதி கொடுத்தவள் கோமளவல்லித் தாயார்.
வைகுண்ட ஏகாதசி தினத்தில் சிறப்பு ஆராதனைகள், பெருமாள் புறப்பாடு நடைபெறும்.
வேண்டிய வரம் எல்லாம் தரும் திருத்தலம்.
அமைவிடம்: காஞ்சிபுரத்திலேயே பேருந்து நிலையத்தில் இருந்து 3 கிமீ தொலைவில் உள்ளது.