

பேரண்டத்தினையே விளக்கும் ஸ்வரூபமாக நடராஜர் சிலை இருக்கிறது என வானியல் ஆய்வாளர்கள் சொல்லிவிட்டனர். இத்தனை பெருமைக்கும் உரிய நமது நடராஜர் சிலை யாரால் முதலில் செய்யப்பட்டது, அது இப்போது எங்கே இருக்கிறது என்ற கேள்வி நம்மில் சிலருக்கு இருக்கும்.
இந்தப் சிதம்பரத்தில் ஆட்சி செய்த சிங்கவர்மன் என்பவன்தான் முதலில் நடராஜர் சிலையைச் செய்ய முற்பட்டவன். அவன் நமச்சிவாயமுத்து என்ற சிற்பியைக் கொண்டு நடராஜர் சிலையைச் செய்வித்தான். நிறைவு செய்யப்பட்ட நடராஜர் சிலை பிரமிக்கவைக்கும் அழகில் தோன்ற, தாமிரத்தாலான அச்சிலைக்கு பதிலாக தங்கத்தினால் சிலையைச் செய்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று கருதி தங்க நடராஜர் சிலையைச் செய்யச் சொன்னான். செய்து முடித்ததும் சிலையைக் காணும்போது பேராச்சரியம்! அந்த தங்க நடராஜர் சிலை மீண்டும் தாமிரச் சிலையாகிவிட்டது. பிறகு, மன்னரின் கனவில் தோன்றிய சிவபெருமான், “நான் உன் கண்களுக்கு மட்டுமே தங்கமாகத் தெரிவேன். பிறர் கண்ளுக்குத் தாமிரமாகவே தெரிவேன்’’ என்று சொல்லிச்சென்றார். இதனால், மகிழ்ந்த மன்னர் அந்த நடராஜர் சிலையையே சிதம்பரத்தில் வைத்தான்.
முதலில் செய்யப்பட்ட தாமிரச்சிலை மற்றொரு சிற்பியின் வசமாக ஒப்படைக்கப்பட்டது. அவனது கனவில் தோன்றிய சிவபெருமான் அந்தச் சிலையை எடுத்துக்கொண்டு தென்னாட்டுக்குச் செல்லுமாறு அவனுக்கு ஆணையிட்டார்.
முதல் சிலை?
தாமிரபரணியின் வடகரையில் ராஜவல்லிபுரம் கிராமம் உள்ளது. இவ்வூரிலேயே மன்னர் ராமபாண்டியனின் அரண்மனை இருந்தது. இவர் தினமும் திருநெல்வேலியிலுள்ள நெல்லையப்பர் கோயிலுக்கு சென்று வழிபட்ட பிறகே சாப்பிடுவார். ஒருமுறை தாமிரபரணியில் பெரும் வெள்ளம் வந்துவிட்டதால் அவரால் ஆற்றைக் கடக்க முடியவில்லை. அன்று முழுவதும் ராமபாண்டியன் பட்டினியாக இருந்தார். அன்று இரவில் மன்னர் கனவில் நெல்லையப்பர் தோன்றி, “இனிமேல் உன் மாளிகையின் அருகிலேயே நான் கோயில் கொள்ள முடிவு செய்துள்ளேன். சிதம்பரத்திலிருந்து ஒருவன் எனது நடனமாடும் வடிவுடைய சிலையுடன் வருவான். அந்தச் சிலையை உன் மாளிகையின் அருகில் பிரதிஷ்டை செய்து கோயில் கட்டு. கோயில் கட்டுமிடத்தின் அருகில் ஒரு புற்றினுள் எறும்புகள் ஊர்ந்துசெல்லும். அந்த இடத்தில் லிங்கம் ஒன்றையும் பிரதிஷ்டை செய்துவிடு” எனக் கூறி மறைந்தார்.
அதன்படியே, சிற்பி ஒருவர் நடராஜரின் சிலை ஒன்றைச் சுமந்து வந்தார். (இவர்தான் சிதம்பரத்தில் இருந்து சிலையை எடுத்துச்செல்ல சிவபெருமானால் பணிக்கபட்ட சிற்பி. அவர் கொண்டுவந்தது முதலில் சிதம்பரம் சிற்பியால் செய்யப்பட்ட முதல் நடராஜர் சிலை). பயணத்தின்போது வழியில் ஓரிடத்தில் சிலை கனத்தது. அதற்கு மேல் அவரால் சிலையைச் சுமக்க முடியவில்லை. சிலையை அவர் செப்பறை என்ற இடத்தில் வைத்துவிட்டு, களைப்பினால் தூங்கி விட்டார். கண் விழித்துப் பார்த்தபோது சிலையைக் காணவில்லை. அவர் பதைபதைத்து மன்னனிடம் முறையிட்டார். ராமபாண்டியன் அதிர்ச்சியடைந்து சிலையைத் தேடிச்சென்றார். வனத்தில் ஓரிடத்தில் சலங்கை ஒலியும், யாரோ நடனமாடும் சத்தமும் கேட்டது. அந்த இடத்தில் மன்னர் சென்று பார்த்தபோது, நடராஜரின் சிலை இருந்ததைக் கண்டார். அதன் பக்கத்திலேயே ஒரு குழியில் எறும்புகள் ஊர்ந்து சென்று மறைந்து கொண்டிருந்தன. ராமபாண்டியன் மகிழ்வடைந்து லிங்கம் ஒன்றை எறும்புகள் ஊர்ந்த குழியின் மீது பிரதிஷ்டை செய்தார். நடராஜருக்கும் தனிச் சன்னதி அமைத்தார்.
அரசனின் ஆசை
ஒரே போல 5 சிலைகள்! சிதம்பரத்தில் இருந்து செப்பறைக்கு வந்த நடராஜர் சிலைக்கு மன்னர் ராமபாண்டியன் கோயில் கட்டினான் அல்லவா!. அந்த கோயிலில் உள்ள நடராஜர் சிலையைக்கண்ட ராம்பாண்டியனின் கீழ் ஆண்ட வீரபாண்டியன் என்ற சிற்றரசன் அதேபோல தனக்கும் இரண்டு சிலைகள் வேண்டும் என ஆசைப்பட்ட்டான். சிலைகள் இரண்டையும் கட்டாரிமங்கலத்திலும் கரிசூழ்மங்கலத்திலும் பிரதிஷ்டை செய்ய விரும்பினான். முடிவு பெற்ற சிலைகளின் பேரழகைக் கண்டு அவன் இன்புற்றான். அதே சமயத்தில், இதே போல சிலைகள் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற எண்ணத்தில் சிற்பியைக் கொன்றுவிடும்படி காவலாளிகளுக்குக் கட்டளையிட்டான்.
வீரர்கள் சிற்பியின் மீது இரக்கம் கொண்டு அவரது கையை மட்டும் வெட்டிவிட்டனர். இதைக் கேள்விப்பட்ட ராமபாண்டியன், வீரபாண்டியன் மீது கோபம் கொண்டான். ஸ்தபதியின் கையை வெட்டிய வீரபாண்டியனின் கைகளைத் துண்டித்தான். வீரபாண்டியடின் செய்வித்த இரண்டு சிலைகளும் அவன் எண்ணப்படியே கட்டாரிமங்கலத்திலும் கரிசூழ்மங்கலத்திலும் பிரதிஷ்டை செய்தான் ராமபாண்டியன்.
கை துண்டிக்கப்பட்ட சிற்பிக்கு மரக் கை பொருத்தப்பட்டது. கலையார்வம் மிக்க அந்த சிற்பி, மரக் கைகளின் உதவியுடன், அதே போல மற்றொரு சிலை செய்தார். அந்தச் சிலையின் அழகைப் பார்த்து அதன் கன்னத்தில் கிள்ளினான். அவ்வாறு கிள்ளிய வடுவுடன் அந்த சிலை உருவானது. அதனைக் கருவேலங்குளம் கோயிலில் பிரதிஷ்டை செய்தனர்.
இவ்வாறு சிதம்பரத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தில் செப்பறை, கரிசூழ்ந்தமங்கலம், கருவேலங்குளம், கட்டாரிமங்கலம் என ஐந்து இடங்களில் ஒரே போல ஐந்து சிலைகள் இருக்கின்றன.
ராமபாண்டியன் செப்பறையில் கட்டிய கோயில் தாமிரபரணியில் உண்டான பெருவெள்ளத்தால் அழிந்துவிட்டது. அதன் பிறகு ஆரை அழகப்ப முதலியார் என்பவர் இப்போதுள்ள கோயிலைக் கட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
செப்பறை கோயிலில் இருக்கும் உலகின் முதல் நடராஜரின் அருமை எப்போது உலகறியும் என்பதும் அந்த நடராஜருக்கே வெளிச்சம்.
செப்பறை கோயிலில் இருக்கும் உலகின் முதல் நடராஜரின் அருமை எப்போது உலகறியும் என்பதும் அந்த நடராஜருக்கே வெளிச்சம்.