Published : 12 Oct 2022 06:11 AM
Last Updated : 12 Oct 2022 06:11 AM

108 வைணவ திவ்ய தேச உலா - 25 | தலைச்சங்காடு நாண்மதியப் பெருமாள் கோயில்

தலைச்சங்காடு நாண்மதியப் பெருமாள் கோயில்

முனைவர் கே.சுந்தரராமன்

108 வைணவ திவ்ய தேசங்களில் மயிலாடுதுறை மாவட்டம் தலைச்சங்காடு நாண்மதியப் பெருமாள் கோயில் 25-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. மயிலாடுதுறை – தரங்கம்பாடி சாலையில் மயிலாடுதுறையில் இருந்து 18 கிமீ தொலைவில் உள்ள இக்கோயிலை திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் 2 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்துள்ளார்.

கண் ஆர் கண்ணபுரம் கடிகை கடிமகிழும்
தண் ஆர் தாமரை சூழ் தலைச்சங்க மேல்திசையுள்
விண்ணோர் நான் மதியை விரிகின்ற வெம் சுடரை
கண் ஆரக் கண்டு கொண்டு கழிக்கின்றது இங்கு என்று கொலோ


இக்கோயிலுக்கு அருகில் திருநாங்கூர், திருவாலி, திருநகரி, திருவெண்காடு, பல்லவனீஸ்வரம், கீழப் பெரும்பள்ளம், மேலப் பெரும்பள்ளம், திருக்கடையூர் போன்ற தலங்கள் அமைந்துள்ளன.


மூலவர்: நாண்மதியப் பெருமாள்

உற்சவர்: வெண்சுடர்ப் பெருமாள்

தாயார்: தலைச்சங்க நாச்சியார் (செங்கமலவல்லி – சவுந்தரவல்லி)

தீர்த்தம்: சந்திர புஷ்கரிணி

விமானம்: சந்திர விமானம்

தல விருட்சம்: புரசு


தல வரலாறு

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, அதில் இருந்து, அமுதம், மகாலட்சுமி, சந்திரன் முதலானோர் தோன்றினர். இதில் சந்திரன் முதலில் தோன்றியதால், திருமகளுக்கு அவர் அண்ணன் ஆகிறார், நவக்கிரகத்தில் சூரியனுக்கு அடுத்தபடியாக முக்கிய இடத்தில் சந்திரன் இருக்கிறார். அத்திரி முனிவருக்கும் அனுசுயா தேவிக்கும் பிறந்தவர்களில் சோமன் என்பவரே சந்திரன் என்று அழைக்கப்படுகிறார் என்று புராணங்களில் கூறப்படுகிறது.

புறத் தோற்றத்தில் சந்திரன் மிகவும் அழகானவர். தேவகுருவிடம் முறையாகக் கல்வி பயின்றவர், கலைகள் பலவற்றில் தேர்ச்சி பெற்றவர்.

ஒரு சமயம் சந்திரன் தனக்கு அனைத்திலும் வெற்றி கிடைக்க வேண்டும் என்று திருமாலை வணங்கி ‘ராஜசூய யாகம்’ நடத்தினார். இதில் முனிவர்கள் பலர் வந்திருந்தனர். தேவகுருவின் மனைவி தாரை வந்திருந்தார். தாரையும் சந்திரனும் சந்தித்துக் கொண்டதில் இருவருக்கும் நட்பு ஏற்பட்டது. இதுகுறித்து கவலையடைந்த தேவகுரு, திருமாலிடம் முறையிட்டார். தனது சீடன் இவ்வாறு செய்ததில் கோபம் கொண்ட தேவகுரு, சந்திரன் கொடிய நோயை அடையும்படி சபித்தார்,

இந்நிலையில் சந்திரனுக்கும் தாரைக்கும் புதன் பிறந்தார். திருமால் கூறியபடி சந்திரன் தாரையை குருவிடம் ஒப்படைத்தார். தந்தையின் மீது வெறுப்பு கொண்ட புதன், இமயமலைக்குச் சென்று கடும்தவம் புரிந்து கிரகங்களில் ஒன்றானார்.

தக்கன் என்பவருக்கு 27 மகள்கள். அவர்கள் அனைவரும் சந்திரனை திருமணம் செய்து கொண்டனர். அனைவரிடத்தும் சமமாக அன்பு செலுத்துவதாக சந்திரன் உறுதி அளித்த நிலையில், ரோகிணியிடத்தில் மட்டும் அதிக அன்பு செலுத்தினார். இதனால் மற்றவர்களுக்கு கோபம் வந்து, தந்தையிடம் முறையிட்டனர்.

சினமடைந்த தக்கன், சந்திரனின் அழகும் ஒளியும் தினம் தினம் குறையும்படி சபித்தார். இதன் காரணமாக முழு சந்திரன் தினம் தினம் தேயத் தொடங்கினார். தேவகுருவின் சாபம், தக்கனின் சாபம் – இரண்டு சாபங்களால் தவித்த சந்திரன், இவற்றில் இருந்து மீள்வதற்கு, திருமாலிடம் யோசனை கேட்டார்,

உடனே திருமால், ஸ்ரீரங்கம், திருஇந்தளூர், தலைச்சங்காடு ஆகிய தலங்களுக்குச் சென்று வழிபடும்படி சந்திரனுக்கு அறிவுறுத்தினார். சந்திரனும் ஸ்ரீரங்கம், திருஇந்தளூர் தலங்களுக்குச் சென்றுவிட்டு நிறைவாக இத்தலம் வந்தடைந்தார். தீர்த்தத்தில் நீராடி சுவாமி தரிசனம் செய்ததும், சாபம் நீங்கப்பெற்றார் சந்திரன். பெருமாளும் சந்திரனுக்கு காட்சி கொடுத்துவிட்டு, அவரை தலையில் சூடிக் கொண்டார்.

கோயில் அமைப்பும், சிறப்பும்

சந்திர விமானத்தின் கீழ் மூலவர் நாண்மதியப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கியபடி சேவை சாதிக்கிறார். அழகிய சங்கை ஏந்தியபடியால் திருமங்கையாழ்வார் இத்தலத்தை தலைச்சங்க நாண்மதியம் என்று அழைத்தார்.

இத்தல பெருமாள், சிவபெருமானைப் போல தலையில் பிறைச் சந்திரனை தலையில் சூடி அருள்பாலிக்கிறார். சந்திரன் தனது சாபம் நீங்கும் பொருட்டு இவ்வூர் தீர்த்தத்தில் நீராடி சுவாமி தரிசனம் செய்துள்ளார். சந்திர தோஷம் உள்ளவர்கள், இத்தலத்தில் வழிபாடு செய்தால் தோஷம் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.

இக்கோயிலில் சில காலம் வழிபாடு இன்றி இருந்த நிலையில் வடுக நம்பி சீரமைக்க முயன்றார். பின்னர் அவரது சீடர் சுந்தர ராமானுஜ தாசர் திருப்பணிகள் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

தலைச்சங்காடு பெயர்க் காரணம்.

தலை + சங்கு + காடு – என பிரித்து பார்த்தால் பழந்தமிழர்கள் இயற்கைத் தாவரங்களின் பெயரிலேயே நிலத்துக்கும் அதைச் சார்ந்த ஊருக்கும் பெயர் வைத்துள்ளனர் என்பதை உணர முடியும். சங்குச் செடிகள் மிகுதியாகப் பயிரிடப்பட்டு, அதன் பூக்கள் இவ்வூர் கோயில்களுக்கும், சுற்று வட்டாரங்களில் உள்ள கோயில்களுக்கும் அனுப்பப்பட்டன.

இந்தப் பூந்தோட்டங்களை ஒட்டியே தலைச்சங்காடு என்ற பெயர் உருவாகியிருக்க வேண்டும்.

இவ்வுலக உயிர்களைக் காப்பதற்காக சங்காரண்யேஸ்வரரை வழிபாடு செய்து தனது ஆயுதமாக சங்கைப் பெற்றுள்ளார் திருமால். அதனால் இவ்வூரில் உள்ள சிவபெருமான் கோயிலில் திருமாலுக்கு தனி சந்நிதி உண்டு. திருமாலுக்கு பாஞ்சசன்யம் என்ற சங்கை அருளிய காரணத்தால் சிவபெருமான், சங்காரண்யேஸ்வரர், சங்கவனநாதர் என்று அழைக்கப்படுகிறார்.

திருவிழாக்கள்

வைகுண்ட ஏகாதசி வைபவம், நவராத்திரி தினங்களில் சுவாமி, தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், ஆராதனைகள் நடைபெறும்.தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x