

கோவை: ‘வேசுக்கோ, தீசுக்கோ’ முழக்கத்துடன், கோவை ராஜவீதியில் உள்ள ஸ்ரீ ராமலிங்க செளடாம்பிகை அம்மன் கோயிலை நோக்கி கத்தி போடும் திருவிழா (பராக்கத்தி) நேற்று நடந்தது.
கோவை நகர்மண்டபத்தில் உள்ள ராஜவீதியில் ஸ்ரீ ராமலிங்க செளடாம்பிகை அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ லட்சுமி கணபதி கோயில் ஆர்.எஸ்.புரம் ராமச்சந்திரா சாலையில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியன்று, செளடாம்பிகை அம்மனை அழைக்கும் விதமாக ஸ்ரீ லட்சுமி கணபதி கோயிலில் இருந்து ஸ்ரீ ராமலிங்க செளடாம்பிகை அம்மன் கோயிலை நோக்கி திருமஞ்சன தீர்த்த பாகு கலச கும்பம் பராக்கத்தி எனப்படும் கத்தி போடும் திருவிழா நடத்தப்படும்.
விஜயதசமி தினமான நேற்று தெலுங்கு பேசும் தேவாங்க செட்டியார் சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் பராக்கத்தி ஊர்வலத்தை தொடங்கினர். தங்களின் இரு கைகளிலும் பட்டை தீட்டப்பட்ட கத்தியை வைத்துக் கொண்டு, தோள் பட்டைக்கு அருகே மாறி மாறி வெட்டிக் கொண்டனர்.வெட்டும் போது, ‘வேசுக்கோ, தீசுக்கோ’ (போட்டுக்கோ, வாங்கிக்கோ) என்ற முழக்கங்களை எழுப்பினர். காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்த பகுதிகளில் திருமஞ்சனப் பொடியை வைத்தபடி தொடர்ந்து வெட்டிக் கொண்டு வந்தனர்.
இதுகுறித்து, ஸ்ரீ ராமலிங்க செளடாம்பிகை அம்மன் கோயிலின் தர்மகர்த்தா மோகன்குமார் ‘இந்து தமிழ்திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘ஒரு ஊரில் வசிக்கும் அம்மனை, அங்கிருந்து
300 கி.மீ. தொலைவில் உள்ள மற்றொரு ஊரைச் சேர்ந்த மக்கள் தங்கள் ஊருக்கு வருமாறு அழைக்கின்றனர். வருவதற்கு சம்மதம் தெரிவித்த அம்மன், நீங்கள் முன்னால் செல்லுங்கள், நான் பின்னால் நடந்து வருகிறேன், எக்காரணம் கொண்டும் யாரும் திரும்பிப் பார்க்கக்கூடாது என்ற நிபந்தனையை ஊர் மக்களிடம் விதித்தார். அதன்படி ஊர்மக்கள் முன்னே செல்ல அம்மன் பின்னால் நடந்து வந்தார். அம்மனின் கொலுசு சத்தத்தை ஊர்மக்கள் கேட்டுக் கொண்டே முன்னே சென்றனர். ஒரு இடத்தில் ஆற்றோரமாக நடக்கும்போது, அம்மன் மணலில் நடந்து வந்ததால் கொலுசு சத்தம் கேட்கவில்லை. இதையடுத்து ஊர்மக்கள் திரும்பிப் பார்த்தனர். இதனால் கோபமடைந்த அம்மன் அங்கேயிருந்த மரத்தில் தங்கிவிட்டார். அவரது கோபத்தை தணித்து மீண்டும் தங்களது ஊருக்கு மக்கள் அழைத்துச் செல்வதற்காக கத்தியால் வெட்டியபடி பராக்கத்தி ஊர்வலம், ‘வருந்தி அழைப்பு’ என்ற பெயரில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது என்பது ஐதீகம்.
அதன்படி, ஸ்ரீ ராமலிங்க செளடாம்பிகை அம்மன் கோயில் உள்ள சேலம், வேலூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் பராக்கத்தி முறை விஜயதசமியில் நடத்தப்படும்’’ என்றார்.