Published : 31 Oct 2022 06:34 AM
Last Updated : 31 Oct 2022 06:34 AM

108 வைணவ திவ்ய தேச உலா - 44.அஷ்டபுயக்கரம் ஆதிகேசவப் பெருமாள் கோயில்

முனைவர் கே.சுந்தரராமன்

காஞ்சிபுரம் மாவட்டம் அஷ்டபுயக்கரம் (அஷ்டபுஜம்) ஆதிகேசவப் பெருமாள் கோயில் திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 44-வது திவ்ய தேசம் ஆகும். 108 திருப்பதிகளில் இங்கு மட்டும்தான் பெருமாள் எட்டு திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறார். இங்குள்ள தாயாரை தனியாக பாடல் பாடி மங்களாசாசனம் செய்த சிறப்பு பெற்ற தலம். மணவாள மாமுனிகளும் ஸ்வாமி தேசிகனும் இத்தலத்தைப் பாடியுள்ளனர். இத்தலத்தை திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

திருமங்கையாழ்வார் பாசுரம்:

எங்ஙனும் நாம் இவர் வண்ணம் எண்ணில் ஏதும் அறிகிலம் ஏந்திழையார்

சங்கும் மனமும் நிறைவும் எல்லாம் தம்மன ஆகப் புகுந்து தாமும்

பொங்கு கருங்கடல் பூவைகாயா போது அவிழ் நீலம் புனைந்தமேகம்

அங்ஙனம் போன்றிவர் ஆர்கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே.

மூலவர்: ஆதிகேசவப் பெருமாள், கஜேந்திர வரதன்

தாயார்: அலர்மேல்மங்கை, பத்மாசினி

தீர்த்தம்: கஜேந்திர புஷ்கரிணி

விமானம் : சக்ராக்ருதி விமானம்

பிரம்ம தேவர் செய்யும் யாகத்தை அழிக்க சரஸ்வதி தேவி பல நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அவற்றில் ஒன்றுதான் கொடிய ரூபத்தினளாக காளியைப் படைத்து, அவளுடன் கொடிய அரக்கர்களையும் ஏவியதாகும். ஆனால் பிரம்மதேவர் திருமாலை தஞ்சமடைந்ததால், காளிரூப ஆவேசத்துக்கு எதிராக பேராவேசம் கொண்டு நிமிர்ந்தார்.

நெடிதுயர்ந்த அந்த உருவத்துக்கு எட்டு கைகள் முளைத்தன. வலப்புற நான்கு கரங்களும் சக்கரம், வாள், மலர், அம்பு என ஏந்தியிருக்க, இடப்புற நான்கு கரங்களும் சங்கு, வில், கேடயம், தண்டாயுதம் என பற்றியிருந்தன.

இந்த அஷ்டபுயக் கரத்தான் தாக்குதலைத் தொடங்கும் முன்னரே காளியும் பிற அரக்கர்களும் அவருடைய தோற்றத்தைக் கண்டு நிலைகுலைந்து போயினர். தன் கைகளை உயர்த்தி வேகமாய் வீச, அவர்கள் அனைவரும் அந்த ஒரு வீச்சிலேயே வதைபட்டு வீழ்ந்தனர்.

தன் யாகத்தைக் காப்பாற்றிய திருமாலுக்கு பிரம்மதேவர் நன்றி தெரிவித்ததோடு, இந்தச் சம்பவம் நிரந்தர நினைவாக நிலைத்திருக்க பரந்தாமன் அதே அஷ்டபுயக்கரத்தானாக அங்கேயே கோயில் கொள்ள வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார். எட்டு கரங்களாலும் அவருக்கு ஆசியளித்து அப்படியே நிலைகொண்டார் எம்பெருமான்.

எட்டு கைகளோடு ஆயுதம் ஏந்தி போராடி அந்த அரக்கர்களை அழித்ததால், இத்தலத்துக்கு ‘அஷ்டபுயக்கரம்’ என்ற பெயர் ஏற்பட்டது.

முன்னொரு காலத்தில் மகாசந்தன் என்னும் யோகிக்கு இந்த பூவுலக வாழ்க்கையை முடித்து விட்டு இறைவனின் திருவடி சேர விருப்பம் ஏற்பட்டது. இந்திரனுக்கு நிகரான தகுதி பெற்றிருந்த இவர் பெருமாளை நோக்கி நீண்ட காலம் தவமிருந்தார். அவரது தவத்தை இந்திரன் கலைக்க முற்பட்டான். முதலில் தேவலோக நடன மங்கைகளை அனுப்பி வைத்தான். இதற்கெல்லாம் யோகி அசரவில்லை. பிறகு அவர் முன் பல களிறுகளை நிறுத்தி அவற்றை களியாட்டம் போடச் செய்தான். முனிவரும் தன்னிலை மறந்து ஒரு யானையாக உருமாறி அவற்றுடன் களியாட்டம் போடலானார். அவற்றுடனேயே காடுகாடாக சுற்றித் திரிந்தார்.

ஒரு நாள் சாளக்கிராம தீர்த்தத்தில் பிற யானைகளுடன் நீராடியபோது, தன் முற்பிறவி நினைவுக்கு வர வெதும்பினார். அங்கிருந்த மிருகண்டு முனிவர் யானையின் துயரம் அறிந்து காஞ்சிபுரம் சென்று வரதரை வணங்கினால் பழைய உரு கிடைக்கும் என்று அறிவுறுத்தினார். காஞ்சிபுரம் வந்த (முனிவர்) யானை தினமும் திருமாலுக்கு தாமரை மலரால் இறைவனை ஆராதித்து வந்தது. அப்போது ஒரு நாள் குளத்தில் இருந்து தாமரை மலர் பறிக்கும்போது முதலை ஒன்று யானையின் காலை பிடித்துக் கொண்டது. ஆதிமூலமே என்ற யானை அலறியது. யானையின் அறைகூவலுக்கு செவிசாய்ந்த திருமால் தன் சக்ராயுதத்தால் முதலையை வீழ்த்தி முனிவரைக் காப்பாற்றினார். முனிவரும் யானை உருவில் இருந்து, தனது பழைய உருவத்தைப் பெற்றார்.

இப்படி கஜேந்திரனுக்கு அடைக்கலம் கொடுத்த தலம் என்பதால் இத்தலம் மிகவும் புண்ணியத் தலமாகக் கருதப்படுகிறது.

சக்ராக்ருதி (ககநாக்ருதி, வியோமாகர) விமானத்தின்கீழ் மூலவர் ஆதிகேசவப் பெருமாள், நின்ற கோலத்தில் மேற்கு நோக்கி சேவை சாதிக்கிறார். மூலவர் எட்டு கைகளுடன் காட்சி கொடுப்பதால் இத்தலத்துக்கு இப்பெயர் ஏற்பட்டது. எட்டுக் கைகளிலும் சக்கரம், வால், மலர், அம்பு, சங்கு, வில், கேடயம், கதை ஆகிய எட்டு ஆயுதங்களை ஏந்தியிருக்கிறார். வைரமேகன் என்னும் தொண்டை நாட்டு மன்னன் இப்பெருமாளுக்கு தொண்டு புரியும் பொருட்டு தற்போதுள்ள வடிவமைப்பில் இக்கோயிலைக் கட்டினான். இங்கு சொர்க்கவாசலும் கோயிலின் நுழைவு வாசலும் வடக்கு நோக்கி இருப்பது கோயிலின் சிறப்பு அம்சமாகும்.

திருமாலின் அஷ்டபுஜக் கோலத்தைக் கண்டு திருமங்கையாழ்வார் பிரமிப்பு மேலிட,“ஐயா நீர் யார்?”என்று வினவ, “அட்டபுயகரத்தேன்” என்று திருமாலே புன்முறுவலுடன் பதிலளித்திருக்கிறார்.

எட்டு திருக்கரங்கள் மட்டுமல்லாது, பட்டுமேனி கொண்ட ஏந்திழையாரின் வண்ணத்தோடு வெண்சங்கின் தூய வெண்மையையும் கலந்து கருநீலக் கடலின் நிறத்தோடு சேர்த்து, அதே கடலில் அப்போதுதான் பூத்த காயாம்பூவின் வண்ணமும் குழைத்து கருமையும், நீலமும், பழுப்பும் சேர்ந்த இந்த அதிசுந்தர வண்ண ரூபத்தில் விளங்கும் திருமால் என்று வர்ணிக்கலாமா என்று அட்டபுயகரத்தானை ஒரு நாயகி பாவத்தில் இருந்து வர்ணித்து மகிழ்கிறார் திருமங்கையாழ்வார்.

லட்சுமி வராஹ மூர்த்தி, ராமர், ஆண்டாள், பேயாழ்வார், கருடன், அனுமன் சந்நிதிகளும் காணப்படுகின்றன.

திருவிழாக்கள்

வைகுண்ட ஏகாதசி, ஸ்ரீராம நவமி, நவராத்திரி தினங்களில் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெறும்.

பூமாதேவியை அழிக்க வந்த அரக்கனை இத்தல பெருமாள் அழித்து அவளை காப்பாற்றியதால், வீடுகட்ட நிலம் வாங்க இருப்பவர்கள், விளை நிலங்களை வாங்குபவர்கள், கட்டிய வீடுகளில் பிரச்சினை உள்ளவர்கள் இங்கு வழிபட்டு பலனடைகிறார்கள்.

பல இன்னல்களை அனுபவித்தவர்களும், வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு கதி கலங்கி நிற்பவர்களுக்கும், சொத்து சுகம் வீடு மனைகளை அநியாயமாகப் பறிகொடுத்து நிற்பவர்களுக்கும் ஒரே புகலிடம் இத்தலம் ஆகும். இத்திருத்தலப் பெருமாளை 9 முறை வலம் வந்து வணங்கினால் துன்பம் அனைத்தும் தீர்ந்துவிடும்.

தாயார் சந்நிதியின் தொட்டில் கட்டி நேர்ந்து கொண்டால், மழலைப் பேறு கிட்டி, வாழ்வும் மகத்தானதாக அமையும். லட்சுமி வராஹன் சந்நிதியில் வேண்டிக் கொண்டால் பூமி சம்பந்தமான அனைத்துப் பிரச்சினைகளும் தீரும் என்பது நம்பிக்கை.

அமைவிடம்: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் சந்நிதியில் இருந்து மேற்கே 1 கிமீ தூரத்தில் உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x