

காஞ்சி/செங்கை/திருவள்ளூர்: காஞ்சி, செங்கை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள முருகப் பெருமான் கோயில்களில், கந்தசஷ்டியின் நிறைவாக நேற்று நடைபெற்ற திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் நகரில் அமைந்துள்ள கந்தசுவாமி கோயிலில் கடந்த 25-ம் தேதி கொடியேற்றத்துடன் கந்தசஷ்டி விழா தொடங்கியது. கந்தசஷ்டியின் நிறைவு உற்சவமாக கருதப்படும் திருக்கல்யாண உற்சவம் நேற்று நடைபெற்றது. இதில், வள்ளி, தெய்வயானையுடன் முருகப்பெருமான் உற்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில், அர்ச்சகர்கள் வேதங்கள் முழங்க சிறப்பு வாத்தியுங்களுடன் 6 மணியிலிருந்து 7:30 மணிக்குள்ளான முகூர்த்தத்தில் தெய்வயானை, முருகப்பெருமான் திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர், தம்பதி சமேதராய் முருகப்பெருமான் யானை வாகனத்தில் எழுந்தருளினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான பணியாளர்கள் மேற்கொண்டனர்.
காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோயில், இளையனார் வேலூர், வல்லக்கோட்டை முருகப்பெருமான் கோயில், அச்சிறுப்பாக்கத்தை அடுத்த நடுபழனி, பெரிய காஞ்சிபுரம் நெமந்தக்கார தெருவில் உள்ள பழனி ஆண்டவர் கோயில் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முருகப்பெருமான் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
திருவள்ளூர்: திருத்தணி முருகன் கோயிலில் நேற்று காலை மலைக்கோயில் அலுவலகத்திலிருந்து, மேள தாளங்கள் முழங்க, பட்டு வஸ்திரங்கள், பழங்கள் மற்றும் சீர்வரிசையுடன் பக்தர்கள் ஊர்வலமாக கோயிலில் உள்ள காவடி மண்டபத்துக்கு வந்தனர். பிறகு, வள்ளி, தெய்வானையுடன் காவடி மண்டபத்தில் எழுந்தருளிய கல்யாண உற்சவருக்கு, அர்ச்சகர்களால் சிறப்பு மந்திரங்கள் ஓதப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்நிகழ்வில், திருத்தணி, திருவள்ளூர், அரக்கோணம், சித்தூர் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும், திருக்கல்யாண விழாவை தொடர்ந்து, பெண் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மஞ்சள் குங்குமம், தாலிக்கயிறு ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது. அதேபோல், மாவட்டத்தில் உள்ள சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோயில்களில் நேற்று திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.