திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 7 மலை பாதைகள்

திருமலை கோயில். (கோப்புபடம்)
திருமலை கோயில். (கோப்புபடம்)
Updated on
2 min read

திருமலை: திருப்பதி ஏழுமலையான், அஞ்சனாத்ரி, கருடாத்ரி, வெங்கடாத்ரி, நாராயணாத்ரி, ரிஷபாத்ரி, நீலாத்ரி, சேஷாத்ரி ஆகிய 7 மலைகள் மீது குடிகொண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். பல ஆண்டுகளுக்கு முன்னர் திருமலைக்கு சென்று தரிசனம் செய்ய 7 மலைப்பாதைகளை பக்தர்கள் பயன்படுத்தியுள்ளனர். அவற்றில் வரலாற்று சிறப்புகளும் உள்ளன.

முதலாவது அலிபிரி பாதை: ஸ்ரீகிருஷ்ண தேவராயரின் மைத்துனர் மட்டி குமார அனந்தராயுலு என்பவர்தான் அலிபிரி மலைவழிப் பாதையை ஏற்படுத்தி, பயன்படுத்தியதாக கல்வெட்டுகள் மூலம் தெரிய வந்துள்ளது. கி.பி 1625-ம் ஆண்டு வாக்கில் தமிழகத்தில் இருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் இந்தப் பாதை உருவாக்கபட்டுள்ளது. 3,650 படிகளும், 8 கி.மீ. தொலைவும் கொண்டது இந்த மலைப்பாதை.

ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதை: இவ்வழியாகத்தான் மகா விஷ்ணுவே திருமலைக்கு மலையேறிச் சென்றதாக புராணங்கள் கூறுகின்றன. இதுவே திருப்பதி - திருமலை இடையே இருந்த முதல் வழித்தடம். அரசர் சாளுவ நரசிம்ம ராயுலு இந்த வழியில் பயணம் செய்து திருமலையை அடைந்தார். 2,100 படிகள் மட்டுமே உள்ள இப்பாதையில், ஒரு மணி நேரத்திலேயே பக்தர்கள் திருமலையை சென்றடையலாம்.

அன்னமாச்சாரியார் பாதை: இது, கடப்பா மாவட்டம், தாள்ள பாக்கம் பகுதியில் இருந்து குக்கல தொட்டி வழியாக திருமலையில் உள்ள பார்வேட்டி மண்டபம் வரை அமைந்துள்ளது. இவ்வழியாகத்தான் அன்னமாச்சாரியார் திருமலையை அடைந்ததாக கூறப்படுகிறது. இதனை விரைவில் பக்தர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதாக அறங்காவலர்குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி அறிவித்துள்ளார்.

தும்புரு தீர்த்தம் பாதை: திருமலையில் உள்ள தும்புரு தீர்த்தத்தில் இருந்து, குக்கல தொட்டி வழியாக கடப்பா மாவட்டம் சோமேஸ்வரர் கோயில் வரை உள்ளது. ஆனால் இந்த வழித்தடம் இருப்பது பலருக்கு தெரியாது.

தரிகொண்ட வெங்கமாம்பாள் பாதை: ஏழுமலையானின் தீவிர பக்தையான தரிகொண்ட வெங்கமாம்பாள் இந்தப் பாதை வழியாகதான் திருமலையை அடைந்துள்ளார். இப்பாதை திருப்பதியை அடுத்துள்ள பாகரா பேட்டை வனப் பகுதியிலிருந்து தலக்கோனா வழியாக மொகலிபெண்டா, யுத்தகள்ளா, தீர்த்தம் குண்டா வழியாக திருமலையில் உள்ள வேதபாட சாலையை வந்தடையும். மிகவும் அடர்ந்த வனப் பகுதி வழியே இப்பாதை செல்வதால் ஒரு குழுவாக இப்பாதையில் செல்லலாம்.

பாலகொண்டா பாதை: இது யுத்தகள்ளா தீர்த்தத்தில் இருந்து பால கொண்டாவரை நீண்டுள்ளது. கண்டி கோட்டை அரசர் ஏற்பாடு செய்த வழித்தடமாக இது கூறப்படுகிறது. ஆனால் இதை தற்போது யாரும் பயன்படுத்துவது இல்லை.

தொண்டமான் பாதை: இது தொண்டமான் சக்கரவர்த்தி காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட வழித்தடமாக கூறப்படுகிறது. திருப்பதி அருகே உள்ள கரகம்பாடியில் இருந்து அவ்வாச்சாரி கோனா வழியாக திருமலையை சென்றடையலாம். ஆங்கிலேயர் காலத்தில் பலர் இவ்வழியாக திருமலைக்கு படை எடுத்துச் சென்றுள்ளதாக கூறுகின்றனர். பக்தர்கள் ஏறிச்செல்ல மிகவும் சிரமமான பாதை என்பதால் காலப்போக்கில் இந்தப் பாதையும் காணாமல் போனது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in