

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில்பிரம்மோற்சவ விழாவின் 6-ம்நாளான நேற்று காலை, ஹனுமன்வாகனத்தில், கோதண்டராமர் அலங்காரத்தில் உற்சவரான மலையப்பர் எழுந்தருளினார்.
5-ம் நாள் இரவு கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பர், மறுநாள் காலை ஹனுமன்வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். சுதர்சன சாலிக்கிராமஹாரம் அணிந்து கம்பீரமாகமாட வீதிகளில் உலா வந்த மலையப்பரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்.
இதில் தேவஸ்தான அறங்காவலர் ஒய்.வி.சுப்பாரெட்டி, தலைமை நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி உட்பட பலரும் பங்கேற்றனர்.
வாகன சேவையின் முன் காளை, குதிரை, யானை ஆகிய பரிவட்டங்கள் செல்ல, ஜீயர் சுவாமிகள் குழுவினர் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை பாடியபடி செல்ல, இவர்களுக்கு பின்னால், பல மாநில நடன கலைஞர்கள் நடனமாடியபடி சென்றனர்.
ஹனுமன் வாகன சேவை
ஹனுமன் வாகன சேவை நடந்து முடிந்த பின்னர், மாலை 4 மணியளவில் தங்கத் தேரோட்டம் தொடங்கியது. இதில், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் மலையப்பர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 4 மாட வீதிகளில் பவனி வந்த தங்க தேரை, பெண்கள் வடம் பிடித்து இழுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
தங்கத் தேரோட்டம் நடந்து முடிந்த பின்னர், நேற்றிரவு யானை வாகனத்தில் மலையப்பர் அருள் பாலித்தார். இரவு 7 மணி முதல் 9 மணி வரை 4 மாட வீதிகளில் கஜ வாகனத்தில் பவனி வந்த மலையப்பரை காண ஏராளமான பக்தர்கள் மாட வீதிகளில் திரண்டிருந்தனர்.
பிரம்மோற்சவத்தில் 7-ம் நாளான இன்று காலை சூரிய பிரபை, இரவு சந்திர பிரபை வாகனங்களில் உற்சவ மூர்த்தியான மலையப்பர் காட்சியளிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.