

திருமலை: திருமலையில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் முடிந்த பிறகு அதில் ஏற்பட்ட குறைகளை களைவதற்காக புஷ்ப யாகம் நடத்தப்படுகிறது. மேலும் பூகம்பம், புயல், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களில் இருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டியும் புஷ்ப யாகம் செய்யப்படுகிறது.
தெலுங்கு கார்த்திகை மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்த புஷ்ப யாகம் நடத்தப்படுகிறது. அதன்படி திருமலையில் நேற்று புஷ்ப யாகம் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது.
முன்னதாக திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயில் கல்யாண உற்சவ மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பருக்கு சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து, திருமலையில் உள்ள தோட்டக்கலை அலுவலக வளாகத்தில் இருந்து ரோஜா, முல்லை, மல்லி, சாமந்தி, தாழம்பூ, கனகாம்பரம், தாமரை, அல்லி, சம்பங்கி, மனோரஞ்சிதம் போன்ற மலர்களும் துளசி, தவனம், மருவம், வில்வம் போன்ற புனித இலைகளும் கொண்ட கூடைகளை தலைமை நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி, தோட்டக்கலை துறை அதிகாரி நிவாசுலு மற்றும் அதிகாரிகள், ஸ்ரீவாரி சேவகர்கள் ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வந்தனர். இதையடுத்து உற்சவர்களுக்கு இந்த 9 டன் மலர்களால் புஷ்ப யாகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்களும் கலந்துகொண்டனர்.