Published : 29 Oct 2022 06:45 AM
Last Updated : 29 Oct 2022 06:45 AM

108 வைணவ திவ்ய தேச உலா - 42 | திருக்கோவிலூர் திருவிக்கிரம பெருமாள் கோயில்

முனைவர் கே.சுந்தரராமன்

திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் செங்கை மாவட்டம் திருக்கோவலூர் திருவிக்கிரம பெருமாள் கோயில் 42-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. இக்கோயில் திருமாலும், துர்க்கையும் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்றனர். மூலவரின் திருமேனி மரத்தால் ஆனது. சாளக்கிராமத்தால் ஆன கிருஷ்ணர் தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறார்.

இத்தலத்தை பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

திருமங்கையாழ்வார் பாசுரம்:

மஞ்சாடு வரை ஏழும் கடல்கள் ஏழும் வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம்,

எஞ்சாமல் வயிற்றடக்கி ஆலின் மேல் ஓர் இளந்தளிரில் கண் வளர்த்த ஈசன் தன்னை,

துஞ்சா நீர்வளம் சுரக்கும் பெண்ணைத் தென்பால் தூய நான்மறையாளர் சோமுச் செய்ய

செஞ்சாலி விளைவயலுள் திகழ்ந்து தோன்றும் திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.

மூலவர்: திருவிக்கிரமர் (உலகளந்த பெருமாள்)

உற்சவர்: ஆயனார், கோவலன்,

தாயார்: பூங்கோவல் நாச்சியார், புஷ்பவல்லி தாயார்,

தலவிருட்சம்: புன்னை மரம்,

தீர்த்தம்: பெண்ணையாறு, கிருஷ்ண தீர்த்தம், ஸ்ரீசக்ரதீர்த்தம்

ஸ்ரீமத் பாகவதம் என்ற நூலில் உள்ள எழுத்துகளின் வடிவில் தானே அந்த நூலுக்குள் உறைவதாக பகவான் ஸ்ரீகிருஷ்ணனே உரைத்திருக்கிறார். அப்படிப்பட்ட கிருஷ்ணனின் விருப்பத் தலங்களாக ஐந்து தலங்களைக் கூறுவதுண்டு. அவை திருக்கோவிலூர், திருக்கண்ணங்குடி, திருக்கபிஸ்தலம், திருக்கண்ணபுரம் மற்றும் திருக்கண்ணமங்கை ஆகும்.

மகாபலி என்ற அரசன், தான தர்மத்தில் சிறந்தவனாக விளங்கினான். இருப்பினும் தன்னை விட யாரும் புகழ் அடைந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தான். அதற்காக அசுரகுரு சுக்கிராச்சாரியார் தலைமையில் மிகப் பெரிய யாகம் ஒன்றை நடத்தினான். நற்குணங்கள் பல இருந்தும் இந்த ஆணவம் அவனிடம் இருந்து விலக வேண்டும் என்று திருமால் எண்ணம் கொண்டார்.

வாமன அவதாரம் (காஷ்யபர் அதிதி தம்பதிக்கு மகனாக) எடுத்தார் திருமால். யாகம் நடைபெறும் இடத்துக்கு வந்தார் திருமால். முன்றடி மண்ணை தானமாகக் கேட்கிறார். வந்திருப்பது பெருமாள் என்பதை சுக்கிராச்சாரியார் உணர்ந்து கொள்கிறார். மகாபலியை மூன்றடி மண்ணை தரவிடாமல் தடுக்கிறார். இருப்பினும் தானம் தர மகாபலி ஒப்புக் கொள்கிறான். உடனே திருமால் விஸ்வரூபம் எடுத்து தன் பாதத்தின் ஓர் அடியை பூமியிலும்,மற்றோர்அடியை ஆகாயத்திலும் வைத்துவிட்டு, மூன்றாவது அடியை எங்கு வைப்பது என்று கேட்கிறார். அப்போது வந்திருப்பது பெருமாள் என்பதை உணர்ந்து கொள்கிறான் மகாபலி.

உடனே தன் தலையை தாழ்த்தி தன் தலையைத் தவிர வேறு இடம் தன்னிடம் இல்லை என்று மகாபலி கூற, திருமாலும் அவன் தலைமீது தன் காலை அழுத்துகிறார். மூன்றாவது அடியை தாரை வார்த்துத் தருமாறு கேட்கிறார்.

மகாபலி கமண்டலத்தை எடுத்து தாரை வார்த்துத் தர முயல, சுக்கிராச்சாரியார் வண்டு உருவம் எடுத்து கமண்டலத்தில் இருந்து தண்ணீர் வராதபடி அதன் வாய்ப்பகுதியை அடைக்க முயல்கிறார். அப்போது திருமால் அவரை தர்ப்பைப் புல்லால் குத்தியதும், கண்களை இழந்து வெளியேறுகிறார் சுக்கிராச்சாரியார். மகாபலியும் மூன்றாவது அடியை தானம் செய்து மண்ணில் புதையுண்டு போனான். அவனது ஆணவத்தை அடக்கிய பிறகு, மகாபலியை தன்னுடன் சேர்த்துக் கொண்டார் திருமால் என்று தல வரலாறு கூறுகிறது.

மிருகண்டு மற்றும் சில முனிவர்கள் வாமன அவதாரத்தை தரிசிக்க வேண்டும் என்ற விருப்பத்தால், திருமாலை நோக்கி தவம் செய்தனர். மிருகண்டு முனிவர் ஒரே நேரத்தில் வாமன, திருவிக்கிரம அவதார கோலத்தை காண விரும்பினார். ஏதும் உண்ணாது தீவிரமாக விரதம் இருக்கும் மிருகண்டு முனிவரைக் கண்டு நான்முகனே ஆச்சரியப்பட்டார். கிருஷ்ண பத்திரா நதிக்கரையில், கிருஷ்ண தலத்தில் இருந்து, கிருஷ்ண நாமம் ஜெபித்தபடி திருமாலை நோக்கி தவம் செய்தால், நினைத்தது நடக்கும் என்று மிருகண்டு முனிவரிடம் கூறினார் நான்முகன்.

மிருகண்டு முனிவரும் இத்தலத்துக்கு வந்து தவம் செய்து, வாமன மற்றும் திருவிக்கிரம அவதார திருக்கோலத்தைக் கண்டார். ஒரு காலத்தில் இத்தலத்துக்கு கிருஷ்ணர் கோயில் என்று பெயர் இருந்ததாகக் கூறுவர். சதுர் யுகங்களுக்கு முற்பட்ட தொன்மையை உடையது இத்தலம்.

கோபாலன் என்ற சொல்லே திரிந்து கோவாலன் ஆகி திருக்கோவலூர் என்றும் கோவிலூர் என்று ஆகி இருக்க வேண்டும். மிருகண்டு முனிவர் முன் தோன்றிய கிருஷ்ண பகவானின் சாளக்கிராம திருமேனி, தற்போது இத்தலத்தின் முன்புறத்திலேயே உள்ளது. துர்க்கை அம்மனும், கிருஷ்ண பகவானைத் தொடர்ந்து, இத்தலத்திலேயே கோயில் கொண்டாள்.

எது சிறியதோ அந்த வாமனமும் நான் தான், எது பெரியதோ அந்த விக்ரமனும் நான் தான் என்பதே இங்கு தத்துவம். இடது கரத்தில் சக்கரம், வலது கரத்தில் சங்கு, திருமார்பில் ஸ்ரீவத்ஸம், கண்டத்தில் கௌஸ்துபம், காதுகளில் குண்டலம் ஏந்தி பிரகலாதன், மகாபலி, விஷ்வக்சேனர், ஸ்ரீதேவி பூதேவியுடன் இங்கு எழுந்தருளியுள்ள திருமாலை தரிசனம் செய்ய தினம் பக்தர்கள் பலர் வருகின்றனர்.

உற்சவராக ஆயன், ஆயனார், கோவாலன், கோபாலன் என்ற திருநாமங்களோடு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் கிருஷ்ண பரமாத்மா. முதன் முதலாக ஆழ்வார்களால் பாடப்பட்ட திவ்ய தேசம் இதுதான். அன்பே தகளியா என்று பூதத்தாழ்வாரும், திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் என்று பேயாழ்வாரும், வையம் தகளியா என்று பொய்கையாழ்வாரும் பாடியுள்ளனர்.

ஒருமுறை இந்த ஆழ்வார்கள் மூவரும் திருக்கோவிலூரை அடைந்தனர். மிருகண்டு முனிவர் ஆஸ்ரமத்தை அடைந்த பொய்கையாழ்வார், தனக்கு தங்க இடமுண்டா என்று கேட்டுள்ளார். ஒருவர் படுக்கும் அளவுக்கு இடமுண்டு என்று கூறி உள்ளே சென்றுவிட்டார் முனிவர். அடுத்ததாக பூதத்தாழ்வார் வந்து தங்குவதற்கு இடம் கேட்க, பொய்கையாழ்வார். இருவர் அமரும் அளவுக்கு இடமுண்டு என்று கூறி அவரை சேர்த்துக் கொண்டார். மூன்றாவதாக பேயாழ்வார் வந்து இடம் கேட்க, மூவர் நிற்கலாம் என்று கூறி அவரையும் சேர்த்துக் கொண்டனர். நான்காவதாக ஒருவர் வந்து இடம் கேட்க, மூவரும் செய்வதறியாது விழித்தபோது, வந்திருந்த நான்காமவர் தனது விஸ்வரூபத்தைக் காட்டியதும் வந்திருப்பது பெருமாள் என்பதை உணர்ந்தனர்.

அசுர குரு சுக்கிராச்சாரியாருக்கு இங்கு உருவம் இருக்கிறது. நாலாயிர திவ்ய பிரபந்தம் முதன்முதலில் இங்குதான் பாடப்பட்டது என்பது மிக குறிப்பிடத்தக்க சிறப்பு. ஜீவாத்மாக்களை கடைத்தேற்றும் முக்தித் தலமாக இத்தலம் விளங்குகிறது.

திருவிழாக்கள்

வைகுண்ட ஏகாதசி உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படும்.

ஆணவம் நீங்க, வேண்டியது அனைத்தும் நிறைவேற இத்தல பெருமாள் அருள்பாலிப்பார்.

அமைவிடம்: திருவண்ணாமலையில் இருந்து 38 கிமீ தூரத்திலும், விழுப்புரத்தில் இருந்து 38 கிமீ தூரத்திலும் உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x