Published : 09 Oct 2022 05:41 AM
Last Updated : 09 Oct 2022 05:41 AM
இஸ்லாம் என்றால் அமைதி, சாந்தி என்று பொருள்படும். இஸ் லாமிய தத்துவம் என்பது அமைதிக்கான தத்துவமாகும். பல சமயத்தவர்களும் வசிக்கும் சமுதாயத்தில் மக்கள் அனைவரும் சமய நல்லிணக்கத்துடன் வாழ இஸ்லாம், ‘‘எங்கள் காரியங்கள் எங்களுக்கும், உங்களுடைய காரியங்கள் உங்களுக்கும் சிறந்தவை. உங்கள் மீது சாந்தி உண்டாவதாக’’ என்று வழிகாட்டுகிறது.
‘‘அவரவர் அவரவர்களுடைய வழியில் செல்லலாம். ஒருவர் மற்றவரை மதிக்க வேண்டும்’’ என்பதே இதன் அடிப்படைக் கருத்தாகும். இஸ்லாம் சமயத்தைப் போதித்த முஹம்மது நபி (ஸல்)
அவர்கள், அகிலங்களுக்கெல்லாம் அருட்கொடையாகவும், அனைத்து மக்களுக்கும் அழகிய முன்மாதிரியாகவும் திகழ்ந்தவர்.
இறுதித் தூதர்
அவரது வாழ்க்கைப் பயணத்தில் பிற சமயத்தவர்கள் முக்கியமான கட்டங்களில் பங்களிப்பு செய்துள்ளனர். முஹம்மது நபி அவர்கள் மக்காவில் வாழும்பொழுது ஹிரா குகையில் இறைதியானத்தில் ஈடுபட்டிருந்த பொழுது, அவரிடம் முதன்முதலாக ‘ஜிப்ரயீல்’ என்ற வானவர் இறைசெய்தியைக் கொண்டுவந்தார். அந்நிகழ்வினால், உடல் வேர்த்தவராக, நடுங்கியவராக இருந்த முஹம்மதுவை இறுதித்தூதர் என்று உறுதிப்படுத்தியவர் வராக்கா என்ற கிறித்துவர்.
முஹம்மது நபி அவர்களும் அவரது தோழர் அபுபக்கரும் மக்காவை விட்டு மதீனாவுக்கு ஹிஜ்ரத் என்ற பயணம் செய்தபோது, அவர்களை எதிரிகள் கண்ணில் படாமல், ஆபத்தின்றி அழைத்துச் சென்றவர் இப்னு அர்ஹம் தைலமி என்ற சிலை வணக்கக்காரர். முஹம்மது நபி அவர்கள் மதீனாவை நெருங்கும்போது, தூரத்தில் வந்த அவரை அடையாளம் கண்டு, தன் தலைப்பாகையைக் கொடியாகப் பிடித்து அசைத்து அவரது வருகையை மதீனா வாசிகளுக்கு மகிழ்வுடன் தெரிவித்தவர் புரைதா பின் ஹஸீப் என்ற யூதர்.
நபி அவர்களின் ஒப்பந்தம்
இவ்வாறு முஹம்மது அவர்களின் ஆரம்ப காலத்தில் பிற சமயத்தவர்கள் அவருக்கு நேயத்துடன் உதவி செய்த நிகழ்வுகளை வரலாறு பதிவு செய்துள்ளது. முஹம்மது நபி அவர்கள் மக்காவில் இருந்து மதீனா சென்று குடியேறினார். அப்போது பல்சமயச் சூழல் நிலவிய மதீனாவில் வசித்து வந்த யூதர்களுடன் மத விஷயங்களில் நடந்துகொள்ள வேண்டிய முறைமை பற்றி ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார்.
எல்லோருக்கும் சம உரிமை
அந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம், ‘‘மதினா நகர மக்கள் எந்தவிதமான தடையோ, தொந்தரவோ இல்லாமல் அவரவர்கள், அவரவர்களுடைய சமய முறைப்படி வாழ்ந்து வர உரிமையுண்டு. ஒருவருடைய சமய உரிமையில் மற்றவர் தலையிடுவது கூடாது. ஒவ்வொரு சமயமும் தனித்து இயங்கும். அனைவரும் சம உரிமையுடன் நடத்தப்படுவர். ஒரு சமயத்தினரின் ஆலயத்தை மற்ற சமயத்தினர் பாதுகாக்க வேண்டும்’’ என்பதாகும்.
முஹம்மது நபிகளார் யூதர்களுடன் செய்து கொண்ட இந்த ஒப்பந்தம் சமய நல்லிணக்கத்துக்குச் சிறந்த சான்றாகத் திகழ்கிறது. ஹிஜ்ரி 9-ஆம் ஆண்டில், ஏமன் நாட்டுக்கு அருகில் இருந்த நஜ்ரான்
நகரில் இருந்த கிறித்துவ அறிஞர்கள், முஹம்மது அவர்களின் தூதுத்துவத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவரோடு உரையாட மதீனா நகருக்கு வந்தார்கள். தொலைதூரத்தில் இருந்து வந்த கிறித்துவ பாதிரிமார்களை முஹம்மது நபிகளார் மதீனா நகரப் பள்ளிவாசலில் இருந்து வரவேற்று உபசரித்தரர். முஹம்மது அவர்களின் உபசரணையை ஏற்ற கிறித்துவ பாதிரிமார்கள், தாங்கள் வழக்கமாக மேற்கொள்ளும் இறை வணக்கத்தை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.
உடனே, முஹம்மது நபி அவர்கள், கிறித்துவர்கள் தங்கள் முறைப்படி வணக்க வழிபாடுகளை மதீனாப் பள்ளிவாசலில் நிறைவேற்றிக் கொள்ள அனுமதி அளித்ததுடன் அதற்குரிய வசதிகளையும் செய்து கொடுத்தார். இவ்வாறு மற்ற சமயத்தவரை மதிக்கும் பண்பாளராக முஹம்மது அவர்கள் திகழ்ந்தார்கள்.
மனிதனை மதிக்கும் மாண்பு
ஒரு சமயம் முஹம்மது நபிகளார் மதீனாவில், ஓரிடத்தில் தமது தோழர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது அவ்வழியாக யூதர் ஒருவரின் பிரேதம் சென்றது. மனிதனை மதிக்கும் மாண்புடையவரான மாநபி அவர்கள் அப்பிரேதத்துக்கு மரியாதை செலுத்தும் விதமாக எழுந்து நின்றார். இத்தகு சிறந்த செயல்களால் முஹம்மது நபி அவர்கள், சமய நல்லிணக்கம் போற்றும் சான் றோராகத் திகழ்ந்தார். அவர் வழியை நாமும் பின்பற்றுவோம்.
கட்டுரையாளர்:
மேனாள் தமிழ்த்துறைத்
தலைவர் & முதல்வர்
மு.சா.ச. வக்ஃப் வாரியக்
கல்லூரி, மதுரை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT