

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கடந்த 5-ம் தேதி சக்கர ஸ்நான நிகழ்ச்சியுடன் நிறைவுபெற்றது.
இந்நிலையில் புரட்டாசி மாதத்தில் சுவாமியை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் திருமலைக்கு திரண்டு வருகின்றனர். திருமலையில் நேற்று மாலை நிலவரப்படி சுமார் 5 கி.மீ. தொலைவு வரை பக்தர்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இவர்கள் சர்வ தரிசனத்தில் (இலவச தரிசனம்) சுவாமியை தரிசிக்க சுமார் 30 மணி நேரம் ஆகும் என தேவஸ்தானம் அறிவித்தது. அதாவது நேற்று மாலை சர்வதரிசன வரிசையில் நின்றால், இன்று இரவு சுவாமியை தரிசிக்கும் வாய்ப்பு கிட்டும்.
இந்நிலையில் புரட்டாசி சனிக்கிழமையில் சுவாமியை தரிசிப்பதற்காக பக்தர்கள் ஆயிரக்கணக்கில் திருமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் திருமலையில் தங்கும் அறைகள் கிடைக்காமல் பக்தர்கள் தவிக்கின்றனர். திருமலையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் பக்தர்கள் குளிரில் தவிக்கின்றனர்.
இதனிடையே காத்திருக்கும் பக்தர்களுக்கு உணவு, குடிநீர், பால், மோர், டீ, காபி போன்றவை வழங்கப்படுகின்றன.